search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officers siege"

    பண்ருட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் நிலஅளவீடு செய்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் செட்டி பட்டறை என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

    இதன்பேரில் கடந்த சில நாட்களாக ஏரியை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகளையும் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வந்தனர்.

    எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுரம் பகுதியில் மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இன்று காலை தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சமத்துவபுரம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் இந்த நிலத்தை சமத்துவபுரம் பகுதி மக்களுக்கே வழங்க வேண்டும் எனக்கூறி நில அளவீடு செய்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் ஆறுமுகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர்கள் காடாம்புலியூர் மற்றும் சமத்துவபுரம் பகுதியிலேயே ஏராளமான பொதுமக்கள் சொந்த வீடு மற்றும் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த பகுதி பொதுமக்களுக்கு இடம் வழங்குங்கள் அதன் பிறகு மீதமுள்ள இடங்களை செட்டிப்பட்டறை ஏரிக்கரை பகுதியில் வீடுகளை இழந்த மக்களுக்கு இடம் வழங்குங்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தாசில்தார் ஆறுமுகம் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அதிகாரிகளை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×