என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் வாசலில் விளையாடியபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 34). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ராகவி. இவர்களுடைய மகன் ஜீவன்குமார் (6). மகள் ருத்திரபிரியா (3). பிரேம்குமார் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டுக்கு முன்பு செல்லும் சாக்கடையை சீரமைக்கும் பணி நேற்று பகலில் நடந்தது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டது.

    இந்த பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் ஜீவன்குமாரும், ருத்திரபிரியாவும் இரவு 7 மணிஅளவில் வீட்டுக்கு முன்பு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோர் மீது விழுந்தது.

    இதைப்பார்த்ததும் ராகவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ருத்திரபிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜீவன்குமாருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திங்கட்கிழமைகளில் கூடும் காளைமாடு சிலை பகுதி வாரச்சந்தை நேற்று கூடியது. வியாபாரிகள் குறைந்த அளவில்தான் வந்து இருந்தனர். பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வந்துபொருட்கள் வாங்கிச்சென்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஆங்காங்கே வாராந்திர சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தைகளில் காய்கள், மளிகைப்பொருட்கள், துணி, வீட்டு உபயோகப்பொருட்கள், கறுவாடு என்று அனைத்து வகை பொருட்களும் கிடைக்கும். இந்த வாராந்திர சந்தைகளில் வியாபாரம் செய்யும் தொழிலை ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த சந்தைகளில் மட்டுமே கடைகள் நடத்துவார்கள்.

    கொரோனா தொற்று பரவல் தொடங்கி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் சந்தைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகரையொட்டி காளைமாடு சிலை, மகாராஜா தியேட்டர் பகுதி, சூரம்பட்டி, சோலார் உள்ளிட்ட பகுதியில் வாராந்திர சந்தைகள் செயல்பட்டு வந்தன.

    இந்த சந்தைகள் கடந்த வாரம் வரை நடைபெறவில்லை. இந்த வாரம் முதல் சந்தைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வழக்கமாக திங்கட்கிழமைகளில் கூடும் காளைமாடு சிலை பகுதி வாரச்சந்தை நேற்று கூடியது. வியாபாரிகள் குறைந்த அளவில்தான் வந்து இருந்தனர். பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வந்துபொருட்கள் வாங்கிச்சென்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதே போல் ஈரோட்டை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் செங்கல்பட்டில் உள்ள தனது சகோதரரை பார்க்க சென்றார். சகோதரர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு பணம் கொடுப்பதற்காக ஈரோட்டில் இருந்து சென்றதோடு சில நாட்கள் சகோதரரை உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனை தொடர்ந்து அவரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து உள்ளது.

    புத்தகம் வாங்க வைத்திருந்த உண்டியல் பணத்தை மாற்றுத்திறனாளி இரட்டையர்கள் கொரோனா நிதியாக வழங்கினார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு கைக்கோளம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன். இவர் ஈரோட்டில் பள்ளிக்கூட மற்றும் அலுவலக பைகள் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவருக்கு பெர்னாஷ் அலி, பாஷிகா நிஷா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் இரட்டையர். பிறக்கும்போதே கை, கால்கள் மாற்றுத்திறன் கொண்டவர்களாக பிறந்தனர். தற்போது இவர்கள் 2 பேருக்கும் வயது 16 வயது ஆகிறது.

    பெற்றோர் மற்றும் உதவியாளர்கள் உதவியின்றி எந்த பணியும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள். இவர்கள் திருநகர் காலனியில் உள்ள ஒரு சிறப்பு குழந்தைகளுக்கான மையத்தில் கல்வி மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு புத்தகத்திருவிழாவுக்கு வந்து ஆண்டு தோறும் புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை வைத்து உள்ளனர். இதற்காக பெற்றோர் இவர்களுக்கு வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இவர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தாங்கள் புத்தகம் வாங்க சேமித்த உண்டியல் தொகையை அப்படியே முதல்-அமைச்சர் நிவாரண நிதி திட்டத்தில் வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு பெர்னாஷ் அலி, பாஷிகா நிஷா ஆகியோர் பெற்றோர் காதர் மொய்தீன்-ஷரிபா ஆகியோருடன் வந்தனர்.

    சற்றும் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வரும் நிலையில் பாஷிகா நிஷாவும், கையில் ஊன்றுகோல்கள் உதவியுடன் தட்டுத்தடுமாறி நடக்கும் பெர்னாஷ் அலியும் கலெக்டர் முகாம் அலுவலகத்தை பிரமிப்பாக பார்த்தனர். இவர்கள் வந்திருக்கும் தகவல் அறிந்த கலெக்டர் சி.கதிரவன் தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்து மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று சிறிது நேரம் அவர்களுடன் பேசினார். பின்னர் 2 பேரும் தங்கள் சேமிப்பு உண்டியல்களை அப்படியே கலெக்டர் சி.கதிரவனிடம் ஒப்படைத்தனர்.

    நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது செல்வா சேரிடபிள் அறக்கட்டளை நிறுவனர் ஜெ.ஜெ.பாரதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 2 பேரும் வழங்கிய உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியபோது அதில் ரூ.4 ஆயிரத்து 392 இருந்தது. அந்த பணத்தை முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டார்.
    ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்கள் பலியானது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவளமலை செல்வபுரம் பகுதிக்கு ஏராளமான மயில்கள் இறை தேடி வந்து செல்வது வழக்கம். அது போல் இன்று காலை 2 பெண் மயில்கள் வந்தது.

