என் மலர்
ஈரோடு
- வெள்ளாட்டை சிறுத்தை கடித்து கொன்று விட்டது.
- வனத்துறையினர் கால் தடயங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் மஜாரா குரும்பனூர் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் வீட்டின் அருகே 2 வெள்ளாடுகளை கட்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் அதிகாலை சுமார் 4 மணி அளவில் வீட்டின் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை சிறுத்தை கடித்து கொன்றுவிட்டது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வெள்ளாட்டை சிறுத்தை கடித்ததா? இல்லை வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்ததா? என கால் தடயங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
- மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
- தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
பெருமாள் கவுண்டர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார். இவர் மாதத்தில் ஒரு முறை தனது வீட்டுக்கு வந்து செல்வார்.
பெரியம்மாள் மட்டும் தனியாக இருந்து கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பெரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது இரவு 8 மணியளவில் அவரது வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு வீட்டிற்கு வெளியே தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்றார். பின்னர் பெரியம்மாள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் சத்தியமங்கலம் எஸ்.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் (26) என்றும் இவர் தான் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக தலைமறைவான மற்றொருவரையும் தேடி வருகிறார்கள்.
- குப்பிச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வில் ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், குப்பிச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
அப்போது ஊராட்சி மன்ற அலுவலம் அருகே நடந்த வேளாண்மை துறையின் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை பார்வையிட்டு அங்கு திரண்டு இருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
அங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயி எடக்காடு தங்கமுத்து என்பவர் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவிடம் எனது மகன் இளையராஜா கூடுதல் கலெக்டராக மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருவதாக கூறினார்.
அதைத்தொடந்து தங்கமுத்துவிற்கு கூடுதல் கலெக்டர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அவரின் வீட்டிற்கும் சென்றார். அங்கு சென்று இளையராஜாவிடம் போனில் பேசி நலம் விசாரித்தார். அதன் பின்பு தனிநபர் கழிப்பிடங்கள் கட்டும் பணி உள்பட குப்பிச்சிபாளையம் ஊராட்சியில் ஆய்வு பணியினை செய்தார்.
முன்னதாக குப்பிச்சிபாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி வரவேற்றார். ஆய்வின் போது செயல் அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும்
தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று அணைக்கு வினாடிக்கு 1, 247 கன அடி நீர் வந்தது. ஆனால் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 182 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று வரை காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும்,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- வேன் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் தக்காளிகளுடன் தலைகுப்புற கவிழ்ந்தது.
- கடத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி கொண்டு ஒரு மினி வேன் நேற்று இரவு சத்தியமங்கலம் ரோட்டில் கோபி செட்டிபாளையம் வழியாக வந்து கொண்டு இருந்தது.
அந்த வேன் நேற்று இரவு கோபிசெட்டி பாளையம் அடுத்த இண்டியம் பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வேன் திடீரென எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் தக்காளிகளுடன் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த வேனில் டிரைவர் மற்றும் கிளீனர் என 2 பேர் வந்தனர். இதில் அவர்கள் லேசான காயத்து டன் உயிர் தப்பினர். மேலும் தக்காளிகள் அந்த பள்ள த்தில் சிதறி கிடந்தன.
இது பற்றி தகவல் கிடைத் ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிழ்ந்த லாரியை மீட்டனர். மேலும் காயம் அடைந்த 2 பேரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம், குறைந்த பட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராகவன் முன்னிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, 5-வது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் 6-வது நாளாக தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சின்னசாமி, மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே 6-வது நாளாக தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,800 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். 500 நிரந்தர தூய்மை பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 257 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர்.
வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகர் பகுதியில் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி சென்று ள்ளதால் குப்பைகள் மலை போல் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்சமயம் மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
- தங்கவேல் உடல் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் அப்துல் கலாம் வீதியை சேர்ந்தவர் தங்கவேல் (50). இவர் மின்வாரிய பவானி மேற்கு அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் இன்று அதிகாலை பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பர்மரில் மின் பழுது ஏற்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர் மற்றும் சந்திரன் ஆகியோர் பழுதை சரி செய்ய சென்றனர். அப்போது சந்திரன் கீழே நின்று கொண்டு இருந்தார்.
