என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
    • வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. இதமான குளிர் காற்றும் வீசுவதால் மாவட்டம் முழுவதும் ரம்யமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவும் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குளிர் காற்று வீசி வருகிறது. தக்கலை, குளச்சல், களியல், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, கொட்டாரம், மயிலாடி உள்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    நேற்று 1141 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று பேச்சிபாறையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. 516 கன அடி உபரி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் கோதையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் இன்று 2-வது நாளாக அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டு உள்ளது.

    மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சேதமடைந்தது. 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.73 அடியாக உள்ளது. அணைக்கு 673 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும் 516 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.87 அடியாக உள்ளது. அணைக்கு 667 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சுவாமியார் மடத்தை அடுத்த புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மனோஜ் (வயது 34), என்ஜினீயர்.

    இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். புலிப்பணத்தில் உள்ள வீட்டில் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி சந்திரகலாவும் வசித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மனோஜ், சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து தந்தையை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டி இருந்ததால், சந்திரகலாவும் சென்று விட்டார்.

    இதனால் அவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதனை பார்த்தவர்கள் மனோஜுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த 35 பவுன் நகைகைள், ரூ.1½ லட்சம் மற்றும் ஒரு வெள்ளி குத்துவிளக்கு கொள்ளை போயிருப்பதாக தக்கலை போலீசில் மனோஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை.
    • வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    மேலும் குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த தால் அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பாலமோரில் அதிகபட்சமாக 28.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.76 அடியாக இருந்தது.

    அணைக்கு 475 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 481 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.22 அடியாக உள்ளது. அணைக்கு 401 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.35 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 47.82 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.20 அடியாக உள்ளது.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் என்ற பெயரிலான அடையாள அட்டை போன்றவை கைப்பற்றப்பட்டது.
    • சேகரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் காட்டுவிளையை சேர்ந்தவர் சேகர் (வயது 54). 1993-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்த இவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. இவரது நடத்தை சரியில்லாததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர பணி ஓய்வு கொடுக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

    அதன்பிறகு சேகர், போலீஸ் உயர்அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது, பொதுமக்களை ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், அதிரடியாக சேகர் வீட்டுக்குச் சென்று விசாரணையில் இறங்கினர். அங்கு சோதனையும் நடத்தினர்.

    அப்போது வீட்டில் உதவி ஆய்வாளர் சீருடையில் இருக்கும் போட்டோ, நெல்லை போலீஸ்காரர் சுரேஷ் என்ற பெயரிலான அடையாள அட்டை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் என்ற பெயரிலான அடையாள அட்டை போன்றவை கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சேகரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனை.

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற தொலை தொடர்பு ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர், டிஜிஎம் பழனி முருகன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனைகள் மேற்கொண்டதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    • பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது

    திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.


    திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் திரு. சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு. கே.டி.உதயம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் குமார், திரு. பிரின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. லாரன்ஸ், திரு யூசுஃப் கான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு டைசன் ,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி வதன நிஷா, மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.

    பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

    • தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாகர்கோவிலில் வருகின்ற 15 ஆம் தேதி மிக சிறப்பாக நடைபெற இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கன்னியகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



    • செல்வப்பெருந்தகையை குற்றம்சாட்டி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.
    • செல்வப்பெருந்தகை மீது சி.பி.ஐ. வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியல் போட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும்.

    செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.


    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும். அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செல்வப்பெருந்தகை மீது தொடர்ந்து அநாகரீக முறையில் பேசிவரும் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.-வினரையும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


    • விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.

    அந்த வகையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற விஜய் வசந்த் இணைந்து நன்றியை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்வபெருந்தகை தலைமையில் ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது.


    அது தொடர்பான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் செல்வம் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    • ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
    • போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.

    சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    ×