என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு- கரையோர பகுதிகள் தீவிரமாக கண்காணிப்பு
- மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
- மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
காவிரி நீர் பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கே.எஸ்.ஆர்.கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 2.15 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதேநேரம், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்து, மழை நீரும் காவிரியில் கலந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஈரோடு -பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தைவிட ஒரு அடி உயர்ந்து தண்ணீர் சென்றது. காவிரி ஆற்றில் இன்று 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆறு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை பகுதியான ஈரோடு, பவானி, அந்தியூர், கொடுமுடி ஆகிய நான்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பவானி கந்தன் நகர், காவிரி நகர், மார்க்கெட் வீதி, பவானி பழைய பஸ் நிலையம், குப்பம் பகுதி, அம்மாபேட்டை, கருங்கல் பாளையம் காவிரி கரை, கொடுமுடிஎன பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 369 குடும்பங்களை சேர்ந்த 519 ஆண்கள், 547 பெண்கள், 215 சிறுவர்கள் என மொத்தம் 1,277 பேர், 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பவானி காடப்பநல்லுார், நேதாஜி நகர், காட்டூர், புது குடியிருப்பு, கொடுமுடி தாலுகா இலுப்பை தோப்பு, வடக்கு தெரு, சத்திரபட்டி, நஞ்சை கொளாநல்லி, ஈரோடு மாநகராட்சி பகுதி காவிரி நகர், ராகவேந்திரா கோவில் வீதி என பல்வேறு இடங்களில் தண்ணீர் புகுந்ததால், அங்குள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் புகுந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நேற்று 22-வது முறையாக 102 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
முதலில் கீழ் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக மேல் மதகு வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 6700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரத்து 692 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால் பவானிசாகர் முதல் பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பகுதியிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் இரு கரையையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
சத்தியமங்கலம் ஆற்று பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி செல்போன்களில் போட்டோ எடுத்து சென்றனர். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கொடிவேரி அணைப்ப குதியிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று இரண்டாவது நாளாக கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பவானி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால வருவாய் துறையினர் பொதுப்பணி துறையினர் முகாமிட்டு கரையோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






