என் மலர்
ஈரோடு
- காலில் புண் ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியைச் சேர்ந்தவர் பால முரளி கிருஷ்ணன் (49). இவரது அண்ணன் மாரியப்பன் (51).தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.
மாரியப்பனுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக காலில் புண் ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து சம்பவத்தன்று பாலமுரளி கிருஷ்ணன் தனது அண்ணன் மாரியப்பனை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில், காலில் ஏற்பட்டிருந்த புண் காரணமாக வலி அதிகமானதால், நேற்று முன் தினம் மாலை மாரியப்பன் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார்.
இதையடுத்து, மாரியப்பன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் பணத்தை பெற்றுக்கொண்டு துணை தாசில்தார் போல் கையெழுத்து போலியாக போட்டு பட்டா தயாரித்து கொடுத்து வந்ததால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவகுமாரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் விவகா ரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், தொழில் அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போலி பட்டா தயார் செய்து மக்களை மோசடி செய்த கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.85 அடியாக உள்ளது.
- இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.37 அடியாக உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக பெய்தது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.85 அடியாக உள்ளது. வினாடிக்கு 974 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி திறந்து விட்ட நிலையில் இன்று 700 கன அடியாக குறைக்கப்ப ட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 805 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
எந்த நேரத்திலும் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முகாம் அமைத்து அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டுபள்ளம் அணைகள்
இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டுபள்ளம் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாக உள்ளது.
இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.37 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.4 அடியாக உள்ளது.
- ஒரு காம்பவுண்டு வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை .
- காம்பவுண்ட் வீட்டில் மொத்தம் 4 வீடுகள் வாடகைக்கு உள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு காம்பவுண்டு வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் 2 வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சென்று ஈரோடு ஆர்.என். புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டைரிகள், சிம்கார்டு, வங்கி பாஸ்புக் உள்ள ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்ட போலீசார் அந்த குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அருகில் வசிக்கும் பக்கத்து வீட்டுகாரர்களிடம் அவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். காம்பவுண்ட் வீட்டில் மொத்தம் 4 வீடுகள் வாடகைக்கு உள்ளன.
அங்கு வசிபவர்களிடம் எத்தனை வருடமாக இங்கு தங்கி உள்ளனர். சந்தேகப்படும் படி நபர்கள் யாரேனும் வந்து சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நடைபெறுகிறது.
- இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
- இது குறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (72). இவரது மகன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த சின்னம்மாள் கடந்த 23-ந் தேதி அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி குள்ளனூரில் வசிக்கும் தனது மகள் ஜோதிலட்சுமி வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சின்னம்மாள் கோவிலூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லாமல் இருந்தது ஜோதிலட்சுமிக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து ஜோதிலட்சுமி சின்னம்மாளை தேடி வந்த நிலையில் பூதப்பாடி அருகே உள்ள வாய்க்கால் கரையில் சின்னம்மாள் மாத்திரை சாப்பிட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன் நேரில் சென்று பார்த்த போது மாத்திரை சாப்பிட்டு கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுபள்ளம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்குவதாலும், மின் தடையாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், பெருந்துறை, நம்பியூர், வரட்டுபள்ளம், சென்னிமலை, தாளவாடி, கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, அம்மாபேட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஈரோடு, நாடார்மேடு பகுதியில் உள்ள விக்னேஷ் நகர், கெட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இன்சுலேட்டர் வெடித்ததில் மின் தடை ஏற்பட்டதை கண்டறிந்த மின்சாரத்துறையினர் அதனைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரவு 10 மணிமுதல் அதிகாலை வரை அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதேபோல மாவட்ட த்தின் பிற பகுதியான கோபியிலும் மின் தடை ஏற்பட்டது. இதுபோல் மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுபள்ளம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் வரட்டுபள்ளம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
தொடர்ந்து இரவு முதல் காலை வரை சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
வரட்டுபள்ளம்-41, பெருந்துறை-26, நம்பியூர்-24, சென்னி மலை-24, தாளவாடி-16, கவுந்தப்பாடி-12, கோபி-8, மொடக்குறிச்சி-5, அம்மாபேட்டை-4.4, ஈரோடு-4, கொடுமுடி-2, பவானி-2.
- சாம்ராஜ்நகரில் இருந்து கோவை சென்ற கார் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.
