என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சித்தோடு போலீசார் போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபரை கைது செய்தனர்.
    • மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகில் உள்ள ஆர்.என். புதூர் பகுதியில் கடந்த 7-ந் தேதி சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்கு பின்னாக அவர்கள் பதில் அளித்த நிலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அதில், சித்தோடு ராயபாளையம் புதூர் பகுதியில் வசிக்கும் திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய இருவரும் வீட்டில் டேப்பேன்டாட்டல் என்ற போதை மாத்திரைகள் வைத்து டாக்டர் அனுமதி சீட்டு இல்லாமல் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் சேலத்தில் இருந்து வாங்கி வந்து விற்கப்பட்ட இந்த மாத்திரைகளை ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் சப்ளை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய 2 பேரையும் சித்தோடு போலீசார் கைது செய்து தலை மறைவான முக்கிய நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு, கனி ராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சஞ்சய் குமார் என்கிற சஞ்சய் (23) என்பதும் போதை மாத்திரைகள் வைத்து விற்பனை செய்து தலைமறைவாக இருந்த முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
    • இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (63). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர் பாச்சாமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி வேலூருக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது செல்போனிற்கு கணவர் பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி விரைவாக வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பழனிச்சாமி குடிபோதையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

    உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

    மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் சிரமமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வனச்சரகர் தினேஷ் தலைமையில் வன பகுதியில் சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
    • வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 2பேருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திக்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கோட்டமாளம் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் (55) என்பவரை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதாக கூறி அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வனச்சரக அலுவகத்திக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து வனச்சரகர் தினேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்து றையினர் ஆய்வு மேற்கொ ண்டனர். ஆய்வில் மாடு மேய்த்த திம்மையன் என்பவரை கரடி தாக்கவில்லை என்பது உறுதியானது.

    இதையடுத்து திம்மையன், நாராயணன் ஆகிய 2 பேரும் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

    • அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார்.
    • சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு, கொங்கம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பானுமதி (31). இவர்களுககு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 16-ந் தேதி பானுமதி தனது தாய் பிரேமாவுக்கு போன் செய்து மகன் ரோகித்தை கூட்டி வரும் பொது சேமியா வாங்கி வர சொல்லி உள்ளதாக தெரிகிறது. பானுமதி மகன் ரோகித்துடன் அவரது தாய் சேமியா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டில் பானுமதி மகள் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அம்மா எங்கே என் கேட்ட போது அம்மா வீட்டின் அறையை சாத்திக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அறையை தட்டிப் பார்த்த போது அறை தாழிட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

    அப்போது அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானுமதியின் தாய் பிரேமா கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பானுமதியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக தாய் பிரேமா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஒட்டப்பாறை ஊராட்சி ஊத்துக்குளி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் பிரவீன்குமார் (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சம்பவத்தன்று பிரவீன்குமார் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் கொடிகம்பம் அருகே ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.

    இதில் பிரவீன்குமார் தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்தியூர்-பிரம்மதேசம் பிரிவில் உள்ள கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 7 கிலோ எடையில் உள்ள 714 பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    போலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன்(34) கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பெரிய வந்தது.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 7 கிலோ எடையுள்ள 714 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.9,000 ஆகும்.

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வந்தது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்தி ற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • இன்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கினர்.
    • பவானி கூடுதுறையில் புனிதநீராடி பரிகாரம் செய்து சென்றனர்.

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரசித்தி பெற்ற பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையை மூழ்கியபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் கரையோரம் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி முதல் பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது 22 ஆயிரம் கனஅடி மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி கூடுதுறையில் இன்று முதல் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதற்காக நேற்று மாலை முதல் படித்துறை பகுதியில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டதால் இன்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் பவானி கூடுதுறையில் புனிதநீராடி பரிகாரம் செய்து சென்றனர். 15 நாட்களுக்கு பின்பு பவானி கூடுதுறையில் புனிதநீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமி கருமுட்டை விற்ற விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி மற்றும் ஆதார் அட்டை போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் பெண் புரோக்கர் மாலதியை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணை அறிக்கையை மருத்துவ குழுவினர் தமிழக அரசிடம் வழங்கினர். இதையடுத்து சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த ஆஸ்பத்திரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி கருமுட்டை விற்ற விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதுதொடர்பான நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

    ஈங்கூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    ஈங்கூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    • பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி. அக்ரஹாரம் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா (50). ஈரோடு ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரபீக் வேலை பார்க்கும் பாரில் மது குடிக்க வந்த ஒருவரின் செல்போன் திருட்டு போனது.

    இது குறித்து ரபீக் மதுபாரில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அடிக்கடி அந்த மதுபாருக்கு வந்து செல்லும் ஈரோடு ஈ.வி.என்.சாலை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் போனை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து ரபீக் பிரகாசிடம் இருந்து அந்த மொபைல் போனை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதனால் ரபீக் மீது பிரகாஷ் ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ரபீக் வேலையை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் மரக்கட்டையால் ரபீக்கை தாக்கி அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    இது குறித்து ரபீக் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    ×