என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகளின் வசதிக்காக புதிதாக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் மிகவும் பழமையான ரெயில் நிலையம். பஸ்நிலையத்துக்கு அருகாமையில் ரெயில் நிலையம் அமைந்து இருப்பதால் இங்கு ஏராளமான பொதுமக்கள் ரெயில் பயணம் செய்ய வருகிறார்கள். இதனால் 24 மணி நேரமும் பயணிகள் வந்து சென்றவண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.

    ஆனால் பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட அதிகாரிகள், திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க இருப்பதாகவும், ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

    அதன்படி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த டிக்கெட் முன்பதிவு மையம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகளின் வசதிக்காக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நடைமேடையை உடைத்து குழாய்கள் அமைக்கும் பணியும், கட்டிடங்களை சீரமைக்கும் வகையில் வர்ணம் பூசும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியின் போதே, ரெயில் நிலையத்தில் கழிப்பறை, மேற்கூரை போன்ற வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கருவேல மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம கும்பல் பொதுமக்களை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.
    மங்கலம்பேட்டை:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே மாத்தூர் ஊராட்சியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அரிவேரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில், பல ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பெரிய, பெரிய அளவிலான கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளது.

    இந்த மரங்களை மர்ம கும்பலை சேர்ந்த சிலர் வெட்டி கடத்த முயன்றனர். இந்த தகவல் கிராம மக்களிடையே பரவியது. இதனையடுத்து, சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு, சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த மர்ம கும்பலை சுற்றி வளைக்க முற்பட்டனர்.

    ஆனால், கிராம மக்கள் திரண்டு வருவதை அறிந்த அந்த மர்ம கும்பல், பொதுமக்களிடம் பிடிபடாமல் லாவகமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து, மாத்தூர் கிராம மக்கள், மங்கலம் பேட்டை போலீசாருக்கும், விருத்தாசலம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மங்கலம் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், காமராஜ் மற்றும் விருத்தாசலம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மர்ம கும்பல் மரம் வெட்ட பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 4 மரம் வெட்டும் மோட்டார் மெஷின் உள்ளிட்ட கருவிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடிவருகிறார்கள்.
    விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடும் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று கடலூர் நகர இந்து முன்னணி கட்சி ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பதில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இது இந்துக்களுக்கு மதவழிபாட்டு உரிமையை மறுப்பதுபோல் உள்ளது. தற்போது போலீசார் விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக கலெக்டர் மற்றும் சப்-கலெக்டரிடம் அனுமதி வாங்கி விட்டு கொண்டாட முடியும் என கூறியுள்ளனர்.

    இதனால் அடிதட்டு மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விழாவை எளிதாகவும், கட்டுப்பாடு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மேல்மாம்பட்டு கிராமத்தில் கடந்த 9 மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    பண்ருட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் நிலஅளவீடு செய்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் செட்டி பட்டறை என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

    இதன்பேரில் கடந்த சில நாட்களாக ஏரியை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகளையும் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வந்தனர்.

    எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுரம் பகுதியில் மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இன்று காலை தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சமத்துவபுரம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் இந்த நிலத்தை சமத்துவபுரம் பகுதி மக்களுக்கே வழங்க வேண்டும் எனக்கூறி நில அளவீடு செய்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் ஆறுமுகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர்கள் காடாம்புலியூர் மற்றும் சமத்துவபுரம் பகுதியிலேயே ஏராளமான பொதுமக்கள் சொந்த வீடு மற்றும் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த பகுதி பொதுமக்களுக்கு இடம் வழங்குங்கள் அதன் பிறகு மீதமுள்ள இடங்களை செட்டிப்பட்டறை ஏரிக்கரை பகுதியில் வீடுகளை இழந்த மக்களுக்கு இடம் வழங்குங்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தாசில்தார் ஆறுமுகம் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அதிகாரிகளை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காவிரி தண்ணீரை கடைமடை பகுதிக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்ப கூடாது. வீராணம் ஏரி மற்றும் வடக்குராஜன் வாய்க்கால் ஆகியவைகளை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

    இதையொட்டி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ் மற்றும் மாதவன் தலைமையில் வட்டத்தலைவர் ஜாகீர்உஷேன், குமராட்சி ஒன்றிய தலைவர் முனுசாமி, வட்ட செயலாளர் விஜயகுமார் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் இன்று காலை காட்டு மன்னார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர்.

    ஆனால் விவசாய சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி போலீசாருக்கும், விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.


    போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து இழுத்து சென்ற காட்சி.

    உடனே போலீசார் விவசாய சங்கத்தினர் மீது தடியடி நடத்தினர். பின்னர் விவசாய சங்க நிர்வாகிகள் 25 பேரை கைது செய்து வேனில் ஏற்றி காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்று விவசாய சங்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
    வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து 102 கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 16 கிலோ மீட்டர் நீளமும், 5.6 கிலோ மீட்டர் அகலமும், 48 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்டது.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்தது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,400 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 145 கனஅடி குறைவாகும்.

    ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.06 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.80 அடியாக உள்ளது. தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நேற்று விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரியின் 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவு கன அடி தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது.

    வீராணம் ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில், ஸ்ரீ முஷ்ணம், சிதம்பரம், புவனகிரி, தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
    வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேப்பூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அப்பு(வயது 92). இவரது மகன் கண்ணன்(66). கண்ணனின் மனைவி ஜெயஸ்ரீ(56). இவர்களது மகள் காமாட்சி(19). இவர்கள் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி தஞ்சாவூரில் இருந்து திருத்தணிக்கு ஒரு காரில் சென்றனர். திருத்தணி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் அங்கிருந்து தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டனர். காரை திருவையாறை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (40) ஓட்டி வந்தார்.

