என் மலர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணை புதுச்சேரி ராஜீவ் காந்தி நகர் பகுதி சாலையில் இன்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மட்டும் துண்டாக கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் கொலையுண்டது தாம்பரத்தை அடுத்த கடப்பேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கமல் என்கிற கமலக்கண்ணன் என்பது தெரிந்தது.
அவரை மர்ம நபர்கள் கடத்தி கழுத்தை அறுத்து கொன்று இருப்பது தெரியவந்தது.அவரது உடல் எங்கு வீசப்பட்டது என்பது தெரியவில்லை. அதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா? அல்லது பெண் தகராறு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை மோப்ப நாய் ஓடி நின்றுவிட்டது. எனவே அங்கிருந்து வாகனத்தில் கொலைக் கும்பல் தப்பி சென்று உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் மாதா கோவில் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக செல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதி மத்தியில் செல்போன் டவர் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு புற்று நோய், கர்ப்பிணி பெண்களுக்கு சிசு பாதிப்பு, ஆண்மை குறைவு போன்றவை ஏற்படுவதோடு விலங்கு மற்றும் பறவைகள் அழிந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் டவர் அமைக்கும் இடத்திற்கு அருகே பள்ளிக் கூடம், அங்கன்வாடி உள்ளதால் இந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்ககூடாது என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வட்டாட்சியர் மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர்.
மேலும் செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தில் பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு வளர்புறம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செல்போன் டவர் அமைக்ககூடாது என ஊராட்சி மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்புரம் ஊராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் கிராம மக்கள் ஒன்றாக திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். #tamilnews
துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான துணி நெய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னையை சேர்ந்த அஜய் அகர்வால், இதன் உரிமையாளர் ஆவார். இங்கு நெய்யும் துணிகள் கடந்த 15 ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் அருகிலேயே, நிறுவனத்துக்கு சொந்தமான குடோனும் உள்ளது. குடோனில் நெய்யும் துணிகள் மற்றும் தயாரிப்புக்கு தேவையான நூல் மொத்தமாக, வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணிக்கு குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தெரிவித்தனர். அதற்குள், குடோனில் மளமளவென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தகவலறிந்ததும் துரைப்பாக்கம், திருவான்மியூர் மற்றும் சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் நூல் தீக்கிரையானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமம் மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் அரிராமன்.
இவர் தண்டலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இரவு வழக்கம்போல் அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் முன் வராண்டாவில் படுத்து தூங்கினார்.
நள்ளிரவு 1 மணியளவில் இந்த பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. எனவே மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டின் உள்ளே சென்று படுக்க சொல்லிவிட்டு அரிராமன் மட்டும் வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளார்.
1.30 மணியளவில் திடீரென பயங்கரசத்தத்துடன் இடி சத்தம் கேட்டுள்ளது. வீட்டின் மாடியின் சைடு பகுதியில் இடிதாக்கி மாடியின் சைடு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது இதில் வராண்டாவில் படுத்திருந்த அரிராமனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வராண்டாவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது. இடி தாக்கியதில் சுமார் ரூ. 2 லட்சம் அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேதம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடல் அலை சீற்றத்துடன் பல அடி உயரத்துக்கு எழுந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வட புறமும், தென்புறமும் கடல் நீர் புகுந்தது.
மீனவர்கள் அங்கு நிறுத்தி இருந்த படகுகளையும் மற்றும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர். இன்று காலையும் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் கடலின் சீற்றத்தை பார்த்து பயந்து அருகே செல்லாமல் தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தனர்.
கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம், தேவநேரி, நெம்மேலி, சூலேரிக்காடு, வெண்புருஷம், கொக்கில மேடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
பலத்த மழை காரணமாக மாமல்லபுரம் கீழராஜவீதி, ஒத்தவாடைதெரு, கலங்கரை விளக்கம் ரோடு போன்ற முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
திருக்கழுகுன்றம் சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர், பெருமாள் ஏரி, மணமை பகுதியில் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்ககோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன். எங்கள் விவசாயிகளுக்காக வெட்கம் பார்க்காமல் சென்று கேட்டேன். அதை அரசியலில் காவிரி ஆணையம் வேண்டாம் என்று கேட்கச் சென்றதாக திரித்து விட்டனர்.
