என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய சங்கத்தினர் மறியல்"

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காவிரி தண்ணீரை கடைமடை பகுதிக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்ப கூடாது. வீராணம் ஏரி மற்றும் வடக்குராஜன் வாய்க்கால் ஆகியவைகளை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

    இதையொட்டி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ் மற்றும் மாதவன் தலைமையில் வட்டத்தலைவர் ஜாகீர்உஷேன், குமராட்சி ஒன்றிய தலைவர் முனுசாமி, வட்ட செயலாளர் விஜயகுமார் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் இன்று காலை காட்டு மன்னார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர்.

    ஆனால் விவசாய சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி போலீசாருக்கும், விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.


    போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து இழுத்து சென்ற காட்சி.

    உடனே போலீசார் விவசாய சங்கத்தினர் மீது தடியடி நடத்தினர். பின்னர் விவசாய சங்க நிர்வாகிகள் 25 பேரை கைது செய்து வேனில் ஏற்றி காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்று விவசாய சங்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×