என் மலர்
ஈரோடு
- பங்களாபுதூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த நாகராஜை கைது செய்தனர்.
- பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் இந்த வழியாக நடந்து வந்தார். 5 வயது சிறுமியை வழிமறித்து வீட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகராஜ் மீது பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் இது பற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நாகராஜை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
- இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.
இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர், நாயக்கர் வீதியை சேர்ந்தவர் சின்னகத்தி(56). இவரது மனைவி மீனாட்சி (50). இந்நிலையில் சின்ன கத்தி கடந்த 2 வருடமாக கால் வலியால் அவதி அடைந்து வந்துள்ளார்.
இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை என கூறப்படுகிறது.
கால் வலி காரணமாக தினமும் குடித்துவிட்டு வந்து உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என்று கூறி வந்துள்ளார். அவரது மனைவி ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13-ந் தேதி மீனாட்சி கணவரிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சின்னகத்தி மட்டும் இருந்தார்.
மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்தபோது நீரில் மூழ்கி இறந்தது தனது கணவர் சின்ன கத்தி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாளவாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னகத்தி ஆற்றில் குளித்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.
- அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமத்தில் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வமாக உள்ளது.
இந்த கோவிலில் ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நடைபெற உள்ளது.
அன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதில் ஊர் மக்கள் மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இன்று வாழவும் அம்மனை வழிபடுவார்கள். கும்பாபிஷே–கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- ஈரோடு டவுன் போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு டவுன் சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பை பட்டி , கக்கன் நகரைச் சேர்ந்த திருமூர்த்தி (40) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
அனுமதி இன்றி அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்றது அவர் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,100 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையான போலீசார் பவானி - அந்தியூர் பிரிவில் சோதனையில் ஈடுபட்டபோது முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டு இருந்தார்.
அவரை சோதனை செய்தபோது அனுமதி இன்றி 6 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொ–ண்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (73) என்ன தெரிய வந்தது.
இதையடுத்து பவானி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போல் சிறுவளூரில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் குமார் (33) போலீசார் கைது செய்தனர்.
- சென்னிமலை பேரூராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
- இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
சென்னிமலை:
சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சத்தி ரசேகர் தலைமையில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னிமலை பேரூ ராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டித்ததை மீண்டும் வழங்க வேண்டும்.
இதை உடனடியாக 2 வாரங்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதில் அவைத்தலைவர் ஆதவன், துணை செய லாளர் சாவித்திரி, பொரு ளாளர் காவேரி ரங்கன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஜம்பு என்கிற சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மாரப்பன், மெட்றோ டெக்ஸ் தலைவர் கோவிந்தசாமி,
முன்னாள் பேரூர் செயலாளர் கொங்கு கந்தசாமி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், மகளிரணி சாந்தி, வார்டு செயலா ளர்கள் சூளை ஈஸ்வரன், ரமேஷ், சுப்பிரமணி, கே.அண்ணா துரை,
பழக்கடை குமார், தாரை. லட்சு மணன், லோகு, பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ரமேஷ், திருநாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
இதன் காரணமாக அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும் 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது.
- பவானிசாகர் அணை கடந்த 2018, 2019, 2020, 2021,2022-ம் ஆண்டு என தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு.
சுமார் ரூ.10.50 கோடி செலவில் அணை கட்டப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டு தொடர்ச்சியான கட்டுமான பணிகளுக்கு பின்னர் 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் பவானிசாகர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இந்த பவானிசாகர் அணையில் 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம். இதன் உயரம் 105 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம். கோபி, புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த அணையில் 2 நீர் மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
1953-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளின் போது அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு நேரில் பார்வையிட்டார்.
இந்த அணை கட்டப்பட்டதால் இந்த பகுதியில் இருந்த தரிசு நிலங்கள் அனைத்தும் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. சிறு சிறு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குடிநீர் தேவை பூர்த்தி ஆனது.
பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும் 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது. அதேபோல் பவானிசாகர் அணை கடந்த 2018, 2019, 2020, 2021,2022-ம் ஆண்டு என தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கனஅடி நீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான இந்த பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
- வனப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஆண் யானை ஒன்று அங்கு இருந்த குட்டையில் இறங்கி தண்ணீரில் விளையாடி உள்ளது.
- வனத்துறையினர் ரோந்து சென்ற போது யானை உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்.பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான யானை, சிறுத்தை, புலிகள் உள்ளது.
யானை உள்ளிட்ட வன விலங்குகள் வன எல்லையில் உள்ள கிராம பகுதிக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள் புகுந்தும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இதனால் வன எல்லையில் மின்வேலி அமைத்தும், அகழி வெட்டியும், வனவிலங்குகள் கிராம பகுதிக்குள் வராமல் வனத்துறையினர் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று டி.என்.பாளையம் வனசரகம் கொங்கர்பாளையம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து மின்வேலிகளை உடைத்து வன எல்லையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மாரப்பன் என்பவரது நிலத்திற்குள் புகுந்த சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று அங்கு இருந்த சிறிய அளவிலான குட்டையில் இறங்கி தண்ணீரில் விளையாடி உள்ளது.
சிறிது நேரத்தில் அந்த யானை குட்டையிலேயே விழுந்து உயிரிழந்தது, வனத்துறையினர் ரோந்து சென்ற போது யானை உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் கிருபா சங்கர் மற்றும் டி.என்.பாளையம் வனசரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை கால்நடை மருத்துவர் சதாசிவம் சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூறு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சுமார் 12 வயது மதிக்கத்த ஆண் யானை கூட்டத்தை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்குள் வந்து குட்டையில் இறந்து கிடந்தது, உடற்கூறு ஆய்விற்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் முழுமையாக தெரிய வரும் என்று கூறினர்.
- முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருக்கிறார்.
- பெருந்துறை -கோவை ரோட்டில் உள்ள ஏரி கருப்பன் கோவில் பகுதிக்கு அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் சென்று இடத்தை பார்வையிட்டனர்.
பெருந்துறை:
முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிற 25, 26-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருக்கிறார்.
26-ந் தேதி ஈரோடு சோலாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 26-ந் தேதி ஈரோடுக்கு பதில் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக பெருந்துறை -கோவை ரோட்டில் உள்ள ஏரி கருப்பன் கோவில் பகுதிக்கு அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் சென்று இடத்தை பார்வையிட்டனர்.
தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கருமா ண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வன், துணைத் தலைவர் சக்தி குமார்,
யூனியன் கவுன்சிலர்கள் துடுப்பதி நவபாரதி, செந்தில்குமார் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோளி பிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் கோகுல், நல்லசிவம், பால விக்னேஷ், சரவணன், சுப்பிரமணியன், ஜெயந்தி வாட்டர் கோபால்,
நந்தினி செல்வகுமார், துரைராஜ், வைகை சுரேஷ், தங்கமுத்து, சதீஷ் பிரவீன் குமார், பழனிசாமி, சுப்பிரமணி, ஒசப்பட்டி பொன்னுச்சாமி, ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
- நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
அம்மாபேட்டை:
கடந்த 20 நாட்களுக்கு மேல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் ஜூலை 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.இதனால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வெள்ள அபாயம் நிலவியதால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
தண்ணீர் குறைந்த அளவிலேயே வருவதால் நேற்று பிற்பகல் முதல் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
கடந்த 25 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழி யாக 8 கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்புத்தன்மை 780 டிடிஎஸ்ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
- திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலைகளால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத்தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை அதிகளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி பல வருடங்களாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகளும் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மழை வெள்ளம் அதிகமாக வந்ததால் கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்புத்தன்மை 230 டிடிஎஸ் அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்புத்தன்மை 780 டிடிஎஸ்ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறியதாவது:
நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் 10 நாட்கள் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடை ந்தோம்.
ஆனால் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலைகளால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது. உப்புத்தன்மையும் அதிகரித்து விட்டது.
இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






