என் மலர்
ஈரோடு
- சம்பவத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
- மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
சென்னை திரு.வி.க.நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவருடைய மனைவி மிஸ்சியா மரினா ஜெனோவா (வயது 31). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கர்ப்பிணியாக இருந்த மிஸ்சியா மரினா ஜெனோவா ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
கடந்த மாதம் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மிஸ்சியா மரினா ஜெனோவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபிசெட்டிபாளைய நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி, மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயராம் நடுநிலைப் பள்ளிகளில் டெங்கு, மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் மற்றும் ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ் முன்னிலையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மொடச்சூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும்,
துப்புரவு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான குழுவினர் நகராட்சி ஜெயராம் நடுநிலைப் பள்ளியிலும் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.
இதில் கொசு முட்டைகள் இட்டு வளரும் இடங்களான தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், முட்டை ஓடுகள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கருங்கவுண்டன்வலசில் மின்னொளியில் உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடந்தது.
- போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கருங்கவுண்டன்வலசில் மின்னொளியில் உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடந்தது.
இதில் மாவட்டத்தின் தலை சிறந்த ௫௦-க்கு மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் நாக்–அவுட் முறையில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ. 5,000 மற்றும் வெற்றி கோப்பையினை ஈரோடு லட்சுணமண் பிரதர்ஸ் அணி வென்றது.
2-வது இடத்தினை அரச்சலூர் நாகராஜ் ஏ அணியிரும், மூன்றாம் பரிசினை கோட்டாம்பாளையம், கோல்டன் பாய்ஸ் அணியும், நான்காம் பரிசினை வெள்ளோடு, மனமகிழ் மன்ற அணியின ரும் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையினை சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சி.பிரபு வழங்கினார்.
இதில், தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
- கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அணிகளின் சார்பாக பலர் கலந்து கொண்டனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சொட்டு நீர் அமைப்பதற்கான மானியம் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதால் மேலும் சொட்டு நீர் அமைக்கும் நிறுவனங்களுக்கான அனுமதி இன்னும் தரப்படா ததால் விவசாயிகள் அவதி பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
கள்ளிப்பூச்சி எனப்படும் மாவு பூச்சிகளால் ஏறக்குறைய ஈரோடு மாவ ட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடும் பரப்பளவு குறைந்து விட்டது.
எனவே அதற்கான நடவடிக்கைகளை தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர்.ரகுகுமார் இந்த தீர்மானங்களை முன்மொழி ந்தார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், நீராபாலு, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சிவகுமார் மற்றும்நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மொடக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
- எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.
மொடக்குறிச்சி, ஜூலை.19-
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டு பாளையம் பகவதி நகரில் அமைய உள்ள சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
தொடர்ந்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியான காட்டு பாளையம் பகவதி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சாயத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி வழங்க முயற்சி நடப்பதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் சாய தொழிற்சாலை அமைய கட்டிட அனுமதி மற்றும் போர்வெல் அமைப்பதற்கான அனுமதி வழங்க இருப்பதாகவும் அறிந்தோம்.
எனவே குறித்து சாயத் தொழிற்சாலையை தொடங்க அனுமதிக்க கூடாது இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கெட்டுவிடும். மேலும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என்று பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம் .
இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் 4-வது தீர் மானமாக கட்டிடத்திற்கு மற்றும் போர்வல் அமைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிந்து அனைவரும் இங்கு வந்துள்ளோம்.
இதற்கு அனுமதிக்க கூடாது என்று பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
- மாவட்டத்தில் தற்போது தினமும் 300-ல் இருந்து 350 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 454 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் தற்போது தினமும் 300-ல் இருந்து 350 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
- ஆடி மாதம் முழுவதும் கோவிலில் விசேஷம் உள்ளதால் காட்டன் துணிகள், காவி வேஷ்டி, சட்டைகள், துண்டுகள், சேலைகள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆடிப்பண்டிகையை யொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரம் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-
ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது. குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.
வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது. கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் ஆடி மாதம் முழுவதும் கோவிலில் விசேஷம் உள்ளதால் காட்டன் துணிகள், காவி வேஷ்டி, சட்டைகள், துண்டுகள், சேலைகள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
- இதையடுத்து பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வண்டிபட்டி, அத்தாணி ரோட்டை சேர்ந்தவர் மல்லேஸ்வரன்(45). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளார்.
இதில் 3-வது மகள் இந்துமதி (21). கோவையில் நர்சிங் பயிற்சி முடித்து விட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வருகிறார்.
தினமும் காலையில் வீட்டிலிருந்து வேலைக்கு செல்பவர் மாலை வீட்டுக்கு வந்து விடுவார். இதேபோல் சம்பவத்தன்றும் காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் இந்து மதியை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் பணிபுரிந்த மருத்துவமனை, நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்துமதியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர். புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டஅந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணா மடுவு, பச்சாபாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பி பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி அந்த வாகனங்கள்பற்றி விபரம் தெரியாததாலும் வாகனங்களைத் தேடி யாரும் உரிமை கோரி வராததாலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
- பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
பெரியார் பல்கலை க்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி, பட்டியல் அணி மாநில பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், வடக்கு மாவட்ட தலைவர் நடராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னத்துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன்,மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதா னந்தம் , சிவகாமி, ஈஸ்வர மூர்த்தி.
ஊடக பிரிவு தலைவர் அண்ணாதுரை, விவசாய அணி தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ரகுபதி, சிபி சக்கரவர்த்தி, தேசிய செய்தி தொடர்பாளர் சரவணன் , பொருளாளர் சுதர்சனம், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் செயலாளர் பாலமுரளி உள்பட பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
- கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஓசூர் மலை கிராமத்தில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்கம் முகாம் மற்றும் இருவாரகால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாளவாடியில் நேரடி கள ஆய்வு தொழுநோய் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களின் வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.
மேலும் தொழுநோயில் இருந்து குணமடைந்த 40 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஊன தடுப்பு சிகிச்சை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு சுய பாதுகாப்பு முதல் உதவி சிகிச்சை பெட்டகம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆணை, மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர்களுக்கு அரசு உதவித்தொகை காசோலை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொதுமக்கள் கலந்து கொண்ட தோல் சிகிச்சை முகாம், பள்ளி மாணவர்களுக்கான தொழுநோய் பரிசோதனை முகாமை பார்வையிட்டார். இதேபோல் தொழுநோய் விழிப்புணர்வு கண்காட்சி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவற்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் குருநாதன், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை (தொழுநோய் பொறுப்பு) கூடுதல் இயக்குனர் அமுதா, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி, ஈரோடு நலப்பணிகள் (பொறுப்பு) இணை இயக்குனர் பிரேமகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 77 தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு சில பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோடு:
சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பிளஸ்-2 மாணவி இறந்ததை கண்டித்து, மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் திடீரென அந்த தனியார் பள்ளிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்தனர். பள்ளி அலுவலகங்கள், வகுப்பறைகள் சூறையாடப்பட்டன. போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதில் சில போலீஸ்காரர்களும் காயமடைந்தனர். தனியார் பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து தமிழகம் முழுவதும் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உரிய அனுமதி இல்லாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. எனினும் இந்த எச்சரிக்கை மீறி ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 77 தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தனியார் பள்ளி கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய மனுக்கள் கொடுத்தனர்.
இன்று 2-வது நாளாக ஒரு சில பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் கல்லூரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






