என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது.
    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா மடுவு வரை சாலை விரி வாக்கம் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது.

    இந்த நிலையில் அண்ணா மடுவில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வாகனங்கள் திரும்பிச் செல்ல பொதுமக்கள் நடந்து செல்ல பாதைவிடப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது. இதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளதால் அனைவரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தான் திரும்பி வந்து அவர்கள் இல்லத்திற்கு வர வேண்டி உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் தனியார் திருமண மண்டபம் முக்கிய வங்கிகள் செயல்பட்டு வருகிறது. எனவே குறிப்பாக அந்தந்த இடங்களில் செல்வதற்கு சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    என்று அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று காலை அந்தியூர் பஸ்நிலையம் அருகே உள்ள பவானி-அம்மாபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வரவழைத்து இதற்கு தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    அவர்கள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    • டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்
    • ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

    ஈரோடு, 

    கோபி கோடீஸ்வரா நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(35). இவர் நேற்று அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கோபி பஸ் நிலையம் சென்றார்.

    அப்போது அங்கு இருந்த டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்.

    மஞ்சுநாதனின் மோட்டார் சைக்கிளை ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்த மஞ்சுநாதன் கூச்சல்போட அக்கம்பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அந்த நபர் கோபி நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த முருகேசன்(40) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    • மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சிறுவல்லூர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூபன்சாலை பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது .

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வாசு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர்தி ட்டப்பணிகளும், விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பவானி சாகர்அணை நீர்தேக்க பகுதிக்கு வந்து ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை எடுத்து சென்றனர்.

    இந்நிலையில் பவானியை காப்போம் என்ற இயக்கம் சார்பில் இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர், சத்திய மங்கலம், ராஜன்நகர், பண்ணாரி, அய்யன் சாலை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், படுகுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொது மக்கள், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், டாக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளனர்.

    • வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது.
    • மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனல் காற்று வீசி வருகிறது. இரவு நேரங்களில் கடுமையான புழுக்கம் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இரவில் மழை பெய்தாலும், காலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் உள்ளது.

    கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மழையின்போது சூறாவளி காற்றும் இடி மின்னலும் அதிக அளவில் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் பெருந்துறை கருக்கம்பாளையம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்தது. 3 ஆயிரம் வாழைகளும் முறிந்து விழுந்து சேதமானது. வழக்கம் போல் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், சின்ன செட்டியார் பாளையம், நல்லக்கட்டிபாளையம், அழகம்பாளையம், வரப்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது.

    மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை இடைவிடாமல் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 100 ஆண்டுக்கும் மேலான பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    நம்பியூர் மலையப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தது. மலையப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இருந்த ராட்சத ஆலமரம் மற்றும் சந்தைக்கடை பகுதியில் இருந்த மரம் ஆகியவை வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மேலும் வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் மலையப்பாளையம்-திருப்பூர் ரோட்டில் ஒரு டிரான்ஸ்பார்மரும் சாய்ந்தது. மழை பெய்யத் தொடங்கியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சூறாவளி காற்றின்போது பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்ததால் மரம் விழுந்தபோது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் நம்பியூர்-திருப்பூர், நம்பியூர், குன்னத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ஆலங்கட்டி மழை காரணமாக வீடுகளில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

    மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்று, மழை நின்றதும் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி காற்று வீசி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. நல்ல வேளையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீடுகளின் மேற்கூரைகளும் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தது. எனவே சேதமான வீடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
    • திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

    கொடுமுடி,

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.10 மணியளவில் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் வந்து நின்றது. பின்னர் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு ரெயில் கரூர் நோக்கி புறப்பட்டது.

    ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரெயில் மெதுவாக சென்றதால் அந்த பெண் பலத்த காயம் அடைந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மேலும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அப்போது அந்த பெண் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மீனாவுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து
    • அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு பெரிய சேமூர் கள்ளன் காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரது மகள் மீனா (23). பி. பி.எம். பட்டதாரி.

    மீனா வுக்கும், அதேப் பகுதியை சேர்ந்த முருகானந்தா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.திருமணம் ஆனதிலிருந்து மீனாவுக்கும் அவரது கண வருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இரு வீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மீனா கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதையடுத்து சம்பவ த்தன்று குலதெய்வ கோவி லுக்கு செல்ல மீனாவை அவரது தந்தை அழைத்து உள்ளார். ஆனால் மீனா வர மறுத்து தந்தை மீது கோபித்துக் கொண்டதாக தெரிகிறது .

    இந்நிலையில் வீட்டில் இருந்த மீனா திடீரென மாயமாக உள்ளார். இத னால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். எனினும் மகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நாகராஜ் இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலை யத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மீனாவை தேடி வரு கின்றனர். 

    • நூறாவது பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் ஓராண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது
    • நாளை கலெக்டருடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.

    ஈரோடு, 

    ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, கலைஞர் நூறாவது பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் ஓராண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஓராண்டிற்கு கட்சியின் சார்பில் மக்களுக்கு நலத்திட்ட வழங்கப்பட உள்ளது.

    மருத்துவ முகாம்கள், விளையாட்டு, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து நாளை கலெக்டருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதையடுத்து தமிழக முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்துவோம்.

    கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து மீண்டும் எழுந்து ள்ளது. அதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

    வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பிரச்சனைகள் மனு அளிக்க 16 மாவட்ட அலுவலகங்களிலும் நேற்று கோரிக்கை மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், பெறப்படும் மனுக்கள் மீது ஏற்கனவே அமைக்க ப்பட்டுள்ள கமிட்டியினர் ஆய்வு செய்து விரைவாக தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.   

    • நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார்.
    • அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் தனகொடி (59). இவர் சேலம் மகுடஞ்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து தூங்க சென்றார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • மனைவியுடன் துணி எடுக்க ஈரோடு சென்றார்.
    • நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    பெருந்துறை, 

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (54). இவர் பெருந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று அவரது மனைவியுடன் துணி எடுக்க ஈரோடு சென்றார். பின்னர் மீண்டும் மாலை 4 மணியளிவில் வீடு திரும்பினார்.

    அப்போது அவர்களது வீட்டின் கதவு திறந்து இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாதேஸ்வ ரன் காஞ்சிக்கோ வில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.
    • தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார்.

    சென்னிமலை,

    சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு மேலப்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

    இவரது மனைவி செல்வி (55). இவர்களுடைய மகன் சுரேஷ் (34). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வசித்து வருகிறார்.

    செல்வி, மேலப்பாளையத்தில் தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.

    நோயால் பாதிக்கப்பட்ட செல்வி மனம் உடைந்து தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செல்வி இறந்து விட்டார்.

    • சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு அடுத்த சோளங்காபாளையம் பகுதியில் மலையம்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது, அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில், அவர்கள், கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(39), காமராஜபுரத்தை சேர்ந்த பழனிசாமி(43), பி.கே.வலசு பகுதியை சேர்ந்த கோபி(38), கிளாம்பாடியை சேர்ந்த குமார்(50) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×