search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நிரம்பியிருக்கும் காட்சி.
    X
    வீராணம் ஏரி நிரம்பியிருக்கும் காட்சி.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து நாளை காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். விவசாயத்தின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 125 கனஅடி குறைவாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 46.25 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது.

    இதையடுத்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 900 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 274 கனஅடி அதிகமாகும்.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது.

    வீராணம் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. எனவே விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய்கள் தூர்வாரும் பணி முடிவடைந்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நாளை (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த ஏரியின் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். #VeeranamLake

    Next Story
    ×