search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    ஊரடங்கால் விற்பனை பாதிப்பு- தக்காளி விலை கடும் வீழ்ச்சி

    ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டதால் ஈரோட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாக நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து காய்கறிகளை சில்லரை விற்பனைக்காக வாங்கி செல்கிறார்கள்.

    இதேபோல் பொதுமக்களும் தங்களது வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகமாக உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் தக்காளி அதிகமாக ஈரோட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகமாக இருப்பதால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதுகுறித்து மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த மாதத்தில் 15 கிலோ உடைய தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் சென்னையில் அதிகமாக இருப்பதால், அங்கு தக்காளியை அதிகமாக கொண்டு செல்ல லாரி டிரைவர்களும், வியாபாரிகளும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக சுப நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் தக்காளியின் தேவையும் குறைந்து உள்ளது.

    இதன் காரணமாக ஈரோட்டுக்கு தக்காளி வந்து குவிந்த வண்ணம் உள்ளது. எனவே விலையும் அதிரடியாக குறைந்துவிட்டது. 15 கிலோ உடைய தக்காளி பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோ ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில வியாபாரிகள் வேறு வழியின்றி அதை விடவும் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×