என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • மற்ற மாடுகள் வெடி சத்தத்தால் சிதறி ஓடி உள்ளது.

    ஏரியூர்:

    ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). விவசாயி இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் உள்ளார்.

    இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில், குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேலும் 10 பசு மாடுகளை வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இவர்கள் தங்களது விவசாய நிலம் அருகில், உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆடு மற்றும் மாடுகளை மேய்த்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பினர். மேச்சலுக்குச் சென்ற மாடுகள் சென்ற பகுதியில் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது் மாடுகள் அலறி கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடி உள்ளது. இதனை கண்ட விவசாயி கோவிந்தராஜ், வெடிச்சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஒரு பசு மாட்டின் முகத்தில் வாய் பகுதி சிதறி ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் விழுந்து கிடந்துள்ளது.

    அந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டு இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. அப்பகுதியில், மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    அதனை அறியாமல், அந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற மாடு நாட்டு வெடிகுண்டை கடித்ததால் முகம் சிதறி படுகாயம் அடைந்தது தெரிய வந்துள்ளது. மற்ற மாடுகள் வெடி சத்தத்தால் சிதறி ஓடி உள்ளது. ஒரு மாடு, முழுமையாக முகம் சிதறி, பற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததைக் கண்டு கோவிந்தராஜூம், அவரது மனைவி வளர்மதியும், கதறி அழுதனர்.

    இதுகுறித்து கோவிந்தராஜ் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார்

    வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட, மர்ம நபர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி வளர்த்து வந்த 21 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து பலியாகி உள்ளது. அதற்கான எவ்வித நிவாரணமும் கிடைக்காமல், அந்த பாதிப்பில் இருந்து விடுபடாமல் இருந்த விவசாயிக்கு, மீண்டும் நாட்டு வெடி குண்டுக்கு ஒரு மாடு இறக்கும் தருவாயில் உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாட்டு வெடிகுண்டு வெடித்து, பசு மாடு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் செய்தி, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசின் உளவுத்துறை அறிவுறுத்தல்.
    • போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தருமபுரி:

    நாடு முழுவதும் வருகிற 26ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசின் உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி தருமபுரி நகரம் மற்றும் புறநநகர் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி தருமபுரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பேசஞ்சர் உள்ளிட்ட ரெயில்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது ரெயில்நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் ரெயில் நிலைய நுழைவு வாயில், பார்சல் அலுவலகம், நடைமேடைகள் வாகனம் நிறுத்தும் இடங்கள் சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் தினகரன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாமுவேலை தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி அடுத்த மண்ணூர் கிராமத்தைச் சார்ந்தவர் சாமுவேல்.

    இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஆராதனா (வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆராதனா விவசாய நிலத்தில் வெட்டப்பட்டுள்ள சிறிய குட்டையில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசாருக்கு தெரியாமல் மாலை 6 மணிக்கு மேல் அடக்கம் செய்து விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் தினகரன் என்பவருக்கு கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக 1அலுவலர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரித்ததில் உண்மை என தெரிய வந்தது.

    இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தினகரன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாமுவேலை தேடி வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ச்சி காட்டுப் பன்றியை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.
    • பிரபாகரனை கைது செய்த வனத்துறையினர், உதவி வன பாதுகாவலர் சரவணன் மூலம், அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அரூர்:

    தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்த குமாருக்கு, கீழானூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, வாதாப்பட்டி பிரிவு வனவர் சாக்கப்பன், வன காப்பாளர்கள் ரமேஷ்குமார், பெரியசாமி ஆகியோர் குழுவுடன் சென்று, பொய்யப்பட்டி காப்புக்காட்டை ஒட்டிய கீழானூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது மின்சாரம் பாய்ச்சி காட்டுப் பன்றியை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து விவசாயி பிரபாகரன் (30) என்பவரை பிடித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அதில் பிரபாகரன், பயிரிட்டுள்ள நெல் வயலில், காட்டுப்பன்றிகள் அடிக்கடி வந்து பயிர்களை சேதப்படுத்தி சென்றன.

    அதை தடுக்க மின்சார வேலி அமைத்திருந்தார். அதில் காட்டுப்பன்றி சிக்கி உயிரிழந்தது. அதை சமைத்து சாப்பிட்டு விட்டு, மீதமுள்ள இறைச்சியை வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து பிரபாகரனை கைது செய்த வனத்துறையினர், உதவி வன பாதுகாவலர் சரவணன் மூலம், அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின.
    • அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அபி (வயது28). இவருடைய மனைவி நாகவேணி (25). இவர்களுக்கு கவிநிலா (6) என்ற மகள் இருந்தாள். கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.

    காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி கிராமத்தில் வசிக்கும் வள்ளி என்ற பெண்ணும், நாகவேணியுடன் பெங்களூருவில் வேலைபார்த்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வள்ளி தனது சொந்த கிராமமான பூமாண்டஅள்ளிக்கு சிறுமி கவிநிலாவை மட்டும் அவரது பெற்றோர் அனுமதியுடன் அழைத்து வந்துள்ளார். வள்ளியின் பக்கத்து வீட்டில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார்.

