என் மலர்tooltip icon

    கடலூர்

    குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை கண்டித்து சிதம்பரத்தில் பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் கொத்தங்குடிதெரு, குமரன்தெரு போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 

    எனவே சுத்தமான குடிநீர் வழங்கக்கோரியும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் தொடர்ந்து சாக்கடை கலந்து வந்தது. 

    இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    கடலூர் ரைஸ் மில்லில் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம மனிதர்கள் தூக்கி சென்று விட்டனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வெள்ளிமோட்டான் தெருவில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்த மில்லின் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் மர்ம மனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியல் பணம் ரூ.2 ஆயிரம் மற்றும் பித்தளை பொருட்களையும் தூக்கி சென்று விட்டனர். 

    இது குறித்து அவர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெண்ணாடம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு அரசு அறிவித்த 223 ரூபாய் வழங்க வேண்டும், குடிநீர், தெரு மின்விளக்கு, தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும், ஒன்றியம் முழுவதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட குழு உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், ரஜினி, கோவிந்தன், அம்பிகா, பழனிவேல், கருப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். #VCK #Thirumavalavan
    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. திருமண மண்டபத்தில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் ராஜாமணி- கனிமொழி திருமணம் இன்றுகாலை நடைபெற்றது.

    இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-


    கேள்வி: ரஜினிகாந்த் ஜாதி ரீதியாகவும், தனி அமைப்பு ரீதியாகவும் உள்ளவர்களுக்கு எனது கட்சியில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

    பதில்: அமைப்பு ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் இல்லாத ஜனநாயக அரசியலை முழுமையாக வரவேற்கிறேன். இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    கேள்வி: நடிகர் விஷால் புதிய அமைப்பு தொடங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டு உள்ளனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. அங்கிருந்து காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்றும் அதே அளவு நீர் மட்டம் உள்ளது. தற்போது வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 476 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake
    மத்திய அரசு சொல்லும் அனைத்துக்கும் நாங்கள் தலையாட்டுவது இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். #edappadipalanisamy #ADMK
    சிதம்பரம் :

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த ஏரிகள், உள்ளாட்சித்துறை சார்ந்த ஏரிகள் ஆக மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரிய ஏரி, சிறிய ஏரி எல்லாம் இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், குடிமராமத்து என்ற திட்டத்தை உருவாக்கி, முதல்கட்டமாக பரீட்சார்த்த முறையிலே 1,519 ஏரிகளை தேர்ந்து எடுத்து, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அந்த பணியை துவக்கினோம், அது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.

    இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அம்மாவினுடைய அரசு, இந்த ஆண்டு 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன.

    இந்த குடிமராமத்து திட்டத்தை பார்வையிடுவதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும், இந்திய ஆட்சிப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது முழுக்க, முழுக்க விவசாய பிரதிநிதி களைக்கொண்ட அமைப்பின் மூலமாக இந்த திட்டம் எடுத்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே?

    பதில்:- இதற்கு முன்பு இந்த திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தார்களா? இல்லையே நாங்கள் கொண்டுவந்ததால் அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஏனென்றால், இது மிகவும் சிறப்பான திட்டம். இந்த திட்டம் மக்களிடமும் விவசாயிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

    எங்களது அரசின் குடிமராமத்துத் திட்டத்தின் வாயிலாக, பல்வேறு ஏரிகள் ஆழப்படுத்தியதன் விளைவாக, தூர்வாரப்பட்டதன் விளைவாக, சீரமைத்ததன் விளைவாக பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு இருக்கின்றது. இதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    அவர்கள் காலத்தில் எந்தத் திட்டமும் செய்யவில்லையே, நாங்கள் தானே இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு ஏரியை தேர்ந்து எடுத்து, சீரமைக்கின்ற பணியை விவசாயிகளிடத்திலே கொடுத்து அந்த பணியை மேற்கொள்வோம். இதுவரைக்கும் டெண்டர் தான் விட்டார்கள். இதற்கு டெண்டர் கிடையாது, முழுக்க முழுக்க அந்த ஏரிக்குட்பட்ட பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மூலமாக இந்த குடிமராமத்து பணியை நாம் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.