காவிரி ஆணையம் வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர்விடும் கணக்குகளை பார்க்கத்தான் ஆணையம் வேண்டும் என்று கோரப்பட்டது. ஆணையம் கிடைத்தது பெரிய வெற்றிதான். 2 மாநிலங்களும் அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பஸ்களை உடைப்பதுதான் வேலையாக இருக்கும்.
ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு பற்றி விசாரணை நடப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. இதுபற்றி நான் ஒரு வருடத்துக்கு முன் சொன்னேன்.
இதுபோன்ற நிலவரங்கள் அதிகரித்து வந்ததால்தான் நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழக அரசு நீங்க வேண்டும் என்று நான் சொல்லி நீண்ட நாளாகிவிட்டது. தனி நபருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய சம்பவம் அரசியல் மாண்பு சிரழிந்து வருவதாக நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆர். உயிருக்காக போராடியபோது தனியார் விமானத்தில்தான் போனார். சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை பற்றி எந்த ஒரு ஏழையும் பேசலாம். 8 வழி சாலை வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றி மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதுபற்றி பேசக்கூடாது என்று எச்.ராஜா எப்படி சொல்லலாம்.
கருத்து சுதந்திரம் மெதுவாக பறிக்கப்பட்டு வருகிறது. யாரும் தங்களுடைய கருத்துகளை வெளியிடக்கூடாது என்ற பதட்டமான சூழல்தான் உள்ளது. அது மாறவேண்டும் என்பது இந்தியாவின் தேவையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Cauvery #KamalHaasan
திருமணம் ஆகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் விவகாரத்து கேட்டு கோர்ட்டு படியேறி நிற்கும் தம்பதிகள் சிலருக்கு மத்தியில் 40 ஆண்டுகள் வாழ்க்கை துணையாக இருந்த மனைவிக்கு மரியாதை செலுத்தி வருகிறார் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மளிகைக்கடைக்காரர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் ஆசைத்தம்பி. தன் மாமன் மகள் பெரியபிராட்டியை 1977-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தன் மனைவி குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது:-
பிழைப்பு தேடி சென்னை வந்தோம். பின்னர் காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள தென்பாதி கிராமத்தில் குடியேறினோம். என் மனைவியின் வழிகாட்டுதலின்படி மளிகை கடை தொடங்கினேன். கேபிள் டி.வி. தொடங்கவும் அவர்தான் ஆலோசனை வழங்கினார். கைநிறைய வருமானம் வந்தது.
அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டினேன். எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர் சொல்வதுதான் எனக்கு வேதவாக்காக இருந்தது. திடீரென ஒருநாள் என் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் நாங்கள் நிலைகுலைந்து போனோம்.
அந்த நிலையிலும், நான் உங்களுடன்தான் இருப்பேன் என தைரியம் கொடுத்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பே, ‘உனக்கு சிலை வைக்க போகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
என் மனைவி இறந்து 16-வது நாளன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவருடன் ஆலோசனை நடத்தி, மனைவியின் சிலைக்கான கல்லை தேர்வு செய்தேன். அவரும் சிலையை செதுக்கி கொடுத்தார். 5 அடி ஒரு அங்குல உயரத்தில் சிலை உருவானது. அவர் இறந்த 10-வது மாதத்தில் சிலையை நிறுவினோம். சிலை வடித்த பிறகு எனக்கு 10 வயது குறைந்தது போல உள்ளது. சிலைக்கு தாலி கட்டி தினமும் அவரை வழிபட்டு வருகிறேன். 40 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கை துணைக்கு நான் செய்யும் மரியாதை இது. அவர் நினைவாகவே வாழ்ந்து உயிரை விட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனைவி இருக்கும் போதே வேறு பெண்களை தேடிச்செல்லும் சில ஆண்களுக்கு மத்தியில், மனைவி இறந்த பின்னரும் அவருக்கு சிலை செதுக்கி அவர் நினைவுடன் வாழும் ஆசைத்தம்பியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். #Wifestatue
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேரூராட்சியில் தெருக்களில் தேங்கி கிடக்கும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து எடுக்க பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் முதல் முறையாக குப்பைகளை சேகரிக்க பெருங்களத்தூரில் பேட்டரியால் இயங்கும் 3ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.6.30 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள இந்த வண்டிகளில் 500 கிலோ குப்பைகளை ஏற்றி செல்ல முடியும்.
