search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டத்தில் கன மழை கொட்டியது: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் கன மழை கொட்டியது: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    • மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியது.
    • அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என அகில இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலையிலேயே மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

    சிறு தூறலாக தொடங்கிய மழை, நேரம் செல்லச் செல்ல பலமாக பெய்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி, கொட்டாரம், தக்கலை, இரணியல், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. பின்னர் அது மழையாக மாறியது. இந்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியது.

    காலையிலேயே மழை பெய்ததால், வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஒரு சிலர் குடை பிடித்தபடி சென்ற போதிலும், மழையின் வேகம் அதிகமாக இருந்ததால் நனைந்த நிலையிலேயே சென்றனர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று இரவும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாலமோரில் 51.4 மில்லி மீட்டரும், தக்கலையில் 42 மில்லி மீட்டரும், கோழிப்போர் விளையில் 23.2 மில்லி மீட்டர் மழையும், நாகர்கோவில் 10.2, ஆணைக்கிடங்கு 12 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.41 அடியாக உள்ளது. அணைக்கு 486 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால், மதகுகள் வழியாக 538 கன அடி தண்ணீரும், உபரியாக 532 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை தாமிர பரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. இதனால் இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் மேற்பகுதியில் படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

    இதற்கிடையில் மழை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், ஆற்றங்கரையோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×