என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ. நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன்(வயது21). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று மாலை சிவராமன் பள்ளி மாணவ- மாணவிகளை வேனில் ஏற்றி கொண்டு ஆ. நத்தம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி குடிநீர் தொட்டி அருகே வேன் சென்றபோது அங்கு நின்ற அஜித் குமார்(19), மணிமாறன், மகேஷ் ஆகியோர் வேனில் இருந்த மாணவிகளை பார்த்து விசில் அடித்து கேலி செய்தனர். உடனே சிவராமன் ஏன் மாணவிகளை கிண்டல் செய்கிறீர்கள் என தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், மணிமாறன், மகேஷ் ஆகியோர் சிவராமனை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
காயம் அடைந்த சிவராமன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். மணிமாறன், மகேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை உள்பட பல பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 2-வது நாளாகவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், நெல்லிக்குப்பம், வடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், வேப்பூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல இடங்களில் இரவு 9 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. கடலூர் அருகே உள்ள நாணமேடு, உச்சிமேடு, சின்னகங்கணாங்குப்பம், தாமரைக்குளம் போன்ற பகுதிகளில் மழைநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
மழையையொட்டி கடலூரில் நள்ளிரவில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பெண்ணாடம், முருகன் குடி, திருமலைஅகரம், செம்பேரி, சவுந்தரசோழபுரம், இறையூர், ஆவினங்குடி, திட்டக்குடி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது.
வெண்கரும்பூர், மாளிகை கோட்டம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு திறந்த வெளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சிதம்பரத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சிதம்பரம் ரெயில் நிலையம் செல்லும் சாலை புதிதாக போடப்பட்டு இருந்தது. அந்த சாலை நேற்று பெய்த பலத்த மழையால் திடீரென்று உள்வாங்கியது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கீழே தவறி விழுந்து காயம் அடைந்தனர்.
உள்வாங்கிய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #CuddaoreRain
கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை மாற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் கால்நடைகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும். மேலும் அவர்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் தயாரிப்பதற்கான வழிவகைகள் வழங்கப்படும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் பேரூராட்சி நகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஒருங்கிணைத்து இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக்கிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் முழுமையாக தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #MCSampath
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.
கர்நாடகா மாநில அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு காவிரி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,450 கன அடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக கடந்த 26-ந் தேதி முதல் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று அது சற்று குறைந்து 300 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய விட 70 கனஅடி குறைவு ஆகும்.
வீராணம் ஏரி அமைந்துள்ள பகுதியான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதேப்போல் நேற்று இரவும் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீராணம் ஏரி பகுதியில் பெய்த மழையின் அளவு 2 மி.மீ. ஆகும். மழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீராணம் ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. வீராணம் ஏரி நிரம்பியதால் அங்கிருந்து கடந்த மாதம் 14-ந் தேதி முதல் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 73 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றையவிட 1 அடி குறைவு ஆகும். #VeeranamLake
கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை கெடிலம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவரது மகன்கள் கண்ணன், துரைராஜ்.
இவர்கள் 3 பேரும் ஒரே காம்பவுண்டில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். 3 பேர் குடும்பத்தினரும் வீடுகளை பூட்டி விட்டு நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டனர்.
இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கண்ணனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை- பணத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அருகில் இருந்த துரை ராஜ், ஜெயராமன் ஆகியோரின் வீட்டு கதவுகளையும் உடைக்க முயன்றனர். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை கண்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் நாமக்கல் சென்றிருந்த கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நாமக்கல் சென்றிருந்த ஜெயராமன் துரைராஜ், கண்ணன் ஆகியோர் கடலூர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த பின்னர்தான் வீட்டில் கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு தெரிய வரும்.
நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு 2019-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்பு செல்வன் வெளியிட்டார்.
இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 10.1.2018 அன்று வெளியிடப்பட்டது.
அந்த வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கடலூர் மாவட்டத்தின் அப்போதைய மொத்த வாக்காளர் எண்ணிக்கை 20 லட்சத்து 18ஆயிரத்து 16 பேர் ஆகும். அதன் பிறகு சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. உரிய பரிசீலனைகளுக்கு பின் அவற்றின் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி 19,330 வாக் காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 9 தொகுதிகளிலும் தற்போது 9 லட்சத்து 93 ஆயிரத்து 71 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 5 ஆயிரத்து 515 பெண் வாக்காளர்கள், இதரர் 100 என மொத்தம் 19 லட்சத்து 98 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட 12 ஆயிரத்து 444 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மாதவன், நகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்ட மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 28) ராணுவ வீரர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்திருந்தார்.
