search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நம்பியூர் பகுதியில் சூறாவளி காற்றில் 50 மரங்கள் சாய்ந்தது- 10 மின்கம்பங்கள் விழுந்ததால் மின்தடை

    • வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது.
    • மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனல் காற்று வீசி வருகிறது. இரவு நேரங்களில் கடுமையான புழுக்கம் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இரவில் மழை பெய்தாலும், காலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் உள்ளது.

    கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மழையின்போது சூறாவளி காற்றும் இடி மின்னலும் அதிக அளவில் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் பெருந்துறை கருக்கம்பாளையம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்தது. 3 ஆயிரம் வாழைகளும் முறிந்து விழுந்து சேதமானது. வழக்கம் போல் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், சின்ன செட்டியார் பாளையம், நல்லக்கட்டிபாளையம், அழகம்பாளையம், வரப்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது.

    மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை இடைவிடாமல் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 100 ஆண்டுக்கும் மேலான பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    நம்பியூர் மலையப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தது. மலையப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இருந்த ராட்சத ஆலமரம் மற்றும் சந்தைக்கடை பகுதியில் இருந்த மரம் ஆகியவை வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மேலும் வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் மலையப்பாளையம்-திருப்பூர் ரோட்டில் ஒரு டிரான்ஸ்பார்மரும் சாய்ந்தது. மழை பெய்யத் தொடங்கியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சூறாவளி காற்றின்போது பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்ததால் மரம் விழுந்தபோது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் நம்பியூர்-திருப்பூர், நம்பியூர், குன்னத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ஆலங்கட்டி மழை காரணமாக வீடுகளில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

    மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்று, மழை நின்றதும் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி காற்று வீசி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. நல்ல வேளையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீடுகளின் மேற்கூரைகளும் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தது. எனவே சேதமான வீடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×