    அதுமட்டுமல்லாமல், பெய்கின்ற மழைநீர் ஓடைகள், நதிகள் வழியாக கடலில் வீணாக கலக்கின்ற நீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும் என்பதற்காக மூன்றாண்டு கால திட்டமாக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, இந்த ஆண்டு 62 தடுப்பணைகள் கட்டுவதற்கு இந்த அரசால் 292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

    ஆகவே, இப்படி எல்லா மாவட்டங்களிலும் எங்கெங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் தடுப்பணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

    கேள்வி:- மத்திய அரசு சொல்வதை மட்டும் தான் தமிழக அரசு செய்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறதே?.

    பதில்:- எதிர்க்கட்சியினர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எதிர்க்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள், எங்களை பாராட்டியா பேசப்போகிறார்கள்? கிடையாது. ஜெயலலிதா எப்படி பின்பற்றினார்களோ, அதை நாங்கள் பின்பற்றுகிறோம். எதை எதிர்ப்பாரோ, அதை எதிர்த்தோம். எல்லாவற்றிற்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது.

    கடந்த காலங்களில் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள், என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? காவிரி நதிநீர் பிரச்சினையைக்கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை.

    2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். தி.மு.க. தலைவர், அவருடைய மகன், பேரன் எல்லோரும் மத்தியில் மந்திரியாக இருந்தார்கள், நினைத்திருந்தால் நிச்சயம் செய்திருக்கலாம். நடுவர்மன்ற தீர்ப்பு 2007-ல் வந்து, இரண்டுமாத காலம் கிடப்பில் போட்ட காரணத்தினால், அதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

    ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி தான் உச்சநீதிமன்றத்தின் மூலமாக, இன்றைக்கு இந்த அரசு, விவசாயிகளினுடைய உரிமையை பெற்றுத்தந்திருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை இந்த அரசுதான் பெற்றுத்தந்திருக்கின்றது. ஆகவே, தி.மு.க. கடுகளவும் இதில் ஈடுபடவில்லை, அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் 2007-லேயே இந்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்து குழு, இரண்டையும் அமைத்திருந்தால், அன்றைக்கு ஒதுக்கப்பட்ட நீர் கிடைத்திருக்கும்.

    நடுவர் மன்றத்தீர்ப்பின் அடிப்படையில் 192 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருக்கும். அதை சரியான முறையில் அணுகாத காரணத்தினால், அதில் சரியான அக்கறை காட்டாத காரணத்தினால், பதவி ஒன்று தான் வேண்டும், மத்தியில் ஆட்சி அதிகாரம் தான் வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை, அதற்கான முயற்சி எதையும் அவர்கள் எடுக்கவில்லை. இந்த அரசு நீதிமன்றத்திற்கு சென்று, சட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் உரிமையை பெற்றுத்தந்திருக்கிறது.

    காவிரி மேலாண்மை ஆணையம், காவிரிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்தக்குழு கூடி ஒவ்வொரு மாநிலத்திற்கும், அந்தந்த மாநிலத்தில் பெய்கின்ற மழைநீரை கணக்கிட்டு, அதற்குத் தக்கவாறு, நமக்கு வழங்க வேண்டிய நீர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி வழங்கப்படும், அதற்குண்டான கூட்டமும் நடைபெற்று முடிந்துவிட்டது. அதற்கான நீரையும் நாம் இரண்டு மாதத்தில் பெற்றுவிட்டோம்.

    அரசை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே வெட்டப்பட்ட கால்வாய் எந்த அளவுக்கு தண்ணீர் பிடிக்குமோ, அந்த அளவுக்கு நாங்கள் தண்ணீரை திறந்து விடுகிறோம். கடைமடை பகுதியில் வாய்க்காலுக்கு முன்னால் இருக்கின்ற ஏரி, குளங்களை நிரப்புவதற்காக தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள், ஏரி, குளங்கள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. நிரம்புகின்ற பொழுது, படிப்படியாக கடைமடை பகுதி முழுவதும் தேவையான நீர் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #edappadipalanisamy #ADMK
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்தி சென்ற லாரியை போலீசார் விரட்டி சென்று மடக்கினர். மேலும் டிரைவரை கைது செய்தனர்.
    முஷ்ணம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் மணல்பேடு பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக லாரியில் மணல் எடுத்துக் கொண்டு செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் பகுதி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயற்சித்தபோது டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிசென்றார்.

    உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று லாரியை மடக்கினர். அந்த லாரியில் நாகப்பட்டினம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டிவந்த குமராட்சி ஒன்றியம் இளங்காப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் கருணாகரனை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர் மாவட்டம் நெல்வேலி அருகே இன்று காலை லாரி ஒன்று டிரைவரிடன் கட்டுப்பாட்டை இழந்து அரிசி கடைக்குள் புகுந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்திலிருந்து கரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று விருத்தாசலம் நோக்கி இன்று புறப்பட்டது. லாரியை நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் ஓட்டி வந்தார். லாரியில் கிளீனர் ஒருவரும் இருந்தார்.

    அந்த லாரி இன்று காலை 11 மணி அளவில் நெய்வேலி பகுதியில் உள்ள விருத்தாசலம் -கடலூர் மெயின்ரோட்டில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் இளங்கோவனின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென்று தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. அதன் பின்னர் அங்குள்ள மரத்தின் மீது மோதி அருகில் இருந்த அரிசி கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் அரிசி கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்த கடை உரிமையாளரின் தந்தை சுப்பையா(வயது 60), கடையில் அரிசி வாங்க வந்த கருப்பன், சுரேஷ் மற்றும் லாரி டிரைவர் இளங்கோவன், கிளீனர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் படுகாயம் அடைந்த சுப்பையாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டாஸ்மாக் கடை ஊழியரை அரிவாளால் வெட்டி மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 54). கிள்ளையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் டாஸ்மாக் கடையில் மது விற்பனையான பணத்தை தினமும் இரவு வீட்டுக்கு கொண்டு சென்று மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று இரவு 10 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக்கடையை பூட்டி விட்டு மது விற்பனையான ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு முத்துக்குமாரசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    சிறிதுதூரம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் 2 மர்ம மனிதர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று முத்துக் குமாரசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த மர்ம மனிதர்கள் முத்துக்குமாரசாமி வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் பையை கொடுக்காமல் பிடித்துக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்குமாரசாமியின் இடது கையில் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்ததால் அவர் அலறினார்.

    இதையடுத்து 2 பேரும் முத்துக்குமாரசாமி வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டனர். மேலும் முத்துக்குமாரசாமி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றுவிட்டனர்.

    அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த முத்துக்குமாரசாமி நடுரோட்டில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப்பதிவு செய்தார். டாஸ்மாக் கடை ஊழியரை வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம் அருகே ஊதிய உயர்வு வழங்க கோரி பள்ளியில் தலைமை ஆசிரியர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பாலை கொல்லை புதுப்பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் சுற்றுபகுதியை சேர்ந்த 150 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நிர்வாகியாக வெள்ளையன் உள்ளார். இவரது மகன் கிருஷ்ணசாமி (வயது 41) தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பள்ளியின் நிர்வாகி வெள்ளையனுக்கும் வட்டார கல்வி அலுவலருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக வட்டார கல்வி அலுவலர் கடந்த 1.4.2018 முதல் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமிக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. மேலும் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ- மாணவிகளுக்கு சீருடை மற்றும் முதல் பருவ பாட புத்தகங்களும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்தும், தனக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி இன்று பள்ளியில் உள்ள தனது அறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மேலும் அவர் தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்.

    தலைமை ஆசிரியர் கருப்புபேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று ஏரியில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமில்லாமல் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது.

    பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1400 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவை விட 50 கன அடி குறைவாகும். நேற்று ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவு உள்ளது. தற்போது ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 76 கன அடி அதிகமாகும். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அந்த அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி உள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதானால் பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய்த்துறை, பஞ்சாயத்துத்துறை, தமிழ்த்துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.

    இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள துறைகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் மின் இணைப்புக்கான கட்டணம் பல மாதங்களாக கட்டப்படாமல் இருந்தது. ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு மின்வாரியம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

    மின்சார கட்டணம் கட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை மின்வாரிய ஊழியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் மின் ஊழியர்களிடம், மின் இணைப்பை ஏன் துண்டித்தீர்கள் என கேட்டனர்.

    அதற்கு அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பல மாதங்களாக மின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தது. அதனால் மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றனர்.

    மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கிய பல துறைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாகவும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர்கள் அனைத்தும் செயலிழந்தன. ஊழியர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகிறார்கள். #tamilnews
    ×