    கார் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அரியநாச்சி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் சுப்பிரமணியனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அப்பு, கண்ணன், ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    கார் டிரைவர் சுப்பிரமணியன், கண்ணனின் மகள் காமாட்சி ஆகிய 2 பேரும் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காமாட்சியையும், கண்ணனையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய 3 பேர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந்தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மேற்பார்வையில், கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமனின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்து யாருக்கு ராமன் அதிகமாக பேசியுள்ளார் என்ற தகவல்களை சேகரித்தனர்.

    அதில் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சந்தோஷ்குமார்(19) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ராமன் மாயமான அன்றைய தினம், தனது வீட்டில் இருந்து சென்ற போது அவருடன் சந்தோஷ்குமாரும் சென்றதை அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து போலீசாருக்கு சந்தோஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவர் சொர்ணாவூர் கிராம நிர்வாக அலுவலர் இளஞ்செழியனிடம் சரணடைந்தார். இதுபற்றி அறிந்த, காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.


    கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார்-அனிதா

    அப்போது கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

    ராமன், அவரது மனைவி அனிதா ஆகியோர் எனது சொந்த கிராமமான சொர்ணாவூரில் கடந்த ஆண்டு நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தனர். அங்கு சென்ற நான், ராமன், அவரது மனைவியிடம் பேசி பழகினேன். இந்த பழக்கத்தால், ராமனின் வீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.

    இந்த நிலையில் ராமன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவராக இருந்தார். இதனால் என்னை தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு நானும் உடன்பட்டேன். இதையடுத்து அடிக்கடி ராமன் எனக்கு போன் செய்து அழைத்து, தனது ஆசையை நிறைவேற்றி வந்தார்.

    இதற்கிடையே, அனிதாவுக்கும் எனக்கும் உள்ள பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம். எங்கள் கள்ளகாதலுக்கு ராமன் இடையூறாக இருந்தார்.

    ஒரு கட்டத்தில் ராமனுடன் உள்ள ஓரினச்சேர்க்கை விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானகிவிடும் என்பதால் நான் மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை கட்டாயப்படுத்தி ராமன், அவருடைய ஆசைக்கு இணங்க செய்து வந்தார்.

    இதையடுத்து, அனிதாவிடம் இதுபற்றி தெரிவித்தேன். அப்போது அவர், ராமனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் இருவரும் சேர்ந்து ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

    அதன்படி கடந்த 14-ந்தேதி எனக்கு ராமன் போன் செய்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். அப்போது, நான் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் ஒன்றை, வாங்கி அதில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து எடுத்து சென்றேன். இருவரும் வழக்கம் போல் பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரிதோப்புக்கு சென்று, அங்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம்.

    பின்னர் ராமனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்தேன். தூக்க மாத்திரை கலந்து இருப்பது பற்றி தெரியாமல், அவர் அதை குடித்து முடித்த, சிறிது நேரத்தில் ராமன் மயங்கி விழுந்தார். பின்னர் கைலியை எடுத்து ராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்தது போல் இருப்பதற்காக அவரது உடலை கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விட்டேன். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவது பற்றி அறிந்தவுடன், எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராமனின் மனைவி அனிதாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கடலூர் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் சிவகலா (வயது 25). கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் சிவகலாவும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிவகலாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் சிவகலா தனது காதலன் ராஜ்குமாரிடம் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்து விட்டார். தன்னை காதலித்து விட்டு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுக்கிறாரே என்று எண்ணி சிவகலா மனம் வருந்தினார்.

    இது குறித்து சிவகலா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், நானும், ராஜ்குமாரும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இப்போது என்னிடம் பேச கூட மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ராஜ்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து சிவகலா நேற்று ராமாபுரத்தில் உள்ள தன் காதலன் ராஜ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து சிவகலா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் இரவு வரை தர்ணா செய்தார். இந்த சம்பவம் ராமாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வீராணம் ஏரியில் இருந்து நாளை காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். விவசாயத்தின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 125 கனஅடி குறைவாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 46.25 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது.

    இதையடுத்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 900 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 274 கனஅடி அதிகமாகும்.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது.

    வீராணம் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. எனவே விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய்கள் தூர்வாரும் பணி முடிவடைந்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நாளை (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த ஏரியின் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். #VeeranamLake

    நெய்வேலியில் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து செல்லும் புதிய நடைமுறையை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து செல்லும் புதிய நடைமுறையை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். நெய்வேலியில் மோட்டார் சைக்கிளில் போலீசார் ரோந்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பாண்டியன், ரவிந்தர்ராஜ், சந்திரசேகரன், ஏழுமலை, மீனாள் உள்பட காவல் உதவி ஆய்வாளர்கள் ரோந்து போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் 2 பிரிவாகவும் சில போலீஸ் நிலையங்களில் 3 பிரிவாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 2 போலீஸார் மோட்டார் சைக்கிளில் சுழற்சி முறையில் செல்வார்கள்.

    இதில் எந்த இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் சைக்கிளில் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு செல்வார்கள்.

    ரோந்து செல்லும் போது சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள இடத்திலும் போலீசார் கையெழுத்திட வேண்டும். எந்த இடங்களில் குற்ற சம்பவங்கள் நடக்கிறது? என்பதை அறிந்து அதற்கான காரணங்களை பொதுமக்களிடம் இருந்து ரோந்து போலீசார் சேகரித்து அதை தடுக்க உயர் அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களை அணுகி உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×