என் மலர்tooltip icon

    கடலூர்

    வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இன்றும் அதே அளவு தண்ணீர் விவசாயத்துக்கு திறக்கப்பட்டது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றைய விட 2 கன அடி குறைவாகும். #VeeranamLake




    கடலூர் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் ஐஸ் கட்டிகளை இறக்கி கொண்டிருந்த போது தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் காரைக்காடு அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 45). தொழிலாளியான இவர், சிப்காட்டில் உள்ள தனியார் ஐஸ் தொழிற்சாலையில் ஐஸ் கட்டிகளை இறக்கி கொண்டிருந்தார். 

    அப்போது அவர், திடீரென நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து இறந்தார். இது குறித்து அவரது மகன் சீத்தாராமன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழத்தரம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த உதவி பேராசிரியை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள அகர புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகள் பாலா (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலா சொந்த ஊர் வந்திருந்தார். திடீரென்று வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்ட கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பாலா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சோழத்தரம் போலீசில் பாலாவின் தாயார் சாந்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஸ்ரீமுஷ்ணத்தில் பாமக கட்சி கொடியை மர்ம மனிதர்கள் சேதப்படுத்தினர். இதனை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் பா.ம.க.கட்சியின் கொடி கம்பம் இருந்தது. நள்ளிரவில் மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடியையும், கயிறையும் கீழே இறக்கினர்.

    இதையடுத்து கொடி மற்றும் கயிறை சேதப்படுத்தினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இன்று காலை இதுபற்றி தகவல் அறிந்த பா.ம.க.வினர் நகர அமைப்பு செயலாளர் பூவராகமூர்த்தி தலைமையில் வக்கீல் அணி செயலாளர் இளையராஜா, நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் கொடிகம்பம் அருகே திரண்டனர்.

    அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட் டம் செய்தனர். கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    ஆனால் பா.ம.க.வினர் சாலைமறியலை கைவிட மறுத்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் அப்புறப்படுத்தி அவர்களை வேனில் ஏற்றினர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த பெண் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள உண்ணாமலை செட்டிச்சாவடி பனங்காட்டுகாலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவானி(வயது 24). இவர்களுக்கு கவுதம்(2) என்ற மகன் உள்ளான். 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்தனர். 

    பவானி, கடலில் குளித்தார். அப்போது எழுந்த ராட்சத அலை, பவானியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன், ஓடிச்சென்று பவானியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பவானி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காட்டுமன்னார்கோவில் அருகே வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரதீப்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் பிரதீப் விளையாடி கொண்டிருந்தான். அப்போது மூங்கில் மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் பறந்து வந்து பிரதீப்பை கடித்தது. இதில் வலிதாங்காமல் அவன் அலறினான். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தான்.

    அக்கம் பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

    அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் பிரதீப் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
    நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தை அடுத்த கொங்கராயனூரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 28). கார் டிரைவர். இவரும், அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்த கவிப் பிரியா (24) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் சுதியன் என்ற மகன் உள்ளான்.

    நேற்று சவாரிக்காக காரில் வீரக்குமார் வெளியூருக்கு சென்றிருந்தார். வீட்டில் தனிமையில் இருந்த கவிப்பிரியா திடீரென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வீரக்குமாருக்கும், கவிப்பிரியாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனே கவிப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொங்கரையானூர் வந்தனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய கவிப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று கவிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து கவிப்பிரியாவின் பெற்றோர் போலீசில் அளித்துள்ள புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57). கேபிள் டி.வி. உரிமையாளர். இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள திருப்பனாழ்வார் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (28), அருண் (25) ஆகியோர் சிவக்குமாரை தகாதவார்த்தைகளால் திட்டி அவரை தாக்கினர்.

    இது தொடர்பாக சிவக்குமார் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்ய சென்றார். இதையறிந்த பிரசாந்த், அருண் ஆகியோர் அவரது பின்னால் போலீஸ் நிலையம் சென்றனர். எங்கள் மீது புகார் செய்யக் கூடாது என்று கூறி சிவக்குமாருக்கு மிரட்டல் விடுத்தனர்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் கோவிந்த ராசு, இங்கு வந்து ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? என்று பிரசாந்த், அருண் ஆகியோரிடம் கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் போலீஸ்காரர் கோவிந்த ராசுவை தாக்கி அவரின் சட்டையை பிடித்து இழுத்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையறிந்ததும் அங்கிருந்த மற்ற போலீசார் கோவிந்த ராசுவை மீட்டனர்.