    நேற்று மதியம் சிறுமி கவிநிலா வள்ளியிடம் கூறிவிட்டு தர்மன் வீட்டின் மொட்டை மாடிக்கு விளையாட சென்றாள். அந்த மொட்டை மாடியில் சிறிய அறை ஒன்று உள்ளது.

    அந்த அறையில் நாட்டு வெடிகள் (கயிற்றால் சுற்றப்பட்ட குண்டு வெடிகள்) அங்கு வைத்திருந்தனர். இதனிடையே அந்த அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் எதிர்பாராத விதமாக அந்த அறையின் ஒரு பக்க சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்த அறையும் இடிந்து சேதம் அடைந்தது.

    அதே நேரத்தில் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி கவிநிலாவும் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டு, துண்டாகி கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தாள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயங்களையும் சேகரித்தனர். பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுமி உயிரிழந்த செய்தி பெங்களூருவில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே விரைந்து வந்து தனது மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளை வாங்கிக் கொண்டு தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேர் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.

    இதனால் தயாரித்த வெடிகளை காய வைத்து மொட்டை மாடியில் அறை யில் வைத்துள்ள போது எதிர்பாராதவிதமாக வெடி த்ததில் சிறுமி பலியாகி யுள்ளது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளர் தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் வெடிக்காத நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.

    • பொங்கல் விடுமுறையையொட்டி பூமாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமிக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.
    • பக்கத்து வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த நாட்டு வெடியை தெரியாமல் மிதித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நாட்டு வெடி வெடித்து 6 வயது சிறுமி கவிநிலா உயிரிழந்துள்ளார்.

    பொங்கல் விடுமுறையையொட்டி பூமாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமிக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.

    பக்கத்து வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த நாட்டு வெடியை தெரியாமல் மிதித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகைக்கு வாங்கி மீதம் இருந்து நாட்டு வெடியை மாடியின் மீது வைத்திருந்த நிலையில் விபரீதம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
    • எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வர்.

    இதனிடையே தமிழக - கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள எஸ்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன் (வயது26). இவர் தனியார் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு பாலகோட்டை எனும் கிராமத்தின் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு நாய்க்குத்தி கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தகிரி மகன் பூபாலன் (34) மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்

    அவர்கள் அச்சுதனை பார்த்து எதற்காக வேகமாக செல்கிறாய் என திட்டியதாகவும் அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

    பின்னர் நாய்க்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அச்சுதன் (26), தினேஷ் (25), வினோத் (27), ராகவன் (23) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அந்த கிராமத்தினர் திருப்பி தாக்க முற்பட்டபோது வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியினர் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாய்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன், ரமேஷ் (24), ராஜ் குமார் (39), குமார் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி. கரிகால்பாரிசங்கர் ஆகியோர் அங்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர்.
    • 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஈச்சம்பள்ளம், புதுப்பட்டி, எட்டிக்குழி, நெற்குந்தி, கருப்பயனூர், ஜீவா நகர் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் சுமார் 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வந்துள்ளது.

    மேலும் சாலை சரியில்லாததால் பிரசவ காலங்களில் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் சாலை சரியில்லை என்றுகூறி இந்த வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் பஸ்களும் சாலை சரியில்லாததால் போதிய பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    எனவே சாலையை சீரமைத்து தர வேண்டி பலமுறை அரசு அதிகாரிக ளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியும், கடந்த 15 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஈச்சம்பள்ளம் கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் உடன்படாத கிராம மக்கள் பின்பு பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவ லர், தாசில்தார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததின் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    4 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    • விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.
    • மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.

    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.

    இதில் காரிமங்கலம் அடுத்த ராமாபுரம் மண்டு பகுதியில் மாலை 3 மணி அளவில் எருது விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எருதுகளை பொதுமக்கள் இளைஞர்கள் அலங்கரித்து இழுத்துச் சென்றனர்.

    இதில் மாடுகள் அங்குமிங்குமாக இழுத்துச் சென்றபோது மாடு ஆக்ரோசமாக ஓடியதில் கெரகோடஅள்ளியை சேர்ந்த சுதர்சன் (வயது25), ராமாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (30) ஆகியோர் மாடு முட்டியதில் வயிற்றில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதேபோல் மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாடு முட்டி காயமடைந்த சுதர்சன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சுதர்சனின் உடல் நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கும்பார அள்ளி ஊராட்சியில் நடந்த எருது விடும் நிகழ்ச்சியில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. ஊர் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு எருது விடும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    காரிமங்கலம் ராமசாமி கோவிலில் இன்று மாலை எருது விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
    • தீயணைப்பு துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 13-ந்தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. 14-ந்தேதி வாசல் பொங்கலும், 15-ந்தேதி மாட்டுப் பொங்கலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் காணும் பொங்கல் விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இன்று சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். தொங்கு பாலம், நடைபாதை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பரிசல் சவாரி ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. உணவகங்கள், மீன் வறுவல் கடைகள், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கிடையே பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

    மேலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் குவிந்ததால் பஸ் நிலையம் அஞ்செட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் தீட்டு ஆலம்பாடி மெயின் அருவி நடைபாதை மசாஜ் செய்யும் இடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    ×