    பின்னர் மயில்கள் மேலே பறக்க முயன்ற போது அங்குள்ள மின் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்களும் இறந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள முருகன் புதூர் பவளமலை முட்புதர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்த பழனிசாமி, சிவகுமார், ஆறுமுகம், ஜெகதீஷ், கதிர்வேல் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 44 ஆயிரத்து 120 பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி வரை 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதில் ஒருவர் இறந்தார். மற்ற 69 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

    இந்த நிலையில் கடந்த மாதம் கவுந்தப்பாடியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியானது. அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சென்னையில் இருந்து வந்த ஈரோடு சூளையை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

    இதனால் பாதிப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் அபுதாபியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 35 ஆணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரேனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டு உள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஆனால் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லைஎன சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படும் என ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 159 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வருவாய்த்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் எந்த தகவலும் இல்லை.

    சில ஊடகங்கள் மாணவ - மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையிலும் சோதனை நடைபெறும். ஆனால் இதுவரை தேர்வு எழுத உள்ள மாணவ -மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை. அப்படி  கொரோனா பாதிப்பு இருப்பதாக மாணவ -மாணவிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தேர்வில் சலுகைகள் வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் 8-ம் தேதி (திங்கட்கிழமை), 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட உள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்த கணக்கு தெரியவரும். தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ -மாணவிகளின் கல்விக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், இதுதொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை போன்று கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவ -மாணவிகள் தனி வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு, தனி அறையில் தேர்வு எழுத வைக்கப்படுவார்கள். தேர்வு முடிந்ததும் தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இது தொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொள்வார்கள். இதுதொடர்பாக ஏற்கனவே அவர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

    கொரோனா ஊரடங்குக்கு பின்னர் பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது, பாடத்திட்டத்தின் படி பாடங்களை குறைக்க 4 கல்வியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக முதல்-அமைச்சரும் அவர்களுடன் கலந்து பேசி ஆலோசனைகள் வழங்கி உள்ளார். தற்போது தனியார் பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பள்ளிக்கூடத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவ -மாணவிகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

    கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவ -மாணவிகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கியதாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
    தாளவாடி அருகே கர்நாடகா மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாளவாடி:

    தாளவாடி பகுதியில் போலீசார் தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் சின்ன சாமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி- ஒசூர் ரோட்டில் ஒரு வாலிபர் சந்தேகம்படும் படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஆசனூர் அடுத்த ஈக்கலூர் அம்பேத்கார் வீதியை சேர்ந்த பசுவராஜ் (வயது 35) என தெரிய வந்தது. மேலும் அவரிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவரிடம் கர்நாடகா மது இருந்ததும், அதை அவர் விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பசுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த கர்நாடக மதுவையும் பறிமுதல் செய்தனர்.

    கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கணபதிபாளையம் நால்ரோடு மின்சார அலுவலகத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் பொன்னன் (58). இவர் சாணார்பாளையம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் போடுவதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி டிரான்ஸ்பார்மர் மீது தொங்கிய நிலையில் இருந்தார்.

    அங்கு இருந்தவர்கள் உடனடியாக மின்சார அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மின் ஊழியர்கள் பொன்னனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பொன்னனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் பொன்னன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டதால் ஈரோட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாக நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து காய்கறிகளை சில்லரை விற்பனைக்காக வாங்கி செல்கிறார்கள்.

    இதேபோல் பொதுமக்களும் தங்களது வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகமாக உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் தக்காளி அதிகமாக ஈரோட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகமாக இருப்பதால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதுகுறித்து மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த மாதத்தில் 15 கிலோ உடைய தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் சென்னையில் அதிகமாக இருப்பதால், அங்கு தக்காளியை அதிகமாக கொண்டு செல்ல லாரி டிரைவர்களும், வியாபாரிகளும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக சுப நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் தக்காளியின் தேவையும் குறைந்து உள்ளது.

    இதன் காரணமாக ஈரோட்டுக்கு தக்காளி வந்து குவிந்த வண்ணம் உள்ளது. எனவே விலையும் அதிரடியாக குறைந்துவிட்டது. 15 கிலோ உடைய தக்காளி பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோ ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில வியாபாரிகள் வேறு வழியின்றி அதை விடவும் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    ஈரோடு:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றிவைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

    மாநில துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக ஈரோடு முனிசிபல் காலனியிலும், மணல் மேட்டில் கட்சி அலுவலகத்திலும் உள்ள கருணாநிதி சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டல அமைப்புச்செயலாளர் நா.விநாயகமூர்த்தி கலந்துகொண்டு கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி, நகர அமைப்பாளர் சையது, மாவட்ட பேச்சாளர் உசைன், பொருளாளர் அப்சர், ஆல்பர்ட் என்கிற ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆதித்தமிழர் பேரவை சார்பில் நிறுவன தலைவர் அதியமான் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், நிதிச்செயலாளர் பெருமாவளவன், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    ×