என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the floodwaters that surrounded the houses started receding"

    • பவானி, கொடுமுடியில் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
    • இதையடுத்து 115 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு இன்று சென்று வீடுகளில் இருக்கும் சேறு, சகதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    கர்நாடகாவில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பி.பி. அக்ரஹாரம், கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் பவானி, கொடுமுடியில் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியில் உள்ள 115 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆண்கள் ,குழந்தைகள் என 393 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. மேட்டூர் அணையிலிருந்து 75 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் பவானி ,கொடுமுடியில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் வடிவ தொடங்கியுள்ளது.

    இதையடுத்து 115 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு இன்று சென்று வீடுகளில் இருக்கும் சேறு, சகதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணி முடிய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் வீடுகளில் குடியேற முடிவு செய்துள்ளனர். அதுவரை முகாமில் தங்கி இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×