என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சீமானின் கொள்கை, கோட்பாடுகளை விரும்பி இணைந்தோம்.
    • அரசியலில் விஜய் எங்களோட ஜூனியர் தான். நாங்கள் தான் சீனியர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் இளையராஜா தலைமையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா கூறியதாவது:-

    * நாம் தமிழர் கட்சியில் ஏறக்குறைய 7 ஆண்டு காலமாக அரூர் தொகுதி தலைவராக பணியாற்றி உள்ளேன்.

    * 7 ஆண்டு காலமாக பயணித்த இந்த காலகட்டங்களில் பல்வேறு விருப்பு, வெறுப்புகளுக்கு இணங்க கனத்த இதயத்துடன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன்.

    * தருமபுரியில் கூண்டோடு நாம் தமிழர் கட்சி கலைப்பு என்கிற தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே கிடையாது. இப்பொழுது இருக்கிற உறவுகள் மட்டும் தான் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர்.

    * கட்சியில் இருந்து விலக காரணம்... சீமானின் கொள்கை, கோட்பாடுகளை விரும்பி இணைந்தோம். அந்த கொள்கை கோட்பாடுகளில் இருந்து விலகி இருக்கின்ற, ஆளுகின்ற, ஆளப்போகிற, ஆண்ட தலைவர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதும், சாதிகளை தரம்தாழ்ந்து பேசுவதும், எங்களுடைய வரலாற்று மாற்றத்திற்கான அதற்கான சிக்கல்களை ஏற்படுத்தும் விதமாக பேசுவதும், அதே சமயம் நாங்கள் கஷ்டப்பட்டு கட்சியை கட்டமைக்கும் போது, தமிழ் தேசியம் என்ற அளவில் நீங்கள் பேசுவது கட்டமைப்பை சிதைக்கிறது என்பதால் நாங்கள் இதில் பயணிப்பது பயன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுகிறோம்.

    * கட்சியில் இருந்து விலகுகிறோம். மேற்கொண்டு பொறுப்பாளர்களிடம் பேசி என்ன முடிவு என்பதை தெரிவிக்கிறோம்.

    * நாங்க நடிக்க வைக்கிற இயக்குனர் கிட்ட இருந்து வருகிறோம். அதனால நடிகரை பார்த்து கட்சியை பார்த்து விலக வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் விஜய் எங்களோட ஜூனியர் தான். நாங்கள் தான் சீனியர் என்றார். 

    • மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
    • விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இங்கு இருந்து வியாபாரிகள் தக்காளியை வாங்கி தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். பாலக்கோடு மார்க்கெட்டில் ரகத்திற்கு ஏற்ப தக்காளியை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.

    இந்தநிலையில் பாலக்கோடு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    நாள் ஒன்றுக்கு 300 டன் அளவுக்கு தக்காளி விற்பனைக்காக வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.280- க்கும். சில்லரையாக ஒரு கிலோ ரூ.18-க்கும் விற்பனையாகிறது. தருமபுரி உழவர் சந்தையில் இன்று ரூ.18-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனையான தக்காளி தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது, மேலும் பண்டிகை மற்றும் சுபமு கூர்த்த தினங்கள் இல்லாத தாலும் விலை சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்துள்ளது.
    • மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்துள்ளது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதன் காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
    • நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்ற வாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
    • போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தொடர் மழை காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பிய நிலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி போக்குவரத்து நிறுத்தம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு ஏரியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 107 ஏக்கர் பரப்பளவில் 13 மில்லி கன அடி தண்ணீர் தேக்கி வைக்கவும், 20 அடி உயரத்தைக் கொண்டது.

    ஃபெஞ்சல் புயல் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் வாணியாறு அணை அதன் முழு கொள்ளளவான 63.30 அளவை எட்டியது. தற்போது அணைக்கு 375கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்புக்கு கருதி தினமும் 1125 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வெங்கட சமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டி ஏரி நிரம்பி வாணியாற்று நீர் தற்போது தென்கரைக் கோட்டை ஏரியின் முழு அளவை எட்டியுள்ளது.

    இதை அடுத்து திடீரென நேற்று அணையின் கிழக்குப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில்அரூர் கோட்டாட்சியர் சின்னசாமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஏரி பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு தீவிர பாதுகாப்பு பணியை எடுக்க தொடங்கினர்.

