என் மலர்
தர்மபுரி
- இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 300 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
- ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்தது.
ஒகேனக்கல்:
காவிரி கரையோரங்களில் மழையின் அளவு குறைந்ததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரானது முழுமையாக நிறுத்தப்பட்டதாலும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் சில தினங்களாக வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 700 கன அடியாக சரிந்தது.
இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 300 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்தது.
- குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார்.
- வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேசன் (52). இவருக்கு திருமணம் ஆகி மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதேசன் வடமாநிலத்தில் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார். இன்று காலை சமையல் செய்வதற்காக சிலிண்டரின் அருகில் சென்றபோது திடீரென வெடித்து சிதறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மாதேசன் தீக்காயங்களுடன் தூக்கி எறியப்பட்டுள்ளார். வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சில பகுதிகளும் சேதம் அடைந்தன.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது மாதேசன் வீடு இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், துணிமணிகள், மளிகை பொருட்கள், கட்டில், பீரோ என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறை நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி மாவட்ட செயலாளரான தேன்கனிக்கோட்டையை சேர்ந்த குருபிரசாத் (எ)கார்த்திக் (வயது29), மற்றும் அரிஷ் (29), சேசாத்திரி (19), வசந்தகுமார் (20), ஜெய குமார் (23), பவன்குமார் (22), சதீஷ் (29), பிரபு (19), ரவிக்குமார் (31), யஷ்வந்த குமார் (28) உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றத்தில் வரும் 4-ந்தேதி நடைபெறும் போராட்டம் குறித்து போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
அதில் மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் கணேஷ் குமார், எஸ்.ஐ. நாகராஜ் ஆகியோர் போஸ்டர் ஓட்டிக் கொண்டிருந்த 10 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதை அறிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, பா.ஜ.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
அப்போது தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவித்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேன்கனிக்கோட்டை நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து மேஜிஸ்திரேட் தினேஷ் 10 பேரையும் பிப்ரவரி 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார்.
- 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர், சூளகிரி, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் உள்ளன.
இந்த கல் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜல்லிக்கற்கள், எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ரோபோ சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்கள், கட்டுமானப் பணிகளுக்காக ஓசூர் சுற்றுப்புற பகுதிகளுக்கும் அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கல்குவாரி உரிமையாளர்கள் ஜல்லிக்கற்கள் மற்றும் எம் சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு ரூ.125, ரோபோ சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு ரூ.200 மற்றும் பி சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு 225 என விலை உயர்த்தி உள்ளனர். இந்த விலை ஏற்றத்தால் பாதிப்படைந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப் பட்ட லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை இயக்காமல் அங்கங்கே நிறுத்திவிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பணிகளை நம்பி வாழும் லாரி ஓட்டுநர்கள், கட்டிட மேஸ்திரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஹாலோ பிளாக் கற்கள் தயார் செய்யும் தொழிலாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
- ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.
ஒகேனக்கல்:
தை அமாவாசையை யொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்ற வற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம்.
மகாளய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வந்து காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இதைத்தொடர்ந்து தை மகாளய அமாவாசையான இன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.
பின்னர் அவர்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்
திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஏரளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்று இன்று தை அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு தென்பாணை ஆற்றங்கரையில் காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்து புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாக ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் முன்பு ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பொதுமக்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி காய்கறி அகத்திக்கீரை, வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபட்டனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,200 கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
- மற்ற மாடுகள் வெடி சத்தத்தால் சிதறி ஓடி உள்ளது.
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). விவசாயி இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் உள்ளார்.
இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில், குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும் 10 பசு மாடுகளை வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது விவசாய நிலம் அருகில், உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆடு மற்றும் மாடுகளை மேய்த்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பினர். மேச்சலுக்குச் சென்ற மாடுகள் சென்ற பகுதியில் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது் மாடுகள் அலறி கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடி உள்ளது. இதனை கண்ட விவசாயி கோவிந்தராஜ், வெடிச்சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஒரு பசு மாட்டின் முகத்தில் வாய் பகுதி சிதறி ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் விழுந்து கிடந்துள்ளது.
அந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டு இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. அப்பகுதியில், மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதனை அறியாமல், அந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற மாடு நாட்டு வெடிகுண்டை கடித்ததால் முகம் சிதறி படுகாயம் அடைந்தது தெரிய வந்துள்ளது. மற்ற மாடுகள் வெடி சத்தத்தால் சிதறி ஓடி உள்ளது. ஒரு மாடு, முழுமையாக முகம் சிதறி, பற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததைக் கண்டு கோவிந்தராஜூம், அவரது மனைவி வளர்மதியும், கதறி அழுதனர்.
