என் மலர்
ஈரோடு
- மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- இதுவரை 46 ஆயிரத்து 238 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயது மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முதலில் 9 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
தற்போது 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட, 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி முதல் வருகின்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது முதல் 60 வயதுக்கு ட்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரத்து 238 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.
- மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் மெயின் வீதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி (91). இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் வேலப்பம்பாளையத்தில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு இடது புறம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் இறந்த முதியவர் கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
- இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இரவு பெருந்துறையை அடுத்துள்ள சரளை ஏரிகருப்பராயன் கோவில் அருகே சென்றது. அப்போது பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்களின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஈரோடு பகுதியை சேர்ந்த கீர்த்தி (26), அவரது தாயார் சரஸ்வதி (55), முகமது ஹுசைன் (49), சுல்தான் (49), முனீரியா (46), நசீமா பானு (18), முரளி (34), அன்புக்கரசி (50), சிவஞானம் (53), ரஹிக் (31), ரஷீதா பேகம் (20) மற்றும் பஸ் டிரைவர் பெருந்துறை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கோபமடைந்த பசூல் அகமது இதுபோல் தான் பலமுறை சொல்லி வருகிறாய் என தகாத வார்த்தையில் பேசி கத்தியால் குத்தினார்.
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருப்பூரை சேர்ந்த பசூல் அகமது (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்தோடு:
பவானி லட்சுமி நகர் கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ரேவதி (52). வியாபாரி. இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியியை சேர்ந்த ஷாஜகான் என்பவரது மகன் பசூல் அகமது என்பவரிடம் வெங்காயம் வாங்கி உள்ளதாக தெரிகிறது.
இவர்கள் இருவருக்கும் வெங்காயம் வாங்கியதில் வரவு செலவு கணக்கு இருந்துள்ள நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வாங்கிய வெங்காயத்திற்கு ரூ.60 ஆயிரம் பாக்கி தொகை ரேவதி தர வேண்டி இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ரேவதியின் வீட்டிற்கு வந்த பசூல்அகமது பணம் கேட்டார். அப்போது சிறிது நேரம் கழித்து பணம் தருவதாக ரேவதி தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பசூல் அகமது இதுபோல் தான் பலமுறை சொல்லி வருகிறாய் என தகாத வார்த்தையில் பேசி கத்தியால் குத்தினார். இதில் ரேவதியின் வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதை தடுக்கும் பொழுது இடது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரேவதி 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசாரிடம் ரேவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருப்பூரை சேர்ந்த பசூல் அகமது (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பவானி, கொடுமுடியில் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
- இதையடுத்து 115 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு இன்று சென்று வீடுகளில் இருக்கும் சேறு, சகதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
கர்நாடகாவில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பி.பி. அக்ரஹாரம், கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் பவானி, கொடுமுடியில் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் இந்த பகுதியில் உள்ள 115 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆண்கள் ,குழந்தைகள் என 393 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. மேட்டூர் அணையிலிருந்து 75 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் பவானி ,கொடுமுடியில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் வடிவ தொடங்கியுள்ளது.
இதையடுத்து 115 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு இன்று சென்று வீடுகளில் இருக்கும் சேறு, சகதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணி முடிய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் வீடுகளில் குடியேற முடிவு செய்துள்ளனர். அதுவரை முகாமில் தங்கி இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.96 அடியாக உள்ளது.
- இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை அளவும் குறைந்துள்ளது இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.96 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும்.அணைக்கு வினாடிக்கு 5251 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த மாதம் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும்.
இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.
இதனால் பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர் பொதுப்பணி துறையினர் உஷார் படுத்தப்பட்டு பவானி கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .
- முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பச்சைமலை ரோட்டில் உள்ள கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .
இதையொட்டி 18-ந் தேதி கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், பெருபூஜை, கிடாய் வெட்டுதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கோபி, மொடச்சூர் நாயக்கன் காடு, கரட்டூர் பாரியூர்மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.
- பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.
- இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் தமிழக- கர்நாடக இடையே இரு மாநில எல்லையை கடக்கும் மிக முக்கியமான சாலை பண்ணாரியிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மிகவும் அடர்ந்த வன ப்பகுதியில் அமைந்திருக்கும் சாலை என்பதால் சாலையில் வன விலங்குகள் அடிக்கடி கடந்து செல்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை என்பதால் ரோட்டில் வாகனங்கள் இல்லாததால் யானைகள் இரவு நேரங்களில் அதிகமாக ரோடுகளில் நின்று கொண்டு உலாவி வருகிறது.
இந்த நிலையில் பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.
ஒற்றை யானை என்பதால் எந்த நேரமும் வாகனத்தை தாக்க கூடும் என அச்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் யானை மெதுவாக ரோட்டில் கடந்து சென்றது.
பிறகு வாகனங்கள் செல்ல தொடங்கின. இரவு நேரங்களில் போக்குவரத்து தடை என்பதால் விலங்குகள் அதிகமாக ரோடுகளில் சுற்றி திரிகின்றன.
இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே வனப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையின அறிவுறுத்தினர்.
- ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும், சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பொருளில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளி சுவரில் வரைந்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சரவணா தியேட்டர் ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் சவுந்தர்ராஜ், கோபி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வேலுமணி, அரிமா சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் அருண், ஆதிரை அரிமா சங்க தலைவர் தேவி ஜெகன், உழவன் ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், சமுதாய அமைப்பாளர் ஈஸ்வர மூர்த்தி, அனைத்து நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
சிறந்த ஓவியத்திற்கான முதல் பரிசை முருகன் புதூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் பரிசை வேங்கம்மையார் உயர்நிலைப் பள்ளியும், மூன்றாம் பரிசை நாயக்கன் காடு நகராட்சி தொடக்க பள்ளியும் பெற்றது.
சிறந்த ஓவியம் மற்றும் கருத்துரு நிறைந்த ஓவியம் வரைய மாணவர்களுக்கு சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு முதல் பரிசும், நகராட்சி நடுநிலைப்பள்ளி டவுன் ஆசிரியர் வடிவாம்பிகைக்கு இரண்டாம் பரிசும், ஜெயராம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பிரியவதனாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
ஓவியம் வரைதலுக்காண சிறப்பு பரிசை மொடச்சூர் நகராட்சி தொடக்க பள்ளியும், வேங்கமையார் தொடக்க பள்ளியும், நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அனைத்து நகராட்சி பள்ளிகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
- தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
- அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர்:
தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வு நடைபெறுகிறது.
இதையடுத்து தேர்வு எழுதும் மையங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை பார்வையிட்டு பள்ளி கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளதா அடிப்படை வசதி இருக்கின்றதா மின்விளக்குகள் சரிவர வேலை செய்கின்றதா ? என்று ஆய்வு செய்தார்.
மேலும் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
அப்போது அவருடன் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், அந்தியூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் யசோதா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி வந்திருந்தனர்.
அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.
- கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும்.
ஈரோடு:
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் வந்தே மாதரம் ரதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கு சென்று அதன் பிறகு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ரத யாத்திரை வந்தது. நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் வந்து பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதரம் ரத யாத்திரையானது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி வேலூர் கோட்டையில் இருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த ரத யாத்திரை செல்ல இருக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த மண்ணான சென்னிமலைக்கு சென்று வந்தோம். இதைத்தொடர்ந்து கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும். போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்று உள்ளனர். மின் கட்டண உயர்வுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தில் ஹீமோ குளோ பினோபதி திட்ட விரிவாக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த விழாவுக்காக ஈரோட்டில் இருந்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அரசு வாகனம் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் மாலை அந்த அரசு வாகனம் ஈரோடு சென்றது.
அந்த அரசு வாகனம் ஆசனூர் தேசிய நெடுஞ் சாலை செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு ஒரு சரக்கு வேன் சென்றது.
அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போது நிகழ்ச்சி முடித்து கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த வழியாக வந்தார். விபத்து குறித்து அமைச்சருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து அமைச்சர் சம்பவ இடத்தில் இறங்கி விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