வீட்டுக்கு வந்த அவர் யாருடனும் பேசாமல் சோகமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றவர்கள் வீட்டுக்கு வந்தபோது தமிழரசன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து காட்டு மன்னார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தமிழரசனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராணுவ வீரர் தமிழரசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு நெய்வேலியில் இருந்து மீனாட்சிபேட்டைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கடலூர் அருகே உள்ள பெத்தான்குப்பம் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சென்னையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை பொருட்களை ஏற்றுவதற்காக காரைக்காலில் இருந்து புதுவை நோக்கி லாரியில் புறப்பட்டார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிதம்பரம் சாலையில் இன்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது திடீரென லாரி மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் ஆறுமுகம் காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய லாரியை ராட்சத கிரேன் மூலம் மீட்டனர்.
இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள கோஆப்டெக்ஸ் அலுவலகம் அருகே சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த தடுப்பு சுவர் மீது எந்த ஒரு பிரதிபலிப்பானும் பொருத்தப்படவில்லை. இதனால் இந்த தடுப்பு சுவரால் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரு லாரியும் தடுப்புசுவர் மீது மோதியது.
இந்த விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் மீது பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும். கடலூர்- சிதம்பரம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்பு கட்டை இருப்பதை அறிவுறுத்தவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு காவிரி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,350 கன அடி தண்ணீர் வந்தது. இன்று 1,450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய விட 100 கன அடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்கிறது.
வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக கடந்த 26-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 476 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 370 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய விட 106 கனஅடி குறைவு ஆகும்.
வீராணம் ஏரி அமைந்துள்ள பகுதியான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் நேற்று இரவு திடீரென கன மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 4 மணி நேரம் நீடித்தது. வீராணம் ஏரி பகுதியில் பெய்த மழையின் அளவு 32 மி.மீ. ஆகும். கன மழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீராணம் ஏரியில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி முதல் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 அடி குறைவு ஆகும்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிய கட்டணம் செலுத்தி உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இது வரை உரிமம் பெறாத வியாபாரிகள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், காய்கறிக்கடைக்காரர்களும் உரிமம் பெற வேண்டும்.
உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலோ, தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்பட்டாலோ அது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம்.
இப்போது நகர்புறங்களில் இட்லி, தோசை மாவுகளை அரைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இட்லி, தோசை மாவை பிரிட்ஜில் வைத்து தான் விற்க வேண்டுமே தவிர வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது.
கரும்பு சாறு, சர்பத் போன்ற குளிர்பானங்களில் மீன்களை பதப்படுத்துவதற்கான ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அவை சுத்தமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவதால் குளிர்பானங்களில் அதனை பயன்படுத்தக்கூடாது என்பதால் மீன்களை பதப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை தயாரிப்பவர்கள் அவற்றில் நீலநிறத்தை சேர்க்க வேண்டும் என்று ஐஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
சமையல் எண்ணை, பால், தண்ணீர், டீ போன்றவற்றில் கலப்படத்தை தடுப்பதற்காக அவற்றில் இருந்து மாதந்தோறும் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்புகிறோம். கடந்த 6 மாதங்களில் சமையல் எண்ணையில் மட்டும் 68 மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இவற்றில் ஒரு எண்ணை மாதிரியில் கலப்படம் இருப்பதும், 17 மாதிரிகள் தரம் குறைந்ததாக இருப்பதும், 27 மாதிரிகளில் லேபல் மோசடி இருப்பதும் தெரியவந்து உள்ளது. அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). இவரது மனைவி நிர்மலா (40). ராஜ்குமார் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பாக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து கடலூர் மாவட்டத்தில் விற்பனை செய்து வருகிறார்.
இவர் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி வெளியூர் சென்று வந்தார். அப்போது அவர் லட்சக்கணக்கான பணத்தை எடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு ராஜ்குமார் வெளியூர் சென்று வருவதாக மனைவி நிர்மலாவிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது அவர் பணமும் எடுத்து சென்றார்.
ராஜ்குமார் வெளியூர் சென்று பலநாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி நிர்மலா கவலை அடைந்தார். பின்னர் தனது கணவர் செல்போனில் பேச முயன்றார். ஆனால், ராஜ்குமாரின் செல்போன் எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வந்தது. அவரிடம் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் செல்போனில் பேச முடியவில்லை.
இதனால் கவலை அடைந்த நிர்மலா இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராஜ்குமார் வெளியூர் சென்றபோது அதிகளவு பணம் எடுத்து சென்றார். பணத்துக்காக அவரை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாபாரி மாயமான சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






