என் மலர்
திண்டுக்கல்
- காலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
- கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. மாலை 4 மணிக்கு மேல் நீர்ப்பனியால் குளிர் தொடங்கி விடுகிறது. இரவு 8 மணிக்கு மேல் கடும் குளிர் நிலவுகிறது. இரவு 7 மணிக்கு மேல் சாலையில் நிற்கும் வாகனங்களில் கனமழை பெய்தது போல் நீர் நிரம்பி காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு 10 டிகிரி வரை குளிர் அதிகரிக்கிறது. காலை நேரங்களில் புல்வெளிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது. பனியின் தாக்கம் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக இரவு 8 மணி முதல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
காலை நேரங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் இரவில் விரைவாக இருப்பிடங்களுக்கு செல்வதும் காலை நேரங்களில் தாமதமாக வெளியில் வருவதுமாக உள்ளனர். இவ்வாறு கடும் குளிர் நிலவும் நிலையில் ஸ்வெட்டர், குல்லா விற்பனை மட்டுமே அதிகரித்துள்ளது.
ஏரிச்சாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் நடத்துபவர்கள் விரைவாகவே கடைகளை அடைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புல்வெளி மற்றும் நீர்நிலைகளில் உறைபனி படர்ந்திருப்பதால் அதனை சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.
கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும். இந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் பனியின் தாக்கம் சற்று அதிகரித்து உறைபனி ஓரிரு நாட்கள் தென்பட்டு மறைந்தது.
அதன் பிறகு மீண்டும் உறைபனி நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளும் முடங்கி வருகிறது.
- வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- வந்திதா பாண்டேவை உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வந்திதா பாண்டேவை உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பதவி ஏற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை மத்திய பணியில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பணிக்கு செல்ல வந்திதா பாண்டே விண்ணப்பித்திருந்த நிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரி வந்திதா பாண்டேவின் கணவர் வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
- ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதேபோல் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் உறுதிமொழியுடன் 8.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. கோட்டாட்சியர் சக்திவேல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.
அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் நத்தம் மூங்கில் பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24),மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பழனி ராஜ் (26), மாட்டின் உரிமையாளர்கள் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த நவீன் (28), தவசிமடையச் சேர்ந்த குணா (21), சிங்கராயன் (23), மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த வெற்றி (42), ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஜெரோம் (35), நத்தம் புங்கம்பாடியை சேர்ந்த ராமர் (55), முனியப்பன் (23) உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் குணா, ராமர், முனியப்பன் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, குடம், சைக்கிள், குத்து விளக்கு, வயர் கட்டில், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
- வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.
நத்தம்:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செட்டிநாடு பகுதிகளான காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனூர் பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குழு வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.
10 நாட்கள் இவர்கள் பாதயாத்திரையாக தங்கள் பயணத்தை தொடங்கி வைர வேலை காணிக்கையாக முருகனுக்கு செலுத்துவதுடன் தங்கள் நேர்த்திக்கடன் முடிந்ததும் நடந்தே தங்கள் ஊருக்கு திரும்புவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் கடந்த 2-ந்-தேதியன்று தேவக்கோட்டை நகரப் பள்ளியில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து இக்குழுவினர் புறப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களை கடந்து இவர்கள் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர்.
நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை அடைந்ததும் அங்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக ஏராளமான மயில்காவடியினர் பழனியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
அப்போது முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைர வேல் முன்னே கொண்டு செல்லப்பட்டது. இதை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் போன்றவைகளை செலுத்தி வழிபட்டனர்.
அதைதொடர்ந்து முருகன் புகழ்போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் காவடியை சுமந்து சென்றனர். வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்று வணங்கி வழியனுப்பினர்.
- பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
- 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பக்தர்களின் நலனுக்காக போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் கூறியதாவது:-
தைப்பூச பக்தர்களின் நலன் மற்றும் உதவிக்காக பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. குற்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு உதவிடவும் 'மே ஐ ஹெல்ப்' என்ற பெயரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அடிவாரம், பஸ் நிலையம், கிரிவீதிகளில் 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 பேர் கொண்ட 28 குற்ற தடுப்பு போலீஸ் குழு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை இருக்கும். எனவே அதையொட்டிய 4 நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பஸ்நிலையம், கோவிலுக்கு செல்லும் வழி, வாகன நிறுத்தம் தெரிந்து கொள்வதற்காக 300 வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 300 கேமராக்கள் பொருத்தும் பணியும் நடக்கிறது. ஓரிரு நாட்களில் அவை செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலைக்கோவிலுக்கு செல்ல ஒரு வழிப்பாதை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மலைக்கோவிலுக்கு செல்போன் கொண்டு சென்று பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உறை பனி இல்லாமல் நீர் பனி எனப்படும் சீசன் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
- கடும் குளிர் காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடம் முழுவதும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விழா மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இங்குள்ள நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், தூண்பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, பிரையண்ட் பார்க் ஆகியவை சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்லும் முக்கிய இடங்களாக உள்ளது.
கொடைக்கானலில் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் குளிர் நிலவி வரும். அதன்படி இந்த வருடமும் ஜனவரியில் கடும் குளிர் மற்றும் உறை பனி சீசன் காணப்பட்டது.
இருந்தபோதும் இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னரும் கடும் குளிர் நிலவி வருகிறது.
