என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, பள்ளி தாளாளர் ஜோசப்சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் வரவேற்றார். இதில் தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நில நடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
    • தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022வரை காலியாக உள்ள திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கழுமலம் மற்றும் வடமருதூர், உளுந்தூர் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நெய்வனை ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் அ.பாண்டலம் ஊராட்சி மன்ற வார்டு எண்-6, நெடுமானூர் ஊராட்சி மன்ற வார்டு எண்-7, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற வார்டு எண்-3, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் எல்லைகிராமம் ஊராட்சி மன்ற வார்டு எண்-1 மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் நிறைமதி ஊராட்சி மன்ற வார்டு எண்-4 ஆகிய 5 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் காலிப்பதவி யிடங்களுக்கான தற்செயல் தேர்தல்கள் நடத்திடும் பொருட்டு தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணையத்தால் திட்ட அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.

    அதன்படி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் வருகின்ற 27 - ந் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனு பரிசீலனை 28- ந் தேதியும், வேட்பு மனுக்கள் திரும்பப் பெறும் நாள் 30- ந் தேதி ஆகும். அடுத்த மாதம் ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 12- ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    எனவே மேற்கண்ட பகுதியில் வருகின்ற ஜூலை 14- ந் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட 8 கிராம ஊராட்சிகள் முழுவதும் 18.06.2022 முதல் 14.07.2022 வரை நடைமுறையில் இருக்கும், மேற்படி பகுதிகளில் பொது இடங்களில் வேட்பாளர்கள் பெயரிலோ, கட்சிகளின் பெயரிலோ மற்றும் அதன் தொடர்பான அனைத்து விதமான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்வித விளம்பரத்தட்டிகளோ விளம்பரப் பட்டிகைகளோ சுவரொட்டிகளோ, விளம்பர படங்களோ இருப்பின் அவற்றை நீக்கவும், அரசுக் கட்டிடம், தனியார் கட்டிட சுவர்களில் வேட்பாளர்கள் பெயரோ, கட்சிகளின் பெயரோ அல்லது அதன் தொடர்பான வாசகங்கள் வண்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருந்தால், அவைகள் அனைத்தையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுவிதமான வண்ணப்பூச்சு களால் மறைத்து உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.மேற்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாரை பார்த்ததும், டிரைவர் டிராக்டரை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வடபாலப்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தெத்துகாடு ஓடை அருகே வந்து கொண்டிருந்த டிராக்டரை வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும், டிரைவர் டிராக்டரை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

    இதையடுத்து போலீசார், அந்த டிராக்டரை பார்த்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. அதனை தொடர்ந்து அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, மணல் கடத்தல் தொடர்பாக வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்,
    • மொத்தம் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி யன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த சொறிகண்ணன் (வயது 67) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் வி்ற்ற சின்னபிள்ளை (40), புதுப்பாலப்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற பூபதி(51) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை கண்டித்து, கடைவீதி மும்முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். பாஸ்கர், பகத்சிங் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏழுமலை, தலைவர் பழனி, துணை செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.

    • கள்ளக்குறிச்சி அருகே வண்டு கடித்து விவசாயி பலியானார்.
    • கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 71) விவசாயி, இவர் நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்தில் உள்ள வாழைத்தாரை வெட்டினார். அப்போது அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட கரு விஷ வண்டுகள் அவரை கடித்த. இதில் வலியால் துடித்த துரைக்கண்ணு மயக்கமடைந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பகண்டைகூட்ரோடு அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மையனுாரில் சாராயம் விற்ற பிச்சை(39), அதேபோல் தொண்டனந்தலில் சாராயம் விற்ற ராஜசேகர் மனைவி செல்வி(30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • தியாகதுருகம் அருகே முத்துமாரி அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
    • கடந்த 3 -ந் தேதி தொடங்கி தினமும் பாரதம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 3 -ந் தேதி தொடங்கி தினமும் பாரதம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    நேற்று காலை காளி கோட்டை இடித்தல், பொங்கல் வைத்தல், அக்னி மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்டார்.

    தொடர்ந்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி, பெருமாள் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மலையரசன் எத்திராஜ் ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

    • விளையாட்டுப்போட்டிகளில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் : கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.
    • போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கான 44-வது பைட் செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கற்பித்தலோடு, மாணவர்களின் அறிவுத்திறனையும் மற்றும் தனித் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். கல்வி கற்பதோடு, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, அறிவுத் திறனையும், உடற்வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போட்டியில் பங்கேற்றுள்ள 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்குஎனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, மாவட்ட உடற்கல்வி இயக்குநர் பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழக தலைவர் பழனி, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆழ்வார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • திருநாவலூர் அருகே கேரள வாலிபர் மயங்கி விழுந்து பலியானார்.
    • பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாலதி சதன் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்மேன் (வயது 32). இவர் சம்பவத்தன்று சென்னை கல்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் மிதுன் வீட்டுக்குச் சென்று விட்டு பின்னர் அங்கிருந்து ஒரு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் கேரளாவுக்கு சென்றார்.

    அப்போது அந்த பஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் ஆஞ்சநேயர் கோவில் என்ற இடத்தில் சென்றபோது டயர் வெடித்து சாலையோரம் நிறுத்தப்பட்டு சரி செய்யும் பணியில் டிரைவர் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அதன் பின்னர் ரஞ்சித்மேன்அவரும் இறங்கி நின்ற போது திடீரென மயங்கி விழுந்து மயக்க நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்த பயணிகள் அங்கிருந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு வருகிறார்.

    • தியாகதுருகம் அருகே தேசிய பேரிடர் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் பாலு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர்மீட்பு படை உதவி ஆய்வாளர் சஞ்சீவதேஸ்வால் தலைமை யில் நிலநடுக்கம் ஏற்படும் போதும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மற்றும் பாது காப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், ரூபா தேவி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் கோலத்தி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, சூரிய நாராயண பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கடம் கோவிலைச் சுற்றி வந்து கோலத்தி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. மேலும் மூலவர் கோலத்தி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், கருப்பையா, சன்னியாசியப்பர் ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×