    அதன்படி உடனடியாக ராமியமபட்டி- ஏ. பள்ளிப்பட்டி நெடுஞ்சாலை உடனடியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது,

    போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது, அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும் உடனடியாக ஏரியில் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடைகள், பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெறியேற்றப்பட்டனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    தென்கரைக்கோட்டை ஏரியில் பாதுகாப்புக் கருதி ஏரிக்கு வரும் நீர் பெருமளவு உபர் வெளியேற்றும் கால்வாய் வழியாக சில அடைப்புக்களை எடுத்து விட்டு கல்லாற்றில் தண்ணீர் அனுப்பப்பட்டு அரூர் ஏரிக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொதுப்பணித் துறையினர் விரிசலை தடுக்கும் பொருட்டு உடனடியாக 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தயார் செய்து ஏரியில் விரிசல் பகுதியில் அடுக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தென்கரைக்கோட்டை ஏரியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்ற செய்தி காட்டுத் தீயாக இந்தப் பகுதியில் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரகாரம் முனியப்பன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தப் பகுதியில் முனியப்பன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இது விளங்குகிறது.

    இந்நிலையில் இந்த கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது .

    அதனை இக்கோவிலில் பணிபுரியும் செயல் அலுவலர் மற்றும் பூசாரி ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

    அப்போது அவர்கள், கோவில் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும். அதற்கான செலவினங்களை ஊர் பொது மக்களே தருகிறோம் என கோரிக்கை விடுத்தும், அதை செயல்படுத்தவில்லை.


    மேலும், பூசாரி உண்டியலில் பணம் போடுவதை தடுத்து, காணிக்கையாக பணங்களைப் பெற்று வருகிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். உண்டியல் பணத்தை எண்ணும் பொழுது வழக்கமான நடைமுறைகளை கடைபிடிக்காமல், முறைகேடாகவும், முறையாக கணக்கு காட்டுவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

    செயல் அலுவலர் மற்றும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அந்த பகுதியில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.
    • வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது .

    அரூர்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக பகுதியில் உள்ள வரட்டாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று காலை அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி கிராமத்தில் சாமநத்தம் ரங்கசாமி தோட்டத்தின் அருகே செல்லும் வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது . இதனை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    • கிருஷ்ணகிரி நகரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.
    • சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

    தருமபுரி:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக இன்று (12-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, அ.பள்ளிப்பட்டி மெனசி சிந்தல்பாடி, வெங்கடச முத்திரம், மோளையானூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, செலம்பை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இந்தமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

    ஊத்தங்கரையில் கடந்த 2-ந் தேதி பெய்த கனமழையால் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும், டூரிஸ்ட் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதும், மழை நீரால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மக்கள் தவித்து வரும் சூழ்நிலையில் பலரது வீடுகள் இல்லாமல் உள்ளனர்.

    இந்நிலையில் ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதோடு, வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 2-ந் தேதி மழையால் ஏற்பட்ட தாக்கத்தை போல் இன்றும் நடந்து விடுமோ என்று இப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    இது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்பொழுது வரையிலும் விடுமுறை அளிக்காததால் பள்ளி மாணவர்களும் பாதிப்பு உள்ளாகி மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் அவல நிலை நிலவி வருகிறது. 

    • சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.
    • குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் நகர பகுதியிலான திருவிக நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சாலைகளில் குட்டிகளுடன் உலா வந்த வண்ணம் உள்ளன.

    அதனை தொடர்ந்து நேற்று இரவும் திருவிக நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.

    அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனத்தை இயக்கி சென்றனர். எனவே ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.
    • குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 2 குழந்தைகள் யாருடைய அரவணைப்பின்றி சுற்றித் திரிந்தனர்.

    நீண்ட நேரமாக 2 குழந்தைகளும் சுற்றி வந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் 2 குழந்தைகளை அழைத்து விசாரணை செய்ததில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு-நந்தினி தம்பதியினரின் குழந்தைகளான ராகவஸ்ரீ(5), முகேஸ்(3) என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றவர் யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் குழந்தைகளின் தாயார் நந்தினியே மருத்துவமனையில் குழந்தைகளை விட்டுச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இந்த குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நந்தினியின் அண்ணன் பாலாஜியிடம் 2 குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சேட்டுக்கும், நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதும், இதனால் தாயார் நந்தினி தனது 2 குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×