என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
    • இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ -மாணவிகளுக்கு தனி தனியே செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டி இன்று நடந்தது. இதில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

    இதேப்போல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பர்கூர், தவிட்டுப்பாளையம், அத்தாணி, பச்சாம்பாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட 55 அரசு பள்ளியில் பயிலும் 200 மாணவ-மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி இன்று காலை 10 மணி அளவில் நடந்தது.

    இதில் முதன்மை நடுவர் ராமசாமி மேற்பார்வையில் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.பவானி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, அந்தியூர் வட்டார கல்வி அலுவலர்கள் மாதேஷா முருகன் மற்றும் டி.ஐ. மோகன்குமார் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) லிங்கப்பன்,

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர்கள் திருமா வளவன், ஜெயந்தி மற்றும் உடற்கல்விஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

     நெரிஞ்சிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளாங்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.என்.பாளையத்துக்கு பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதேபோல் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடுமுடிக்கு சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலைக்கு ஈங்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு சம்பத் நகரில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு திருடி கொண்டு சென்று விட்டார்.

    மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனதை கண்ட உரிமையாளர் உடனடியாக இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மோட்டார்சைக்கிள் வாகன எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.

    அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை சவிதா சிக்னலில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது ரோந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பவானி குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த சேட் (36) என்பதும் சம்பத் நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இவர் இதே போல் அம்மாபேட்டையில் ஒரு மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சின்னசேலம் பகுதியை சேர்ந்த நித்தீஸ்குமார் (22) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்தீஸ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 22 காசுக்கும், அதிகபட்ச விலையாக 28 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 30 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 5,993 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 116 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 31 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 1,984 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.
    • விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையம் மாட்டு ஆஸ்பத்திரி அருகே ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 300 கிராம் எடை கொண்ட 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சரவணா தியேட்டர் பகுதியை சேர்ந்த சரவணன் (24), பவானி காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம்.வீதியை சேர்ந்த மெய்யப்பன் (24). சித்தார் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த அஜித் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓடியது பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி மகேஸ்வரி என்கிற பவித்ரா (24) என்று தெரியவந்தது.

    இதையடுத்து சித்தோடு போலீசார் பவித்ராவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த அவரது கணவர் விஜயன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதையடுத்து போலீசார் விஜயன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுப்பற்றிய விபரம் வருமாறு:-

    விஜயன் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளா கவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து உள்ளனர். இதற்காக இவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கஞ்சாவை பொட்டலங்களாக தயாரித்து அவர்களுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துது.

    இதேபோல தான் பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.

    மேலும் விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது. மேலும் விஜயன் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் நடைபெறவுள்ளது.
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘நம்ம செஸ், நம்ம பெருமை” விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'நம்ம செஸ், நம்ம பெருமை" விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வருகின்ற 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் 188 நாடுகளைச் சார்ந்த சுமார் 2500-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்குபெறவுள்ளனர்.

    அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் தொடர்பாக ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
    • புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. சிறந்த பரிகார தலமாகவும் உள்ளது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குளித்து திதி, தர்ப்பணம் மற்றும் திருமண தோஷம் நீக்கும் பரிகாரங்கள் செய்து வருகிறார்கள்.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும். மேலும் ஆடி பிறப்பு மற்றும் ஆடி 18 நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அம்மாபேட்டை, பவானி, ஈரோடு மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் குளிக்கும் இடத்தில் உள்ள படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதனால் கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொடுமுடி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பக்தர்கள் குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • விசாரணையில் தாராபுரம் உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார் என்பதும்,மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபுராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் ஆகும். இவர் ரூ.1.25 மதிப்பில் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி இருந்தார்.

    இந்த புதிய மோட்டார் சைக்கிளில் தான் பிரபு ராஜா தினமும் ஆஸ்பத்திரிக்கு வருவார். அங்குள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்வார்.

    இதேபோல் சம்பவத்தன்றும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நம்பர் கள்ள சாவி போட்டு மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் பிரபுராஜா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் எல்லைமாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம், உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார்(23) என்பதும், பிரபு ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இவர் மீது திருப்பூரில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 4 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3 வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கரு முட்டை தானம் என்பது சட்டபூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் போலி மருந்து, தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழக அரசின் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் நடந்த நிதிநிலை அறிக்கையின்போது 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. மருத்துவத்துறை அறிவிப்பான இந்த 136 அறிவிப்புகளும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் வழிகாட்டுதல்படி மக்கள் நல்வாழ்வு துறையின் அனைத்து அறிவிப்புகளும் அடுத்த நிதிநிலை அறிவிப்புக்குள் நிறைவேற்றப்படும்.

    அந்த வகையில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று இன்று தாளவாடி பகுதியில் இருக்கும் ஓசூர் கிராமத்தில் குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அறிவிப்பு எண் 90-யின்படி தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் பழனி, ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கன்னியாகுமரி மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட 12 பழங்குடியினர் வசிக்கும் வட்டாரத்தில் கருவுற்ற தாய்மார்கள் இடையே ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிந்து அந்த நோய்க்கு மரபணு ஆலோசனை வழங்கும் ஒவ்வொரு இடத்திற்கும் 14 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த திட்டத்தை இந்த கிராமத்தில் தொடங்கி வைத்திருக்கிறோம். வீடுகள் தோறும் தேடிச்சென்று வளர் இளம்பெண்களுக்கும், கருவுற்ற தாய்மார்களுக்கும் இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

    ரத்த சோகை பாதிப்பு மலை கிராம மக்கள் இடையே பரவி வரும் சூழ்நிலையில் இதை தடுப்பதற்கும் இந்த நோயின் தன்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    பொதுவாக ஆணும், பெண்ணும் இருவருக்கும் இந்த நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்த நோய் பாதிப்பு இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

    எனவே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஓ.ஆர்.எஸ் என்ற கரைசல் மருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தரப்பட்டு வருகிறது.

    அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என செவிலியர்கள் சொல்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் தாளவாடி மருத்துவமனையில் பெரிய அளவு வசதிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு பிரேத பரிசோதனை செய்யும் வசதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதற்காக ஒரு கட்டிடம் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவை நடைமுறையில் இல்லை. தற்போது இறப்பு ஏற்பட்டால் அவர்களை கர்நாடகத்திற்கும் அல்லது சத்தியமங்கலம் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெரிய அளவில் சட்ட சிக்கல் கூட ஏற்படும்.

    எனவே பிரேத பரிசோதனை கூடம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் அதிகாரிகளிடம் பேசி தாளவாடி பகுதிக்கு ஏற்படுத்தி தர இருக்கிறோம்.

    மேலும் தாளவாடி ஆஸ்பத்திரியில் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கடிதம் தந்துள்ளார்கள். அது குறித்தும் சென்னைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க செய்யப்படும்.

    தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காக்கும் திட்டம், தொலைதூர மருத்துவ சேவை, 2025-க்குள் காச நோய் இல்லாத தமிழகம் இப்படி பல திட்டங்களை முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தொழு நோய் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தவிர புன்னகை என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மலை கிராமத்தில் படித்த பெண் ஒருவருக்கு கம்ப்யூட்டர் வாங்கி கொடுக்கப்பட்டு அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தப் பெண்ணின் மூலம் வழங்கும் வகையில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோட்டை பொருத்தவரை 45 மலை கிராமங்கள் உள்ளன. இந்த 45 மலை கிராமங்களிலும் புன்னகை திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இதன் மூலம் அந்தந்த மலை கிராமங்களுக்கு இணையதள வசதி, படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அந்த இளைஞர் மருத்துவர்களோடு பேசி அந்த மலை கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடியும். முதல்-அமைச்சர் கவனத்திற்கு இதுகுறித்து கொண்டு செல்லப்பட்டு தேவையான நிதி ஆதாரம் பெறப்படும்.

    கரு முட்டை தானம் என்பது சட்டபூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 21 வயது முதல் 35 வயதுக்குள் பெற்றெடுக்கிற தாயின் கரு முட்டை கொடுக்கிற வகையில் சட்டத்தில் இடம் உள்ளது.

    ஆனால் இங்கு நடந்த 16 வயது இளம்பெண்ணிடம் 6 மருத்துவமனை தொடர்ச்சியாக கருமுட்டை எடுத்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 4 மருத்துவமனை மற்ற 2 ஆந்திரா, கேரளாவில் உள்ளது.

    இது தொடர்பாக நமது துறையின் செயலாளர் அந்தந்த செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனைகள் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தமிழகத்தில் போலி மருந்து, தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்துறையில் விரைவில் 4318 பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே கணவன் மனைவியை திட்டியதால் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.
    • இது குறித்து கணவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொரவம் பாளையம் நடராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ரத்தினாள் (34). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்னர்.

    இந்த நிலையில் ரதினால் வேலைக்கு சென்று விட்டு வந்து சரியாக வீட்டு வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனைவியை கணவன் கண்டித்து வந்தார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து தங்கராஜ், ரதினாலை திட்டினார். இதனால் ரத்தினாள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.

    அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து தங்கராஜ் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகாலை 3 மணிக்கு நாடகத்தில் ஆடிப்பாடி மிக வேகமாக உச்சகட்டத்தில் பாடி கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்தார் ராஜய்யன். அடுத்த சில வினாடியிலேயே அவர் அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.
    • அவரது உடலுக்கு ஏராளமான நாடக நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள உக்கடம் அருகே குப்பன்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் மழை வேண்டி இரணியன் நாடகம் நடத்துவது வழக்கம்.

    இந்த நாடகத்தில் அதே ஊரை சேர்ந்த ராஜய்யன் (62) என்பவர் முன் நின்று நடத்துவதோடு அவரும் நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும், நாரதர் வேடத்திலும் நடித்து வந்தார்.

    இவருடைய பாடலையும், நடிப்பையும் பலரும் ரசித்து கொண்டு இருப்பதால் பல வருடங்களாக இந்த நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2 நாட்கள் இந்த நாடகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேப்போல் இந்த வருடத்திற்கான நாடகம் நடந்து கொண்டிருந்தது. இரவு வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. ராஜய்யன் நாடகத்தில் பங்கேற்று பாட்டு பாடிய படி நடித்துக் கொண்டிருந்தார். விடிய, விடிய நாடகம் நடந்து கொண்டிருந்தது.

    அதிகாலை 3 மணிக்கு நாடகத்தில் ஆடிப்பாடி மிக வேகமாக உச்சகட்டத்தில் பாடி கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்தார் ராஜய்யன்.

    அப்போது திடீரென அவர் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். அடுத்த சில வினாடியிலேயே அவர் அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கார் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜய்யன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரது உடல் குப்பன்துறைக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான நாடக நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
    • இதில் குறைந்தபட்சம் 75 முதல் அதிகபட்சம் 94 ரூபாய் வரைக்கும் ஏலம் விலை போனது. இந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

    அந்த வகையில் தற்போது பருத்தி வரத்து அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பிபாளையம், பச்சம்பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் குறைந்தபட்சம் 75 முதல் அதிகபட்சம் 94 ரூபாய் வரைக்கும் ஏலம் விலை போனது. இந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×