என் மலர்
ஈரோடு
- நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.
சென்னிமலை:
நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நவராத்திரியின் 10 -வது நாளான நேற்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலை 4:30 மணிக்கு அசுரனை வதம் செய்வதற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். அப்போது வள்ளி-, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர்.
சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர். அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த சூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அசுரனை அழித்த உற்சாக மிகுதியில் இருந்த முத்துக்குமாரசாமி சூரனை மூன்று முறை வலம் வந்து மீண்டும் வள்ளி.தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆசிரியை அப்ளிகேஷனில் சென்று 10 ரூபாய் கட்டியுள்ளார்.
- சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணத்தை கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் தனது சகோதரரிடம் ஆன்லைன் மூலமாக மின்கட்டணத்தை கட்ட சொல்லி உள்ளார். அவரது சகோதரரும் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை கட்டியுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை ஆசிரியை திறந்து பார்த்தபோது அதில் நீங்கள் மின்சார கட்டணத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டாததால் இன்று இரவுடன் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று இருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மெசேஜ் வந்த நம்பரை ஆசிரியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் உங்கள் வீட்டின் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு அப்ளிகேஷனை அனுப்பி வைக்கிறோம்.
அந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்றார். இதை உண்மை என்று நம்பிய அந்த ஓய்வு பெற்ற ஆசிரியை அந்த நபர் கூறியவாறு அப்ளிகேஷனை தனது செல்போனில் டவுன்லோடு செய்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அதில் ரூ.10 கட்டணம் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆசிரியை அந்த அப்ளிகேஷனில் சென்று 10 ரூபாய் கட்டியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்தது. அந்த ஓ.டி.பி. நம்பரை ஆசிரியை அந்த அப்ளிகேஷனில் பகிர்ந்து உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வந்து கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலை கண்டு அந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.
இதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆசிரியை இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நூதன மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
தற்போது தொழில்நுட்ப உதவியால் பல்வேறு நவீன திருட்டுகள், மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் யாரும் முன் பின் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் போனை நம்பி ஏமாற வேண்டாம். அதேபோல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக வரும் விளம்பரங்களை நம்பியும் ஏமாற வேண்டாம்.
தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்களுக்கு போன் செய்து உங்கள் போன் எண்ணை 5ஜி சேவைக்கு மாற்ற வேண்டும்.
உங்கள் பற்றிய விவரங்களை கூறுங்கள் என்று போன் செய்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம் . கடந்த சில நாட்களாக இது போன்ற மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் கதிர்வேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடிக்கு வந்து கொண்டு இருந்தனர்.
- அப்போது எதிர்பாராத விதமாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே உள்ள பாண்டியம் பாளை யம் அடுத்த சீதாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (42). இவர்களுக்கு கவுரீஸ்வரி (20). என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் கவுரீஸ்வரிக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு சென்னையில் வேலை கிடைத்தது. இதை யொட்டி அவர் சென்னை யில் இருந்து வந்தார். இதை யடுத்து கவுரீஸ்வரி விடுமுறையில் கவுந்தப்பாடிக்கு வந்தார்.
இதை தொடர்ந்து விடுமுறை முடிந்து ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக கவுரீஸ்வரியை அழைத்து கொண்டு சுப்பிரமணி மொபட்டில் ஈரோட்டுக்கு சென்றார். அவர்களுடன் அவரது உறவினர் கதிர்வேல் (15). என்பவரும் சென்றார்.
ரெயிலில் கவுரீஸ்வரியை சென்னைக்கு அனுப்பி விட்டு சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் கதிர்வேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடிக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் காஞ்சிகோவில் அடுத்த மணிபுரம் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
எதிரே கவுந்தப்பாடி அடுத்த ஈங்கரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (21). என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிர மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதில் படுகாயம் அடைந்த கதிர்வேல் பெருந் துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் தங்கராஜ் தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.
- திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன். ஈரோடு ெரயில்வே யார்டூ மாஸ்டர் அலுவலக எழுத்தர் ஆக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி திவ்யா வயது (24). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நவநீதகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இது தொடர்பாக கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சமாதான மாகியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு திவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
- ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது.
- இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கரட்டடிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து விட்டார்.
விபத்தில் இறந்த முத்துக்குமாருக்கு ஜோதி புஷ்பம் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டி மரகதவல்லியிடம் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.
- இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் அடுத்த வித்யா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மரகதவல்லி (62). நேற்று காலை மரகதவல்லி அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொரு ட்கள் வாங்க சென்றார்.
பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென மரகதவல்லி கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.
சுதாரித்து கொண்ட மூதாட்டி மரகதவல்லி செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். எனினும் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனியார் கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.
- குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
பெருந்துறை:
ஈரோடு பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). இவர் ஒரு தனியார் டெக்ஸ்டைல் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய கம்பெனியின் தலைமை அலுவலகம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.
இந்த கம்பெனியின் பொறுப்பாளராக உள்ள ரமேஷ் என்பவர் கடந்த மாதம் 30-ந் தேதி குடோனை திறந்து பார்த்த போது குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
கடந்த 25-ந் தேதி குடோனில் சரக்குகளை கையாளும் பொழுது துணி பேல்கள் சரியாக இருந்து ள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் யாரோ மர்ம நபர்கள் சாவி போட்டு குடோனை திறந்து துணி பேல்களை திருடி இருக்கலாம் என தெரியவந்தது.