    இது தொடர்பாக போலீஸ்காரர் கோவிந்த ராசு, ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சேத்தியாத் தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், அருண் ஆகியோரை கைது செய்தார்.

    பின்னர் 2 பேரையும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பிரசாந்த், அருண் ஆகிய 2 பேரும் விருத்தாசலம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் பஸ் மீது பள்ளி பஸ் மோதிய விபத்தில் 25 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது கண்டப்பன் குறிச்சி. இங்கு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இன்று காலை பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று கிராம பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

    இதே நேரத்தில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து வேப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. பஸ்சில் இருந்து பயணிகள் சிலர் கீழே இறங்கினர்.

    அப்போது அந்த வழியாக பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த பஸ் அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் மோதியது.

    இதில் மாணவ-மாணவிகள் பயணம் செய்த பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த மாணவ-மாணவிகள் கூச்சல்போட்டு அலறினர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்த மதுமிதா (வயது 11), கவிப்பிரியன் (7), சிவசங்கர் (7), பூங்காஸ்ரீ, வேலமாயி (13), ஏழுமலை (10), புவனேஷ்வரி (13), நித்யா (5), வித்யா (11), கார்முகில் (4), தர்ஷினி (7), கோகுலகிருஷ்ணன் (3), சிவா (3), லோகேஷ் (4), சிவபாலன் (10) உள்பட 25 பேரை மீட்டனர்.

    பின்பு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் விளாங்காட்டூர் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வீராணம் ஏரியில் இருந்து கடந்தமாதம் 14-ந்தேதி முதல் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணை வழியாக கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,450 கனஅடி தண் ணீர் வந்தது. இன்று 1,350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றையவிட 100 கனஅடி குறைவாகும். இருப்பினும் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக கடந்த 26-ந் தேதி முதல் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டுவருகிறது. இன்றும் அதே அளவு தண்ணீர் விவசாயத்துக்கு திறந்துவிடப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து கடந்தமாதம் 14-ந்தேதி முதல் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது.

    இன்று 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றையவிட 2 கன அடி கூடுதலாகும். #VeeranamLake
    கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
    கடலூர்:

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும் என்ற முழக்கத்துடன் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடந்தது. இந்த பேரணிக்கு மாவட்ட கலெக்டர் வெ.அன்புசெல்வன் தலைமை தாங்கினார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2003-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்பு திட்டம் என்ற முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தார். அதேப்போல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத தமிழகம் என்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னோடி திட்டம் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தனி மனிதனுடைய சுற்றுப்புறத்தை பாதிக்கக்கூடியது. சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது. எனவே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கடலூர் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதில் முன்னோடி மாவட்டமாக கடலூர் மாவட்டம் திகழ வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

    பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கி பாரதி ரோடு வழியாக சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு அடைந்தது.

    முன்னதாக கடலூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கோவிந்தராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுகம், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ரகுபதி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது என்று அரசு அறிவித்துள்ளதால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவே மாற்றுத்தொழில் தொடங்குவதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அரசை அணுகினால், துணிப்பை, பேப்பர் கப், பாக்குமரத்தட்டு போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களை உற்பத்தி செய்ய தொழில்நுட்ப உதவி, மானியம் போன்றவற்றை வழங்க அரசு தயாராக உள்ளது. எனவே அவர்கள் மாற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார். 
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
    கடலூர்:

    சிதம்பரம் பெரிய காஜியார் தெருவைச் சேர்ந்தவர் சையத்சபிர் அகமது (வயது 65). இவர் தனது வீட்டின் பின்புறம் விளங்கியம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வீட்டின் பின் படிக்கட்டு வழியாக இன்று காலை சென்றார்.

    அப்போது வீட்டின் தோட்டத்தில் இருந்த 40 அடி ஆழம் உள்ள தரை கிணற்றில் மேல் மூடியிருந்த சிமெண்ட் கட்டையிலே ஏறி சென்றார். அப்போது அந்தக் கட்டை உடைந்து கிணற்றுக்குள் சையத் சபிர்அகமது விழுந்தார்.

    அவரது அலறல் சத்தத்தை கேட்டு அவரின் உறவினர்கள் கிணற்றுக்குள் விழுந்து கிடந்த சையத்சபிர் அகமதுவை மீட்க முயன்றனர். முடியவில்லை.

    உடனே இதுபற்றி சிதம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிதம்பரம் தீயணைப்பு துறை அதிகாரி புருஷோத்தமன் மற்றும் காவலர்கள் சக்திவேல் கணேஷ் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்து கிடந்த சையத்சபிர்அகமதுவை மீட்டனர்.

    பின்னர் அவரை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    ×