- காரில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தாளவாடியில் இருந்து கரும்புகள் லாரிகள் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள கரும்புஆலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது. தற்போது இரவில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால் சரக்கு வாகனங்களின் எண்ணி்ககை குறைந்தது. இதனால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை சென்ற கார் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. காரில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர். சோதனைச்சாவடி அருகே சாலையில் ஒற்றை யானை கரும்புதுண்டுகளை சாப்பிட்டபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.
கார் மெதுவாக அதனருகே சென்றபோது சாப்பிடும் போது இடையூறு செய்வதாக கருதிய யானை காரை துரத்தியது. அப்போது அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் கதறினர். டிரைவர் வேகமாக காரை பின்னோக்கி இயக்கியதால் அனைவரும் தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
- தற்போது ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.
இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் வந்து காவிரியில் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கூடுதுறை காவிரி ஆற்றின் படித்துறையில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்கள் தொட்டி யில் இருந்து தண்ணீர் எடுத்து குளிப்பதற்கு வசதியாக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் குளிப்பதற்காக தனி தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிகாரம் மற்றும் திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு இருந்த தடையையும் நீக்கியுள்ளனர்.
இதற்காக கோவிலில் ஆங்காங்கே இடங்கள் தயார் நிலையில் உள்ளது. இதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, என்.சி.சி. என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- ஈரோட்டில் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியின் மாதிரிச்சுடர் ஏந்தி, தொடர் ஓட்டம் நடைபெற்றது.
- ஈரோடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியின் மாதிரிச் சுடர் ஏந்தி, தொடர் ஓட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
இந்தத் தொடர் ஓட்ட நிகழ்ச்சியை, கலெக்டர் அலுவலக வளாகத்தில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், ஈரோடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வுத் தொடர் ஓட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை சந்திப்பு, பிரப் சாலை, பன்னீர் செல்வம் பூங்கா சென்று, மீண்டும் பிரப் சாலை வழியாக அரசு மருத்துவமனை சந்திப்பு, மேட்டூர் சாலை வழியாக வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, எம்.எல்.ஏ. வெங்கடாசலம், துணை மேயர் செல்வராஜ் மற்றும் விளையாட்டுத் துறையினர் கலந்துகொண்டனர்.
பின்னர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் எப்போதும் நடைபெறாது அளவு 44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது சுமார் 188 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இது ஒட்டுமொத்த விளையாட்டு துறையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சுமார் 40 ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
எனவே ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் சிந்தடிக் ஓடு தளம் அமைக்கும் திட்டம் அங்கு மாற்றப்படுகிறது. உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது என்று ஏற்கனவே மின்துறை அமைச்சர் விளக்கியுள்ளார். தமிழகத்தின் நிதிநிலை எந்த அளவு உள்ளது என்று மக்களுக்கே தெரியும்.
அதனால் தான் வீட்டு வரி கூட உயர்த்தப்பட்டது. ஈரோடு நகரில் குடிநீர் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வருவதாக புகார் கூறப்பட்டாலும் இதற்கு காரணம் முன்பிருந்த அ.தி.மு.க. அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவைகளை முறையாக அ.தி.மு.க. அரசு ஈரோட்டில் செயல்படுத்தவில்லை.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்கிறோம் .பாதாள சாக்கடை திட்டத்தில் கூட பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதையெல்லாம் நாங்கள் சரி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு பர்கானா மாவட்டம் சந்தேஷ்கல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் அமின் மோலா (34).
இவர் கடந்த ஒன்றரை வருடமாக ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவரது இளைய மகள் பாத்திமா (13) மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது.
உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாத்திமாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ராகுல் மோலா அளித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
ஈரோடு:
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்கள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. எனவே, நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மா பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கனிமொழி கூறியதாவது:
தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக கோ 52, சி.ஆர் – 1009 சப் 1, ஐ.ஆர். 20, ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, பி.பி.டி – 5204, சம்பா சப் – 1, டி.ஆர்.ஒய் – 3 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.
இந்த ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணு யிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எனவே விவசாயிகள் பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது.
- புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளாவடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனச்சரகத்தில் மான், யானை, புலி, காட்டெருமை, செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
இந்த மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதை குளத்தின் மறுபக்கம் இருந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






