என் மலர்
ஈரோடு
- மதுக்குடிக்க பணம் தராததால் மன வேதனையில் வாலிபர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா என்ற செந்தில்குமார்(48). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(45). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமார் அவரது அம்மா பத்மாவுடன் வசித்து வந்தார்.
செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கடந்த 3-ந் தேதி மதுகுடிக்க அவரது அம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
- இதனால் இந்த பகுதியை சேர்ந்த 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பவானி பகுதி மக்கள் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பவானி கந்தன் நகர், காவிரி நகர், பாலா கேஸ் குடோன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என 60 குடும்பங்களை சேர்ந்த 70 ஆண்கள், 69 பெண்கள், 34 சிறுவர்கள் என மொத்தம் 173 பேர் கந்தன் பட்டறை பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை தாசில்தார் சரவணன் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்று இருந்தார். அப்போது சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி செல்போன் மூலம் பவானி கந்தன் பட்டறை பகுதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண்ணிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அந்த பெண்ணிடம் முகாமில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டிருந்தார். மேலும் உங்களுக்கு என்ன வசதிகள் செய்ய வேண்டுமோ அதை கலெக்டர் இடம் கூறுங்கள் அவர் செய்து கொடுப்பார் என்று கூறினார். முதல்-அமைச்சர் தன்னிடம் செல்போனில் பேசியதால் அந்தப் பெண் மகிழ்ச்சி அடைந்தார்.
- மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
- மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
காவிரி நீர் பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கே.எஸ்.ஆர்.கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 2.15 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதேநேரம், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்து, மழை நீரும் காவிரியில் கலந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஈரோடு -பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தைவிட ஒரு அடி உயர்ந்து தண்ணீர் சென்றது. காவிரி ஆற்றில் இன்று 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆறு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை பகுதியான ஈரோடு, பவானி, அந்தியூர், கொடுமுடி ஆகிய நான்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பவானி கந்தன் நகர், காவிரி நகர், மார்க்கெட் வீதி, பவானி பழைய பஸ் நிலையம், குப்பம் பகுதி, அம்மாபேட்டை, கருங்கல் பாளையம் காவிரி கரை, கொடுமுடிஎன பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 369 குடும்பங்களை சேர்ந்த 519 ஆண்கள், 547 பெண்கள், 215 சிறுவர்கள் என மொத்தம் 1,277 பேர், 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பவானி காடப்பநல்லுார், நேதாஜி நகர், காட்டூர், புது குடியிருப்பு, கொடுமுடி தாலுகா இலுப்பை தோப்பு, வடக்கு தெரு, சத்திரபட்டி, நஞ்சை கொளாநல்லி, ஈரோடு மாநகராட்சி பகுதி காவிரி நகர், ராகவேந்திரா கோவில் வீதி என பல்வேறு இடங்களில் தண்ணீர் புகுந்ததால், அங்குள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் புகுந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நேற்று 22-வது முறையாக 102 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
முதலில் கீழ் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக மேல் மதகு வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 6700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரத்து 692 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால் பவானிசாகர் முதல் பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பகுதியிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் இரு கரையையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
சத்தியமங்கலம் ஆற்று பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி செல்போன்களில் போட்டோ எடுத்து சென்றனர். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கொடிவேரி அணைப்ப குதியிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று இரண்டாவது நாளாக கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பவானி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால வருவாய் துறையினர் பொதுப்பணி துறையினர் முகாமிட்டு கரையோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 800 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
- வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் சுதா ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைத்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும், சிகிச்சையில் உள்ள நோயாளிகளை 15 நாட்களுக்குள் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதனை அடுத்து மருத்துவமனை வழக்கம் போல் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த ஐகோர்ட் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்தில் சீல் அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் சீல் வைக்க உத்தரவிட்டது.
சுதா மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உத்தரவால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திடீரென அவர்கள் மருத்துவமனை முன்பு நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவு சுதா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 800 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அந்தந்த ஆஸ்பத்திரியின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் அவசரகால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற்றன.
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சி.என். ராஜா கூறியதாவது:-
சுதா மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்துறை மருத்துவமனையாக உள்ள நிலையில் ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைப்பது என்பது ஏற்புடையதல்ல.
இந்த நடவடிக்கையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று ஒரு நாள் மூடப்படும். புறநோயாளிகள் பிரிவு செயல்படாது. இது தொடர்பாக மாநில அளவில் போராட்டம் நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புத்தக கண்காட்சிகளுக்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழின் பெருமையை, சிறப்பை உணருவதற்கு புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன
ஈரோடு:
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் ஆண்டு தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு புத்தக திருவிழாவை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 5 முதல் 16 -ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புத்தக திருவிழா இன்று தொடங்கியது.
இன்று மாலை துவக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொலி மூலம் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஊரில் - அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தன்னைப் போன்ற எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அறிஞர்களை, தமிழ்ப்புலவர்களை, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாக தொய்வில்லாமல் நடத்தி வருகிறார் ஸ்டாலின் குணசேகரன். அவரது அயராத தமிழ் ஆர்வத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். இதுபோன்ற ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் குணசேகரன்கள் உருவாக வேண்டும்!
புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வதும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதும் மகிழ்ச்சிக்குரியது. ஏனென்றால் இவை அறிவுத்திருவிழா! தமிழ்த் திருவிழா! தமிழாட்சி - தமிழர்களின் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில். இத்தகைய தமிழாட்சி நடக்கும் நாட்டில் தமிழ்த் திருவிழாக்களும் அதிகம் நடந்தாக வேண்டும்.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன்.
சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்த முதலில் ஜனவரி மாதம் தேதி குறிக்கப்பட்டது. கொரோனா பரவிய காரணத்தால் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அரங்கம் அமைத்து விட்ட காரணத்தால் பதிப்பாளர்களுக்கு இழப்பும் ஏற்பட்டது. இதனை முன் வைத்து பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். உடனடியாக 50 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!
வழக்கமாக, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் 75 லட்சத்துடன் இந்த ஐம்பது லட்சத்தையும் சேர்த்து ஒன்றே கால் கோடி ரூபாயை வழங்கினோம். இதைத் தொடர்ந்து, பதிப்பாளர்களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்த புத்தகப் பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
தமிழின் பெருமையை, சிறப்பை தமிழர்கள் அனைவரும் உணருவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன. பட்டங்கள் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவின் கூர்மைக்காக, நம்முடைய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக, நாம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதற்காக, நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காக, அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.
அதனால்தான் என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலைகள், சால்வைகள், போர்வைகள் அணிவிக்க வேண்டாம், புத்தகங்களைத் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை எனும் இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர்தான் புத்தகங்கள்! பொய்யும் புரட்டும் கலந்த பழமைவாதம் எனும் கடலில் சிக்கித் தவிக்காமல், நாம் கரை சேர உதவுகிற பகுத்தறிவுக் கப்பல்கள்தான் புத்தகங்கள்!
'வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் விரும்பினார்கள். அப்படி அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாகவாவது அமைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்! வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டுங்கள்!

புத்தகத் திருவிழா துவக்க விழாவில் பங்கேற்றவர்கள்
இளைஞர்களே… நிறைய படியுங்கள்! ஏன்… எதற்கு… எப்படி? என்று கேளுங்கள்! ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடாதீர்கள்! அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்! எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்! இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் – அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்! ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள்!
ஆனால், தமிழ்ச்சமூகம் பகுத்தறிவுச் சமூகம்! பொய்களையும் – கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம்! தமிழகம் அறிவுப் புரட்சி மாநிலமாக - பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம். எல்லாவற்றுக்கும் ஈரோடு வழிகாட்டியது போல புத்தகத் திருவிழாவுக்கும் வழிகாட்டுகிறது ஈரோடு.
இவ்வாறு அவர் பேசினார்.
- 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
- பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு இன்ஸ்பெ க்டர் பன்னீர்செல்வம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கருங்கல்பாளையம், கிருஷ்ணம் பாளையம், பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் வாகன சோதனை–யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளை யத்தை சேர்ந்த பன்னீர் (60) சுரேஷ் (36) ஈரோடு நொச்சிகாட்டு வலசை சேர்ந்த தினகரன் (29) நாமக்கல் குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி ( 23) ஈரோடு கருங்கல்பாளையம் சுரேஷ் (35) அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
- போதைப் பொரு ட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தனர். அவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று அவர்க ளிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பதும், அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது.
- இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தாளவாடி:
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
- மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், கடம்பூர் ஆசனூர் அந்தியூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சத்தியமங்கலம் கடம்பூர் வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சில கிராமங்களில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு ள்ளன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று காலை 5 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
பள்ளிக்கு சென்ற மாணவர்கள், பணிக்கு சென்ற பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம்,நம்பியூர் , மொடக்குறிச்சி, வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், சென்னிமலை, கவுந்தப்பாடி போன்ற பகுதிகளிலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-48, பெருந்துறை – -6, கோபி-2, தாளவாடி-11, சத்தியமங்கலம்-6, பவானிசாகர் - 4.8, நம்பியூர்-48, சென்னிமலை-17, மொடக்குறிச்சி-28, கவுந்தப்பாடி-8, எலந்தக்குட்டை மேடு-19.6, அம்மாபேட்டை-1.2, கொடிவேரி-4.2, குண்டேரிப்பள்ளம்-22.2, வறட்டுப்பள்ளம்-4.2 மாவட்டத்தின் மொத்த மழையளவு 222.2 மி.மீ.
- நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 43). இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேனில் துணி லோடு ஏற்றி கொண்டு சென்றார். அவருடன் அண்ணா மலை என்பவர் உடன் சென்றார்.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வழியாக மற்றொரு வேன் வந்தது.
அப்போது அந்த வேனை கோபாலகிருஷ்ணன் முந்த முயன்றார். அப்போது நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அண்ணா மலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இற ந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கஞ்சா உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.
- தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார்.
ஈரோடு:
தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றி லும் ஒழிக்கும் நோக்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட் கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் கஞ்சா உபயோக ப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் இந்த விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடை பெற்றன. மேலும், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்ய ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் 53 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் மூலமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 9 பேர் மீது 5 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறும்போது,
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 144 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ய ப்பட்டு, 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார்.
சூரம்பட்டி:
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திரு விழா உள்ள நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தக திருவிழா 18 வது ஆண்டாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை )முதல் வருகிற 16 -ந் தேதி வரை இந்த புத்தக திரு விழா நடக்கிறது .
இதன் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .அமைச்சர் முத்துசாமி, தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ். கே .எம் மயிலானந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் . மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசுகிறார்.
இந்த விழாவை சென்னை யில் இருந்து முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ .ஆகியோர் வாழ்த்து பேசுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.






