என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் கணவர்
    X

    மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் கணவர்

    செங்கல்பட்டு அருகே மனைவிக்கு சிலை வைத்து கணவர் வழிபட்டு வருகிறார். தன்னுடன் 40 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை துணைக்கு செய்யும் மரியாதை இது என அவர் தெரிவித்தார். #Wifestatue
    செங்கல்பட்டு:

    திருமணம் ஆகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் விவகாரத்து கேட்டு கோர்ட்டு படியேறி நிற்கும் தம்பதிகள் சிலருக்கு மத்தியில் 40 ஆண்டுகள் வாழ்க்கை துணையாக இருந்த மனைவிக்கு மரியாதை செலுத்தி வருகிறார் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மளிகைக்கடைக்காரர்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் ஆசைத்தம்பி. தன் மாமன் மகள் பெரியபிராட்டியை 1977-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    தன் மனைவி குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது:-

    பிழைப்பு தேடி சென்னை வந்தோம். பின்னர் காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள தென்பாதி கிராமத்தில் குடியேறினோம். என் மனைவியின் வழிகாட்டுதலின்படி மளிகை கடை தொடங்கினேன். கேபிள் டி.வி. தொடங்கவும் அவர்தான் ஆலோசனை வழங்கினார். கைநிறைய வருமானம் வந்தது.

    அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டினேன். எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர் சொல்வதுதான் எனக்கு வேதவாக்காக இருந்தது. திடீரென ஒருநாள் என் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் நாங்கள் நிலைகுலைந்து போனோம்.

    அந்த நிலையிலும், நான் உங்களுடன்தான் இருப்பேன் என தைரியம் கொடுத்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பே, ‘உனக்கு சிலை வைக்க போகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

    என் மனைவி இறந்து 16-வது நாளன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவருடன் ஆலோசனை நடத்தி, மனைவியின் சிலைக்கான கல்லை தேர்வு செய்தேன். அவரும் சிலையை செதுக்கி கொடுத்தார். 5 அடி ஒரு அங்குல உயரத்தில் சிலை உருவானது. அவர் இறந்த 10-வது மாதத்தில் சிலையை நிறுவினோம். சிலை வடித்த பிறகு எனக்கு 10 வயது குறைந்தது போல உள்ளது. சிலைக்கு தாலி கட்டி தினமும் அவரை வழிபட்டு வருகிறேன். 40 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கை துணைக்கு நான் செய்யும் மரியாதை இது. அவர் நினைவாகவே வாழ்ந்து உயிரை விட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மனைவி இருக்கும் போதே வேறு பெண்களை தேடிச்செல்லும் சில ஆண்களுக்கு மத்தியில், மனைவி இறந்த பின்னரும் அவருக்கு சிலை செதுக்கி அவர் நினைவுடன் வாழும் ஆசைத்தம்பியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.  #Wifestatue


    Next Story
    ×