என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ருட்டி வியாபாரி"

    பண்ருட்டியில் பணத்துடன் வெளியூர் சென்ற பாக்கு வியாபாரி திடீரென மாயம் ஆனதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). இவரது மனைவி நிர்மலா (40). ராஜ்குமார் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பாக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து கடலூர் மாவட்டத்தில் விற்பனை செய்து வருகிறார்.

    இவர் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி வெளியூர் சென்று வந்தார். அப்போது அவர் லட்சக்கணக்கான பணத்தை எடுத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு ராஜ்குமார் வெளியூர் சென்று வருவதாக மனைவி நிர்மலாவிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது அவர் பணமும் எடுத்து சென்றார்.

    ராஜ்குமார் வெளியூர் சென்று பலநாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி நிர்மலா கவலை அடைந்தார். பின்னர் தனது கணவர் செல்போனில் பேச முயன்றார். ஆனால், ராஜ்குமாரின் செல்போன் எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வந்தது. அவரிடம் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் செல்போனில் பேச முடியவில்லை.

    இதனால் கவலை அடைந்த நிர்மலா இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ராஜ்குமார் வெளியூர் சென்றபோது அதிகளவு பணம் எடுத்து சென்றார். பணத்துக்காக அவரை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வியாபாரி மாயமான சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×