மேலும் குறுகிய சாலைகளில் வாகனத்தை இயக்க முடியும். இந்த பேட்டரி ஆட்டோக்களால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சமாகும்.
இந்த பேட்டரி ஆட்டோக்களின் சேவைகளை காஞ்சீபுரம் பேரூராட்சி இயக்குனர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பேரூராட்சி உதவி இயக்குனர் சாந்தகுமார், உதவி செயற்பொறியாளர் மனோகரன், பெருங்களத்தூர் செயல் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். #Tamilnews
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த சர்புதீன் என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர்.
பேரீச்சம் பழங்கள் இருந்த டப்பாக்களில் 1 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அதே விமானத்தில் வந்த ஆந்திராவை சேர்ந்த சகுந்தலா என்பவரை தனி அறையில் வைத்து சோதனையிட்டனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து 300 கிராம் நகைகளை எடுத்து வந்திருந்தது தெரிந்தது.
மொத்தம் 1 கிலோ 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.40½ லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த சர்புதீன், சகுந்தலாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், பல்லாவரம் மெயின்ரோட்டில் ஒமேகா இண்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இங்கு மாங்காடு, போரூர், குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளி பஸ்சில் வந்து செல்கின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி பஸ் வந்தது. அதில் உதவியாளராக பாஸ்கர் என்பவர் இருந்தார்.
அப்போது கொளப்பாக்கத்தை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவி ஒருவர் பள்ளி பஸ்சில் செல்ல மறுத்தார். பெற்றோர் விசாரித்தபோது பஸ்சில் உள்ள உதவியாளர் பாஸ்கர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பஸ்சில் இருந்த உதவியாளர் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான மாணவ- மாணவிகளின் பெற்றோர் அங்கு திரண்டனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ்சில் ஏறி, இறங்கும் பல சிறுமிகளிடம் உதவி செய்வதுபோல் நடித்து பாஸ்கர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மற்றொரு உதவியாளர் மீதும் மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. #tamilnews
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45).
இவர் அரசாணி மங்கலம் ஊராட்சியில் செயலாளராக பணி புரிந்து வந்தார். இவருடைய தம்பி ஏழுமலை (40). விவசாயி.
வெங்கடேசனும், ஏழுமலையும் மருத்துவம் பாடியில் அருகருகே உள்ள வீட்டில் குடியிருந்து வந்தனர். வெங்கடேசன் வீட்டில் உள்ள கழிவுநீர் வெளியேறுவது தொடர்பாக அண்ணன்-தம்பி இருவருக்கும் தகராறு இருந்து வந்தது.
இன்று காலை 8 மணி அளவில், இந்த பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஏழுமலை அரிவாளை எடுத்து வந்து அவருடைய அண்ணன் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினார்.
படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த வெங்கடேசனை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கொலையுண்ட வெங்கடேசன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலையாளி ஏழுமலை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதாவினர் ஊழல் செய்யாதவர்கள் போல பேசி வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜனதா கால் ஊன்றவும், நிர்மலா சீத்தாராமனை தமிழக முதல்-அமைச்சராக்கவும் திட்டமிடுகிறார்கள். ஓ.பி.எஸ். சகோதரருக்காக ராணுவ விமானம் கொடுத்தது பற்றி மத்திய மந்திரிதான் விளக்க வேண்டும்.
அம்மா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். முதல்-அமைச்சர் ஆனார். அதற்கு காரணமான வரையே காட்டிக் கொடுத்தார். அம்மா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு காரணமாக இருந்து அம்மாவின் மரணத்தையே அசிங்கப்படுத்தினார்.

ஓ.பி.எஸ். சொத்து குவிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அவருடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும். பல உண்மைகள் அம்பலமாகும்.
இதுபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்ற அமைச்சர்கள் பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் பல உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு 3-வது இடம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அதை முறியடித்து எனது தொண்டர்களின் உழைப்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தனி கூட்டணி அமைத்து சந்திப்போம். இதில் எங்களுடன் பல கட்சிகள் இணைந்து செயல்படும்.
நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சட்டசபை தேர்தலில் எங்களுக்கு 200 இடங்கள் கிடைக்கும். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காட்டுவோம்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே, இதில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran






