என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
    • அதிகபட்சமாக பவானியில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆனால் நேற்று காலை முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகர பகுதியில் காலை முதல் சாரல் மழை தூறி கொண்டே இருந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

    பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் லேசான தூறல் மழை விட்டு விட்டு பெய்தது. மதியம் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    காலிங்கராயன் பாளையம், குருப்ப நாயக்கன்பாளையம், ஊராட்சி கோட்டை உள்பட பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பவானி புது பஸ் நிலையம் பெட்ரோல் பங்க் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    இதைத் தொடர்ந்து இரவிலும் பலத்த மழை பெய்தது. ரானா நகர், செங்காடு பகுதிகளில் மழை நீர் சாக்கடையை மூழ்கடித்து மேட்டூர் சாலையை கடந்து மறுமுனையில் தேங்கி நின்றது. பவானி காமராஜ் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் மழை நின்றதும் ஒரு மணி நேரத்தில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிய தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானியில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேப்போல் அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளான நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, சிங்கம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

    வெள்ளித்திருப்பூர், மாத்தூர், எண்ணமங்கலம், சங்கராபாளையம், வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழை பெய்தது.

    புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை முதல் பலத்த மழை பெய்தது. புஞ்சை புளியம்பட்டி-மாதாம்பாளையம் சாலை, வாரச்சந்தை, தங்கச்சாலை வீதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திரு.வி.க. கார்னர் மற்றும் வாரச்சந்தை முன் சாக்கடை தூர்வாரப்படாததால் கழிவுநீருடன் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    சென்னிமலை, மொடக்குறிச்சி, பெருந்து றை, குண்டேரிப்பள்ளம், தாளவாடி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானி-27.80, மொடக்குறிச்சி-12.40, சென்னிமலை-10, பெருந்துறை-8, ஈரோடு-4.20, குண்டேரிப் பள்ளம்-3.20, தாளவாடி-2.80, அம்மாபேட்டை-1.20.

    • தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை.
    • மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் அரசு திட்டப்பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம், சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர். இதில் பெரும்பாலானோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் பலர் தற்போது வரை திரும்பவில்லை. இதைப்போல் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களும் இதுவரை திரும்பி வரவில்லை.

    ஈரோட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை போலவே அவர்களது சொந்த மாநிலத்திலும் வழங்க அம்மாநில அரசுகள் முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவு எடுத்துள்ளனர். எனவே சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் பணிக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவ ர்கள் கூறினர்.

    இதுகுறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சொந்த ஊருக்கு சென்ற பெரும்பாலானோர் ஈரோடு திரும்பி வரவில்லை.

    இதற்கான காரணம் மத்திய அரசின் சிறப்பு திட்டங்களால் பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் என அந்தந்த மாநிலங்களிலேயே தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்ப ட்டுள்ளது. இதனால் பெரு ம்பாலான தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநில த்திலேயே பணிபுரிய முடி வெடுத்துள்ளனர். தமிழக த்தின் தொழில் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமி ழகத்தில் தொழில் வள ர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தற்போது ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் திரும்பி வராததால் திட்டப் பணி களில் சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. இதைப்போல் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வட மாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால் அவர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்துடன் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்பு களை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.
    • வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானைகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி பகுதிகளில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த மலை கருப்பு சாமி கோவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கரடிக்கல் பாறை என்ற இடத்தின் அருகே ஜானகி சரவணன் என்பவரின் 8 ஏக்கர் தோட்டம் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வருகின்றார். இதில் வாழை, சோளப்பயிர், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளார்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து கூட்டமாக காட்டுப்பன்றிகள் வெளியேறியது. இதையடுத்து காட்டு பன்றிகள் ஜானகி சரவணன் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    தொடர்ந்து அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்களை அந்த காட்டு பன்றிகள் சேதப்படுத்தியது. அங்கு 1.50 ஏக்கர் அளவில் பயிரிட்டுள்ள பயிர்களில் 75 சென்ட் பயிர்களை முற்றிலும் சேதப்படுத்திஉள்ளது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகள் தோடங்களில் புகாமல் இருக்க விவசாயிகளுக்கு உதவ வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறையினருக்கு வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர்

    மேலும் அறுவடைக்கு சில தினங்களில் இருக்கும் நிலையில் பயிர்கள் சேதம் அடைந்ததை கண்டு விவ சாயிகள் வேதனை அடைந்தனர்.

    • கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது.
    • தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியின் தலைவராக தற்போது உள்ளவர் திலகவதிசுப்பிரமணி. இவரது கணவர் பேரூராட்சி நிர்வாகத்திலும், பேரூராட்சிக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களிலும் தலையிட்டு பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதுடன் பேரூராட்சி அலுவலகத்தை தனது விருப்பத்திற்கு பயன்படுத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ராட்சத ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்கும் இடமாக பேரூராட்சி வளாகத்தை பயன்படுத்தி வருகிறார்.

    பேரூராட்சியி்ன் தலைவரின் முகவரியிட்டு பேரூராட்சிக்கு வரும் கடிதங்களை தலைவரது கணவர் சுப்பிரமணி பெற்றுக்கொள்வதுடன் மன்றக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு முடிவுகளை எடுக்கசொல்லி நிர்வாகத்தை சீர்குலைக்கிறார். அத்துடன் பேரூராட்சியில் கவுன்சிலர்களாக உள்ளவர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அது சம்பந்தமான கண்டனவரிகள் அடங்கிய பதாகைகளுடன் நேற்று 12 கவுன்சிலர்கள் கொடுமுடியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து காலவரையற்ற போராட்டத்தை துவங்கினர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது. இதனை கண்டித்து தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3-ம்தேதி கொடுமுடி பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் துணை இயக்குனரிடம் மனு அளித்துள்ளோம். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த விஷயத்தை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம், அவரும் பல முறை இருதரப்பிடமும் பேசிவிட்டார். இருந்த போதும் தலைவரின் கணவர் மாறவில்லை, என்றனர்.

    கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து அறிந்த கொடுமுடி ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர். அவர்களிடம் தங்களது முடிவை உறுதிபட தெரிவித்த கவுன்சிலர்கள் கொடுமுடி பேரூராட்சி தலைவரை மாற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துவிட்டு தங்களது போராட்டத்தை நேற்று மாலை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மாலை 4 மணி அளவில் திடீரென லேசான காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு அகில்மேடு வீதியில் சின்ன மார்க்கெட் பகுதி அம்மா உணவகத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ள காடாக காட்சியளித்தது. இதனால் இந்த பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதுபோல் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வழக்கம் போல் மழைநீர் தேங்கி நின்று சேரும் சவுதியுமாக காட்சியளித்ததால் காய்கறிகள் வாங்க சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இங்கே லேசாக மழை பெய்தாலே சேரும் சகதியுமாக காட்சியளிப்பது தொடர்கதை ஆகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி, மாவட்டத்தில் 37.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 14.20 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

    மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் பெய்திருந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    ஈரோடு-14.20, கொடுமுடி-6, பெருந்துறை-5, சென்னிமலை-2, பவானி-1.60, குண்டேரிப்பள்ளம்-1.20, பவானிசாகர் அணை-7.40.

    • சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர்.
    • கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், ஒசூர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, காவல் நாய்களையும் தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசப்பா (42) விவசாயி. 4 மாடுகள், 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் வீட்டின் முன் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். காலை வந்து பார்த்த போது தனது ஆடு ஒன்று பாதி உடலை தின்ற நிலையில் இறந்து கிடந்து.

    இது பற்றி உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதில் கல்குவாரியில் இருந்து வந்த சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது தெரியவந்தது.

    இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 2 வருடமாக இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை அவ்வபோது வெளியே வந்து நாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    இதனால் கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை கொன்றுள்ளது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றனர். 

    • அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் அருகே பாரதி நகரை சேர்ந்தவர் அமரேஸ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராணி (வயது 38). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் என 2 மகன்கள் உள்ளனர். தினமும் காலை ராணி தனது மோட்டார் சைக்கிளில் மூத்த மகனை பள்ளியில் கொண்டு விடுவது வழக்கம்.

    இன்று காலை வழக்கம் போல் ராணி தனது மகனை பள்ளியில் விடுவதற்காக அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் மெயின் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே ராணி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    5 வயது குழந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணியின் உடலை பார்த்து அவரது கணவர் மற்றும் பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளி ப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இதையடுத்து தீபாவளி விடுமுறையையொட்டி கொடிவேரி தடுப்பணையில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கொடி வேரிக்கு வந்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு சுமார் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

    மேலும் நம்பியூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கொடிவேரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதை தொடர்ந்து தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    இதையொட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் இன்று அதிகாரிகள் மீண்டும் தடை விதித்து உள்ளனர். இதையடுத்து கொடிவேரி அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு அணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பணியாளர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று பொதுமக்கள் ஒரு சிலர் மட்டுமே கொடிவேரி அணைக்கு வந்து இருந்தனர். அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நேற்று இரவு 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே மழை காரணமாக சாலையோரம் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம்:

    தமிழக-கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பாதை உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலை பாதைக்கு 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். மிகவும் ஆபத்தான திம்பம் மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவால் ஆனது.

    இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை நடமாட்டமும் உள்ளது. தமிழக-கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளதால் இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் குறிப்பாக சரக்கு வாகனங்கள் போக்குவரத்து அதிக அளவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திம்பம் மலைப்பகுதி பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே மழை காரணமாக சாலையோரம் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் அந்தப் பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் போது ஒரு வகையான அச்சத்துடனையே கடந்து செல்கின்றனர். வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. பஸ்கள் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் மிகவும் கவனத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றன.

    • குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர்.
    • இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தார். ஈரோடு பஸ் நிலைய பகுதியில் தங்கி இருந்தார்.

    அப்போது சந்தோஷ்குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்தார். அப்போது சந்தோஷ்குமார், நித்யாவிடம் நமக்கு குழந்தை பிறந்தால் அதனை விற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் பெண் இடைதரகர்களான ஈரோட்டைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு மற்றும் ரேவதி ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.

    அவர்களும் நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்றுள்ளனர். பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையை விற்ற பின்னர் நித்யா குழந்தை நினைவாக இருந்துள்ளார்.

    குழந்தையை விற்பனை செய்த பிறகு மனமில்லாமல் இருந்த நித்யா நடந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் நித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம் அவர் நடந்தவற்றை கூறினார். இதை அடுத்து சந்தோஷ் குமார், பெண் இடைத்தரகர்களான செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியினரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது எனவும், வழக்கு குறித்த முழு விவகாரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தை விற்ற இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பறவைகள் கூட்டம் கூட்டமாக கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும்.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    சென்னிமலை:

    தீபாவளி பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தை தொடங்கி விடுவர். ஆங்காங்கே, பட்டாசு ஒலிகளும் தீபாவளிக்கு முன்பே கேட்கும்.

    இப்படி தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் மக்களும், ஊர்களும் இருக்கும் நிலையில், தீபாவளிப் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடாத வித்தியாசமான பல கிராமங்களும் இருக்கின்றன.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளி பண்டிகை பண்டிகையை 20 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் சென்னிமலை அருகே வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான்.

    ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே 'வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன.

    கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்பி பாயிண்ட் என அமைக்கப்பட்டு சரணாலயமே எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.

    பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன.

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதால், அச்சமயம் சீசன் தொடங்குகிறது.

    பறவைகள் இனப்பெருக்க காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி வருகின்றன.

    மேலும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கால உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வெள்ளோடு சரணாலயத்திற்கு வருகின்றன.

    இப்பறவைகள் அனைத்தும் இங்குள்ள குளத்தில் குளித்து கும்மாளமிடுவதோடு, அதிலுள்ள மீன்களை உணவாக உண்டு தங்களின் பசியைத் தணிக்கின்றன.

    இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன.

    இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் இந்த பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை அளிக்கின்றது.

    இந்த பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வருவதுண்டு.

    இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

    இதன் ஒருபகுதியாக, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    அதன் அடிப்படையில், இந்த வருடமும் தொடர்ந்து 20-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடினர்.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, சக்கரம் புஷ்பானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.

    • ஜவுளிக்கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் 50 சதவீத சலுகை விலையில் துணிகளை விற்பனை செய்வது வருவது வழக்கம்.
    • அதிகாலையிலேயே கடை வீதிகளில் திரண்ட பொதுமக்கள், முண்டியடித்துக்கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆர்.கே.வி. சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் 50 சதவீத சலுகை விலையில் துணிகளை விற்பனை செய்வது வருவது வழக்கம்.

    கடையின் முன்பு மக்கள் கூட்டம் அதிகரித்ததால் அதிகாலை 3 மணிக்கே ஜவுளிக்கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே கடை வீதிகளில் திரண்ட பொதுமக்கள், முண்டியடித்துக்கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

     

    ஈரோடு மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    தீபாவளிக்கு மறுநாளான இன்று ஆர்.கே.வி. சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    ×