என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி உயிரிழப்பு- கறியை சமைத்து சாப்பிட்ட விவசாயி கைது
- மின்சாரம் பாய்ச்சி காட்டுப் பன்றியை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.
- பிரபாகரனை கைது செய்த வனத்துறையினர், உதவி வன பாதுகாவலர் சரவணன் மூலம், அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அரூர்:
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்த குமாருக்கு, கீழானூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வாதாப்பட்டி பிரிவு வனவர் சாக்கப்பன், வன காப்பாளர்கள் ரமேஷ்குமார், பெரியசாமி ஆகியோர் குழுவுடன் சென்று, பொய்யப்பட்டி காப்புக்காட்டை ஒட்டிய கீழானூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சோதனை மேற் கொண்டனர்.
அப்போது மின்சாரம் பாய்ச்சி காட்டுப் பன்றியை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விவசாயி பிரபாகரன் (30) என்பவரை பிடித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் பிரபாகரன், பயிரிட்டுள்ள நெல் வயலில், காட்டுப்பன்றிகள் அடிக்கடி வந்து பயிர்களை சேதப்படுத்தி சென்றன.
அதை தடுக்க மின்சார வேலி அமைத்திருந்தார். அதில் காட்டுப்பன்றி சிக்கி உயிரிழந்தது. அதை சமைத்து சாப்பிட்டு விட்டு, மீதமுள்ள இறைச்சியை வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பிரபாகரனை கைது செய்த வனத்துறையினர், உதவி வன பாதுகாவலர் சரவணன் மூலம், அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