இது தொடர்பாக சுரேஷ்குமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 1-ந் தேதி முதல் விடு முறை விடப்பட்டு உள்ளது. மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமியை யொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
கோபி செட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரு வார்கள். மேலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று ஆயுதபூஜையை யொட்டி பல்வேறு பகுதி களில் இருந்தும் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் விஜய தசமி நாளான இன்று காலை பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்திரு ந்தனர். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல மக்க ளின் கூட்டம் அலை மோதி யது. அவர்கள் தடுப்பணை யில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வாலிபர்கள் பலர் வந்து தடுப்பணையில் குளித்து குதூகளித்தனர். இனால் தடுப்பணையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்கப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.
இதே போல் தொடர் விடுமுறையால் பவானி சாகர் அணை பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை முதலே ஏராளமான பொது மக்கள் பூங்காவை கண்டு கழித்தனர். அணைக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து ரசித்தனர். இதனால் பூங்கா முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்த னர். தொடர்ந்து பொது மக்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர். மேலும் பூங்கா பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் சாப்பிட்டனர்.
இதே போல் பவானி கூடுதுறைக்கும் இன்று பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்ம னை வழிபட்டு சென்றனர்.
- சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
- இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் ஒரு பிராய்லர் கடை செயல்பட்டு வருகிறது. இது காஞ்சிகோவிலை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமானது. இதனை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது டியூப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் திடீரென தீப்பிடித்து அருகில் இருந்து பொரு ட்கள் எரிய தொடங்கின.
இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தோடு கியாஸ் கசிவையும் நிறுத்தினர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக கோழிகள், குஞ்சுகள் தப்பின. கடையில இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது. மேற்புர பகுதியில் தகர ஷீட் அமைத்து இருந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் நல்ல நிலையில் இருந்து ள்ளது. நீண்ட நாட்களாக டியூப்பை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். பழுதான டியூப்பை பயன்படுத்தியதே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போலி மதுபான ஆலை இயங்கிய விவகாரத்தில் மயிலாடுதுறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதி குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
- போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை கடந்த மாதம் 9-ந் தேதி ஈரோடு மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்தனர்.
போலி மதுபானம் தயாரித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, எலந்த குளம் பள்ளர் தெருவை சேர்ந்த வீரபாண்டி (51), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முகேஷ் (38) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி மதுபான ஆலை விவகாரத்தில் சீர்காழி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மதுவிலக்கு போலீசார் சீர்காழி பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஈரோட்டில் போலி மதுபான ஆலை இயங்கிய விவகா ரத்தில் தொடர்புடைய மயிலாடு துறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதியில் இருந்த குமார் (48) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
அவரை ஈரோடு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடந்த 2-ந் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.
- சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது மகள் வளர்மதி மற்றும் மருமகன் கதிர்வேல்.
இவர்கள் சிக்கரச ம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்,செல்வி தம்பதியிடம் கடந்த 2019-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக 2.50 லட்சம் ரூபாய் பணம், 4 பவுன் நகை கடனாக வாங்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த செந்தில், செல்வி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து கடன் பெற்ற வளர்மதி, கதிர்வேல் தம்பதியிடம் செல்வி நீங்கள் வாங்கிய கடன் தொகையை என்னிடம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.
இதேபோல் செல்வியின் கணவர் செந்தில் ஒருபுறம் தன்னிடம் தான் பணம் நகை கொடுக்க வேண்டும் என்று வளர்மதி -கதிர்வேலிடம் கேட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் கடனை அடைக்க வளர்மதி-கதிர்வேல் தம்பதியினர் கால அவகாசம் கேட்டுள்ளனர். இருப்பினும் கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் அச்சமடைந்த வளர்மதி, கதிர்வேல் ஆகிய 2 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாயமாகிவிட்டனர். தனது மகள் மருமகனை, கிருஷ்ணவேணி பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணவேணி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது கிருஷ்ணவேணி திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அவரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.
- வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு கடை அமைக்க வியா பாரிகள் உரிய அனுமதியை பெற தேவை யான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு கடை அமைக்க அனுமதிப்பது குறித்து தீயணைப்பு, போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:
கடந்த மாதம் 30-ந் தேதி பட்டாசு கடை வைக்க அனுமதி கேட்போர் விண்ணப்பிக்க கால அவகாசம் வருவாய் துறை யினரால் அளிக்கப்பட்டு இருந்தது. பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.
விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளது. அந்தந்த தீய ணைப்பு நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்றினை நிலைய தீயணைப்பு அலுவலர்கள் முழுமையான ஆய்வுக்கு பின் வழங்குவர்.
குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்துவர். தடையின்மை சான்று கோரி தினமும் விண்ண ப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை உடனு க்குடன் அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது நிலைய தீயணைப்பு அலுவலர்களுக்கே நன்கு தெரியும். எனவே விதிமுறை களை பின்பற்றியே தடை யின்மை சான்று வழங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.