தங்கவேல் டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து தங்கவேல் உடல் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதர்களுக்கு அடியில் மறைந்து இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- 2 பேரை கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனசரகர் சிவகுமார் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட வரப்பள்ளம் என்ற பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்காலின் இடது புறம் கரையில் ரோந்து சென்றார். அப்போது புதர்களுக்கு அடியில் மறைந்து இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பவானிசாகர் குடில் நகரை சேர்ந்த ஓதிச்சாமி (58), தினேஷ்குமார் (46) என்று தெரியவந்தது. மேலும் இவர்கள் சுருக்கு வைத்து 2 புள்ளிமான்களை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சிகளை விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து மான் இறைச்சிகள்,2 மான் தலைகள், மானின் கால்கள், சுருக்கு கம்பி, வெட்டு அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடிபோதையில் அங்கு வந்த கார்த்திக் தனியார் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
- கார்த்திக்கை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
கொடுமுடி:
கரூர் மாவட்டம் மராபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஈரோட்டில் இருந்து கரூர் வரை செல்லும் தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும், பஸ் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டத்தில் பஸ் கண்டக்டர் பணியில் இருந்து விலகி கொண்டார் கார்த்திக்.
இவர் பணிக்கு சேரும்போது தனது கண்டக்டர் உரிமை அட்டையை தனியார் பஸ் உரிமையாளரிடம் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். பணியில் இருந்து நின்றவுடன் தனது கண்டக்டர் உரிமை அட்டையை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு பஸ் உரிமையாளர் கொடுக்க மறத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஊஞ்சலூர் அருகே மணிமுத்தூர் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது குடிபோதையில் அங்கு வந்த கார்த்திக் தனியார் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட கார்த்திக்கை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கார்த்திக்கை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
- ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது.
- தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார்கள்.
கிருஷ்ணசாமி, தங்கமணி ஆகியோர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு மளிகை கடையை பூட்டி விட்டு கிருஷ்ணசாமி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டார்.
அப்போது இரவு 10 மணியளவில் வீட்டில் அவரது மனைவி தங்கமணி மட்டும் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் திடீரென இவர்களது வீட்டிற்குள் நுழைந்தார்.
பின்னர் முகமூடி நபர் திடீரென தங்கமணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலியை பறிக்க முயன்றார். அப்போது அவரிடம் இருந்து நகையை காப்பாற்ற தங்கமணி போராடினார்.
இதில் ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் மர்மநபருடன் போராடுவதை விட்டு விட்டு கீழே விழுந்தார். இந்த நேரத்தில் தங்கமணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார்.
பின்னர் தோட்டத்துக்கு சென்ற அவரது கணவர் கிருஷ்ணசாமி வீடு திரும்பினார். அப்போது மனைவி தங்கமணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
இதையடுத்து தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர்.
இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் பற்றி தெரிய வந்ததும் வெள்ளிதிருப்பூர் போலீசார் மற்றும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் துப்பறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
தற்போது இந்த பகுதியில் கரும்பு, வாழைக்காய் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் வெளி இடங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே தொழிலாளர்கள் போல் வந்து யாராவது நகை பறிப்பில் ஈடுபட்டார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமானு க்கும், தாயார் சிவகாமி அம்மையாருக்கும் தேன், பால், தயிர் உள்பட 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின்பு அலங்கார பூஜை நடந்தது.
பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீகம் ராஜசேகர் சிவாச்சாரியார் தலைமை யில் ரவி குருக்கள், செல்வ ரத்தின குருக்கள், பிரபு குருக்கள், மாணிக்கம் குரு க்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த ஆனி திருமஞ்சன அபிேஷக விழாவில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர். கட்டளை தாரர்கள் சார்பாக பக்தர்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
- விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 700 -க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு உள் மாவட்டம், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த சில நாட்களாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளதால் பல்வேறு காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 -க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று ஆயிரம் கிலோ பெட்டி தக்காளி வரத்தான நிலையில் இன்று 3 ஆயிரம் கிலோ தக்காளி பெட்டிகள் வரத்தாகின. இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் 80 வரை குறைந்து விற்கப்பட்டது.
ஆனால் அதே நேரம் பெல்ட் அவரை, பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. குறிப்பாக பச்சை மிளகாய் இன்று ஒரு கிலோ ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்கப்பட்டது. கடந்த மாதம் ரூ.70-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
ஒட்டன்சத்திரம், தாளவாடி, பெங்களூர் போன்ற பகுதியில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்து சில நாட்களாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது.
இதனால் பச்சை மிளகாய் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறி விலை கிலோவில் வருமாறு:-
பீட்ரூட்-60, கேரட்-80, பெல்ட் அவரை-100, பட்ட அவரை-90, கருப்பு அவரை-120, வெண்டைக் காய்-40, கத்திரிக்காய்-50, பாவக்காய்-65, பீர்க்கங் காய்-70, புடலங்காய்-50, கொத்தவரங்காய்-60, சுரக்காய்-20, இஞ்சி-220, உருளைக்கிழங்கு-30, முருங்கைக்காய்-50-60, முட்டைகோஸ்-25, காலிப்ளவர்-40, சின்ன வெங்காயம்-70, பெரிய வெங்காயம்-30, பச்சை மிளகாய்-120-130.