உறை பனி இல்லாமல் நீர் பனி எனப்படும் சீசன் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. பகல் பொழுதில் மேக மூட்டமும், பனிப்பொழிவும் நிலவுவதோடு மாலையிலேயே கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது.
கொடைக்கானலில் இ-பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தியும் கோடை காலத்தில் கூட்டம் சமாளிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்த குளிர் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடும் குளிர் காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
- திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பொருட்கள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
- விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிய வந்துள்ளது.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கரட்டழகன்பட்டியில் பந்தல் அலங்கார பொருட்கள் குடோன் வைத்துள்ளார். இங்கு திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பொருட்கள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
இன்று அதிகாலை அந்த கடையில் இருந்து திடீரென புகை மூட்டம் வந்தது. பின்னர் புகை அதிகரித்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் தலைமையில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குடோனில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து கருகியது.
இது குறித்து அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிய வந்துள்ளது.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு பரவுவது தவிர்க்கப்பட்டதுடன் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
- திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
- பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகபெருமானை தரிசனம் செய்து செல்வதுதான்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரப்பட்டது. அதன்பின்பு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டு கிடா, காமதேனு, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 6-ம் நாளான வருகிற 10ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத்தே ரோட்டம் வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகர் நதிக்கு எழுந்தருளலும், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும்.
ரத வீதிகளில் வெள்ளி தெய்வானை சதேம முத்துக்குமார சாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 14ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் பாதையில் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பழனி கோவிலில் நடைபெறும் தைப்பூசத்திரு விழாவை முன்னிட்டு பழனி-திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவில் எதிர்புறம் உள்ள காவடி மண்டபத்தில் தினமும் 7 ஆயிரம் பேருக்கும், தாராபுரம் சாலையில் உள்ள கொங்கூர் காவடி மண்டபத்தில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் ரூ.70 லட்சம் செலவில் அன்னதானம் வழங்கப்படும்.
மேலும் தைப்பூசம், பங்குனிஉத்திரம் திருவிழாக்களின் போது 10 நாட்களும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தைப்பூசதிரு விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
- தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திண்டுக்கல்:
இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் கந்தன் மலையை காப்பாற்றக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தனர் . இதில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் 100 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் குமரன் திருநகரில் உள்ள மாநில தொண்டரணி தலைவர் மோகன் என்பவரை நகர் வடக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
அதேபோல் வேடசந்தூரில் அகில இந்திய இந்து மகா சபா தேசிய துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி மற்றும் நிர்வாகி சரவண பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோரையும் வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் பகுதியில் வ.உ.சி. மக்கள் இயக்கம் மற்றும் ஒக்கலிக்கர் இளைஞர் பேரவையின் சார்பாக திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
இந்த போஸ்டரை வேடசந்தூர் பகுதியில் ஒட்டுவதற்காக ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 30), அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) ஆகியோர் ஒட்டியுள்ளனர்.
2 பேர் மீதும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
தகவல் அறிந்த இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட தலைவர் மாரிமுத்து, வ.உ.சி. மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் முருகேசன், ஒக்கலிகர் இளைஞர் பேரவை அமைப்பின் தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் கூடினர்.
போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 450 கனஅடி நீருடன் சேர்த்து 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 508 கனஅடி நீர் வருகிறது.
அணையின் நீர்மட்டம் 65.42 அடியாக உள்ளது. 4724 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.55 அடியாக உள்ளது. 104 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 107.58 அடியாக உள்ளது. 2.5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
போடி 0.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 1.2, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
- அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்னரே வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கத்தை அவர்கள் இந்த ஆண்டும் கடைபிடித்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கடந்த ஆண்டு மாட்டு வண்டிகளை கிரி வீதியில் நிறுத்த அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாக தனியார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ரூ.400 கட்டணத்துக்கு மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன வசதி இல்லாத காலத்தில் இருந்து எங்கள் முன்னோர்கள் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
மேலும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும், சிரமம் இன்றியும் மலைக்கோவிலுக்கு செல்லவும், பின்னர் அங்கிருந்து அடிவாரம் வந்தடையவும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 1 மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
தற்போது தைப்பூச திருவிழா நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (30-ந் தேதி) ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதை, யானைப்பாதை வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை இருந்தது.
- 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அப்பனம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை இருந்தது. இதனால் அரவிந்த்குமார் குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் கண்புரை பிரச்சனை இருப்பதை கண்டறிந்து கண்பிரிவு டாக்டர்களை சிகிச்சையளிக்க பரிந்துரைத்தனர். கண்பார்வை பிரிவு டாக்டர்கள் குழந்தைக்கு லென்ஸ் பொருத்தலாமா? என ஆலோசித்தனர்.
ஆனால் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் சிகிச்சை செய்ய முடியும் என்பதால் தற்போது கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
முதலில் வலது கண்ணில் சிகிச்சை செய்தனர். ஆரோக்கியமான நிலையில் குழந்தைக்கு கண் பார்வையும் கிடைத்தது. மீண்டும் 1 மாதம் கழித்து இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டனர்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அறுவை சிகிச்சை குழுவில் உள்ள குழந்தைகள், மயக்கவியல், கண்பார்வை போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் டாக்டர்களை பாராட்டினர்.