இதுகுறித்து கோவிந்தராஜ் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார்
வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட, மர்ம நபர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி வளர்த்து வந்த 21 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து பலியாகி உள்ளது. அதற்கான எவ்வித நிவாரணமும் கிடைக்காமல், அந்த பாதிப்பில் இருந்து விடுபடாமல் இருந்த விவசாயிக்கு, மீண்டும் நாட்டு வெடி குண்டுக்கு ஒரு மாடு இறக்கும் தருவாயில் உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டு வெடிகுண்டு வெடித்து, பசு மாடு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் செய்தி, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசின் உளவுத்துறை அறிவுறுத்தல்.
- போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி:
நாடு முழுவதும் வருகிற 26ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசின் உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தருமபுரி நகரம் மற்றும் புறநநகர் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையொட்டி தருமபுரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பேசஞ்சர் உள்ளிட்ட ரெயில்களில் சோதனை நடத்தினர்.
அப்போது ரெயில்நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் ரெயில் நிலைய நுழைவு வாயில், பார்சல் அலுவலகம், நடைமேடைகள் வாகனம் நிறுத்தும் இடங்கள் சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கிராம நிர்வாக அலுவலர் தினகரன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாமுவேலை தேடி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி அடுத்த மண்ணூர் கிராமத்தைச் சார்ந்தவர் சாமுவேல்.
இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஆராதனா (வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆராதனா விவசாய நிலத்தில் வெட்டப்பட்டுள்ள சிறிய குட்டையில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசாருக்கு தெரியாமல் மாலை 6 மணிக்கு மேல் அடக்கம் செய்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் தினகரன் என்பவருக்கு கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக 1அலுவலர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரித்ததில் உண்மை என தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தினகரன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாமுவேலை தேடி வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ச்சி காட்டுப் பன்றியை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.
- பிரபாகரனை கைது செய்த வனத்துறையினர், உதவி வன பாதுகாவலர் சரவணன் மூலம், அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அரூர்:
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்த குமாருக்கு, கீழானூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வாதாப்பட்டி பிரிவு வனவர் சாக்கப்பன், வன காப்பாளர்கள் ரமேஷ்குமார், பெரியசாமி ஆகியோர் குழுவுடன் சென்று, பொய்யப்பட்டி காப்புக்காட்டை ஒட்டிய கீழானூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சோதனை மேற் கொண்டனர்.
அப்போது மின்சாரம் பாய்ச்சி காட்டுப் பன்றியை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விவசாயி பிரபாகரன் (30) என்பவரை பிடித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் பிரபாகரன், பயிரிட்டுள்ள நெல் வயலில், காட்டுப்பன்றிகள் அடிக்கடி வந்து பயிர்களை சேதப்படுத்தி சென்றன.
அதை தடுக்க மின்சார வேலி அமைத்திருந்தார். அதில் காட்டுப்பன்றி சிக்கி உயிரிழந்தது. அதை சமைத்து சாப்பிட்டு விட்டு, மீதமுள்ள இறைச்சியை வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பிரபாகரனை கைது செய்த வனத்துறையினர், உதவி வன பாதுகாவலர் சரவணன் மூலம், அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின.
- அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அபி (வயது28). இவருடைய மனைவி நாகவேணி (25). இவர்களுக்கு கவிநிலா (6) என்ற மகள் இருந்தாள். கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.
காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி கிராமத்தில் வசிக்கும் வள்ளி என்ற பெண்ணும், நாகவேணியுடன் பெங்களூருவில் வேலைபார்த்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வள்ளி தனது சொந்த கிராமமான பூமாண்டஅள்ளிக்கு சிறுமி கவிநிலாவை மட்டும் அவரது பெற்றோர் அனுமதியுடன் அழைத்து வந்துள்ளார். வள்ளியின் பக்கத்து வீட்டில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் சிறுமி கவிநிலா வள்ளியிடம் கூறிவிட்டு தர்மன் வீட்டின் மொட்டை மாடிக்கு விளையாட சென்றாள். அந்த மொட்டை மாடியில் சிறிய அறை ஒன்று உள்ளது.
அந்த அறையில் நாட்டு வெடிகள் (கயிற்றால் சுற்றப்பட்ட குண்டு வெடிகள்) அங்கு வைத்திருந்தனர். இதனிடையே அந்த அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் எதிர்பாராத விதமாக அந்த அறையின் ஒரு பக்க சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்த அறையும் இடிந்து சேதம் அடைந்தது.
அதே நேரத்தில் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி கவிநிலாவும் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டு, துண்டாகி கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயங்களையும் சேகரித்தனர். பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழந்த செய்தி பெங்களூருவில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே விரைந்து வந்து தனது மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளை வாங்கிக் கொண்டு தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேர் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.
இதனால் தயாரித்த வெடிகளை காய வைத்து மொட்டை மாடியில் அறை யில் வைத்துள்ள போது எதிர்பாராதவிதமாக வெடி த்ததில் சிறுமி பலியாகி யுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளர் தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் வெடிக்காத நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.






