என் மலர்
ஈரோடு
- தி.மு.க- அ.தி.மு.க.வை சேர்ந்த வெளிமாவட்ட நிர்வாகிகள் பலர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கூட்டங்கள் முறையாக அனுமதியுடன் நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து விட்டது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க- அ.தி.மு.க.வை சேர்ந்த வெளிமாவட்ட நிர்வாகிகள் பலர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கூட்டங்கள் நடந்து வருகிறது. கூட்டங்கள் முறையாக அனுமதியுடன் நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே காலி இடத்தில் நேற்று தி.மு.க. 36-வது வார்டு செயலாளர் ஹரிஹரன் முறையான அனுமதி பெறாமல் கட்சிக்கொடி மற்றும் 100 கட்சிக்காரர்களுடன் கூட்டம் நடத்தியுள்ளார்.
இதை கண்டறிந்த தேர்தல் நிலை குழு அலுவலர் மெய்யழகன் இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
- தி.மு.க. ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஈரோடு:
ஈரோட்டில் நடைபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுகக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள்.
எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் வைப்பதற்கு பதில் ரூ.2 கோடிக்கு வைக்கலாமே. பேனா சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கலைஞர் நினைவு இடத்தில் வைத்தால் என்ன?
தி.மு.க. ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் பயத்தினால் தி.மு.க. 20 அமைச்சர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம். ஆனால் ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமையை சரிசெய்வோம் என்றனர். இன்று ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ரூ.1.62 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது. முதலமைச்சருக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.
- மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது.
- மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டில் இருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அந்த அறிவிப்பினை வெளியிட முடியவில்லை.
எனவே இலவச மின்சார அளவை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் விசைத்தறி, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும்.
கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மின்கட்டணம் 180 சதவீதம் உயர்த்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரிக்கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினாலும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை.
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான், தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்துக் கொண்டார்கள்.
தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து, அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 சதம் உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 சதம் குறைத்துள்ளோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26 ஆயிரம் புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. விவசாய பயன்பாடு மற்றும் குடியிருப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள விரைவில் வசதி செய்யப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும்.
அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் நான் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.
தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32 ஆயிரம் மெகாவாட்டாகும். இதையடுத்த 10 ஆண்டுகளில் 64 ஆயிரம் என உயர்த்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.
மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை. மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. அ.தி.மு.க. ஈ.பி.எஸ். அணி பா.ஜ.க.வின் பி டீமாக செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றுபட்டாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் தி.மு.க. தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை.
- நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்து செல்லும்போது தமிழகத்தில் முதியோர் ஓய்வு ஊதியத்துக்காக ஆண்டுக்கு ரூ.1200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்றனர்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு எடப்பாடி பழனிசாமி மேலும் 5 லட்சம் பேரை சேர்த்து 37 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்காக ஆண்டுக்கு ரூ.4200 கோடி நிதி செலவிடப்பட்டது. 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் ரூ.500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது ரூ.ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத்தை ரூ.1500 என உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் எடப்பாடி 1 லட்சம் பேருக்கு திருமணத்திற்காக தங்க காசுகளை வழங்கினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருமண உதவித்தொகை திட்டம் தாலிக்கு தங்கம் கொண்டு வந்ததே பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான். பிளஸ்-2 வரை படித்தால் ரூ.25000, பட்டம் பயின்றால் ரூ.50,000 என்று அறிவித்தார். தங்கத்தையே பார்க்காத பல ஏழை குடும்பங்கள் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
ஆனால் அதையும் தி.மு.க. ஆட்சி நிறுத்திவிட்டது. இன்று ஏதோ உயர்கல்வி பயில ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு ஸ்கூட்டி, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு, லேப்டாப், 2000 மினி கிளினிக்குகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன .
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை. நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். திட்டங்கள் வரும் ஆனால் வராது என்ற நிலையில் தான் வாக்குறுதிகள் உள்ளன.
ஆனால் ஜெயலலலிதா கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முடக்கப்பட இருந்த இரட்டை இலையை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் இன்று மாலை ஈரோட்டில் நடக்கும் வேட்பாளர் அறிமுக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
- கோபி அனைத்து மகளிர் போலீசார் தருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோபி:
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அவிநாசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் தருண்குமார் (21).
இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தும் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததார். அவர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை செய்ததில் தருண்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானதாகவும், தன்னை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்தில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாகவும், தான் சத்தமிட்டு கொண்டு ஓடி வந்து விட்டதாகவும், தற்போது பழக மறுப்பதால் தன்னை பயப்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா தருண்குமார் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- தூய்மை பணியாளர்கள் முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்நிலையில் ஒப்பந்த முழு ஊதியம் வழங்க ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவ மனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 132 தூய்மை பணியாளர்கள், காவல் பணியா ளர்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கும் தினக்கூலி, 707 ரூபாய் வழங்காமல், 310 ரூபாயை வழங்குகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்த 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று ஒப்பந்த நிறுவனம், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம், மருத்துவ துறை அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு ஊதியம் வழங்கவும் ஒப்பந்த நிறுவனம் ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.
- தூத்துக்குடியில் இருந்து உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
- இதனை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோ ளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 637 மெட்ரிக் டன் யூரியா, 130 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 155 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 9 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
இதனை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெயசந்தி ரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,444 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,668 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,308 மெ.டன்னும்,
காம்ப்ளக்ஸ் உரம் 10,010 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 903 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலை யங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு,
திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலை யத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரை க்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படு த்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காரப்பாடி-குருமந்தூர் சாலையில் நெற்றியில் ரத்தக்காயங்களுடன் அமர்நாத் இறந்து கிடந்தார்.
- புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையம் காரப்பாடி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் அமர்நாத்(28).
இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக போனில் அவரது பாட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அமர்நாத் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தனர்.
இந்நிலையில் காரப்பாடி-குருமந்தூர் சாலையில் நெற்றியில் ரத்தக்காயங்களுடன் அமர்நாத் இறந்து கிடந்தார்.
இது குறித்து அமர்நாத்தின் சகோதரர் இளவரன் அளித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருந்துறை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் பெருந்துறை போலீசார் சம்பவயிடம் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநிலம் பார்ஹனாஸ் சாக்பட்ரியை சேர்ந்த உஜ்ஜால் என்கிற மிஜனூர்காஜி (26), ஓடிசா மாநிலம் பாலன்கீர் சாத்காட்டினை சேர்ந்த ஜிஜேந்திரபட்டேல் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- கெட்டி செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா காலை நடைபெற்றது.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கெட்டி செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்றது.
கடந்த 6-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா காலை 8 மணி அளவில் நடைபெற்றது. முதன் முதலில் தலைமை பூசாரி செந்தில்குமார் குண்டத்தில் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது.
தொடர்ந்து நாளை அம்பாள் தேருக்கு எழுந்தருள் நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 11-ந் தேதி திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு மலர் பல்லக்கில் அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 12-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
குண்டம் திருவிழாவை காண கெட்டிசெவியூர், குன்னத்தூர், திருமணநாதம் பாளையம், மாமரத்து பாளையம், தோரணவாவி, கொளப்பலூர், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
- தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.
- இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் தனது அணி வேட்பாளர் வாபஸ் பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதே போல் குக்கர் சின்னம் கிடைக்காததால் அ.ம.மு.க.வும் போட்டியிடாது என்று டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.
இதையடுத்து நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
வாபஸ் பெறுவதற்கு முன்பே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் தனது வேட்பு மனுவை நாளை வாபஸ் பெறுகிறார்.
வேட்பு மனுக்கள் நாளை மாலை 3 மணிவரை திரும்ப பெறலாம். பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், நாம் தமிழர், தே.மு.தி.க.வினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24, 25-ந் தேதிகளில் தீவிர பிரசாரம் செய்கிறார். இதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19,20-ந் தேதிகளில் பிரசாரம் செய்கிறார். கனிமொழி எம்.பி., 16-ந் தேதி பிரசாரம் செய்கிறார்.
இதே போல் எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 கட்ட பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளார். தனது முதல் கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளார். பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை தேர்தலுக்கு முந்தைய கடைசி வாரத்தில் செய்கிறார்.
பிரசாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கட்சி தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தொழில் அதிபர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் ஈரோடு மாவட்டம் அல்லது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன செய்தது. மேலும் ஓட்டு பெறுவதற்காக தி.மு.க. பல வாக்குறுதிகளை அளிக்கும். ஆனால் அவர்கள் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமாட்டார்கள் என்று எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர் சாலை ஓரம் இருந்த கடையில் டீ குடித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.
தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் ஆட்சி ஏற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் இது. இதனால் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். இதற்காக 11 அமைச்சர்கள் உட்பட 31 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டது.
தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு பிரசாரத்தை தொடங்கினர். பின்னர் தி.மு.க. சார்பில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஈரோட்டிலேயே முகாம் அமைத்து பிரசாரம் செய்து வருகிறார்கள். 4 அல்லது ஐந்து வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, காந்தி, சேகர்பாபு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், சி.வி.கணேசன், ராமச்சந்திரன், கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை கருங்கல்பாளையம் ராஜாஜி புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் அந்தப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வழிபட்டார். இது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் 30 பேர் உட்பட 121 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 10 நாட்களுக்கு முன்பே ஈரோட்டில் முகாமிட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தாமதமாக அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் பணிகளை அவர்களும் ஏற்கனவே தொடங்கி விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் தொகுதியில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கும் முன்பு அந்த பகுதியில் உள்ள கோவில்களில் சென்று வழிபட்டு பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், துணிகளுக்கு அயன் செய்தும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.
இன்று காலை கருங்கல்பாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று பூ வழங்கி, கோவில் பிரசாதங்கள் கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது இன்று மாலை நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்தார்.
தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் ஆனந்த் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் காலை தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனும் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாமல் நேர்மையான முறையில் ஓட்டு போட வேண்டும் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்தார்.
- மண்டபத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தினர்.
- தற்போது 2-வது முறையாக அனுமதியின்றி கூட்டம் கூடியதால் கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதாக பறக்கும் படை அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அந்த திருமண மண்டபத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அ.தி.மு.க.வினர் ஒன்றாக திரண்டு இருந்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி மணிகண்டன் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அனுமதியின்றி இங்கு கூட்டம் நடத்தக்கூடாது உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.
ஆனால் இதை ஏற்காமல் அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் போலீசாரும் வந்திருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் அ.தி.மு.க.வினரை மண்டபத்தை விட்டு வெளியேறும்படி கூறினர். ஆனால் அவர்களுடனும் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அ.தி.மு.க.வினர் மண்டபத்தை விட்டு கலைந்து சென்றனர்.
ஏற்கனவே இதே மண்டபத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தினர். அப்போதும் பறக்கும் படை அதிகாரிகள் வந்து அனுமதியின்றி கூட்டம் போடக்கூடாது என்று கூறி கலைந்து போக செய்தனர். தற்போது 2-வது முறையாக அனுமதியின்றி கூட்டம் கூடியதால் கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மண்டபத்தில் இருந்த 2 நுழைவாயிலும் பூட்டி சீல் வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.






