என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விருத்தாசலம்:

    பண்ருட்டியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று இரவு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திருக்கோவிலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் சென்றது. இந்த காரில் 2 பெண் உள்ளிட்ட 4 பேர் வந்தனர்.

    இந்நிலையில் இந்த கார் அரசகுழி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்தினால் அப்பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூரில் பன்றிக்காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்(வயது 29). என்ஜினீயர்.

    இவர் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தானே சிறப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார்.

    கோபிநாதனுக்கு கடந்த 26-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் கோபிநாதனுக்கு காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர் பரிசோதனை செய்தனர்.

    அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று கோபிநாதன் பரிதாபமாக இறந்தார்.

    கடலூர் மாவட்டத்தில் 650 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புவனகிரியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் திருவள்ளுவர் மாவட்டத்தில் பணியாற்றிய போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தற்போது ராஜ்குமார் உள்பட 3 பேருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 13 நடமாடும் மருத்துவ குழுக்களை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளின் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் 13 நடமாடும் மருத்துவ குழுக்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

    இதுபற்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநிலம் தழுவிய அளவில் பிரத்யேகமான ஒரு மெகா பணியை தொடங்க வேண்டும் என்று அரசு உயர் அலுவலர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இந்த பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமில் சுகாதாரத்துறையின் அனைத்துதுறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணிகளின்போது ஆங்காங்கே உள்ள குப்பைகளை அகற்றுதல், வீடுகள்தோறும் சென்று தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அவற்றை அழிப்பது, குடிநீர் ஆதாரங்களை தூய்மைப்படுத்துதல், பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    இப்பணிகளில் மாவட்டத்தில் 26 ஆர்.பி.எஸ்.கே. குழுக்கள், 13 நடமாடும் மருத்துவ குழுக்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்புரவு ஆய்வாளர்களும் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள 740 கொசு ஒழிப்பு பணியாளர்களும், கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு 1,599 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு(2018) இதுவரை 295 பேர் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் காய்ச்சல் கண்டறியப்பட்ட 246 பேர்களில் 12 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே இது போன்ற மெகா விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் பொதுமக்கள் இப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதோடு நமது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து கடலூர் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், இணை இயக்குனர்(மருத்துவ பணிகள்) கலா, துணை இயக்குனர்(சுகாதாரம்) டாக்டர் கீதா, நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராமசாமி, மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையை சேர்ந்த டிரைவர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மா.குடிக்காடு பகுதியில் நேற்று அதிகாலையில் சாலையோரம் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

    அந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த டிரைவர் உடல்கருகி பலியானார். மேலும் அந்த கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சோழத்தரம் சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று காருக்குள் உடல் கருகி கிடந்த டிரைவரின் உடலை மீட்டனர்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத் துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் உடல் கருகி இறந்த டிரைவர் யார் என்று அடையாளம் தெரிய வந்தது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை வளசரவாக்கம் சுரேஷ் நகரை சேர்ந்தவர் புவனேஷ் (வயது 31). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    புவனேஷ் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இவர் சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் புறப்பட்டார்.

    நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மா.குடிகாடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. உடனே காரை சாலையோரம் நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்தார்.

    அவர் காரின் கண்ணாடியை மூடி விட்டு ஏ.சி.யை போட்டு தூங்கினார். அப்போது ஏ.சி.யில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கார் முழுவதும் புகை மூட்டமானது.

    தூங்கி கொண்டிருந்த புவனேஷ் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அவரால் காரின் கண்ணாடியை திறக்க முடியவில்லை. இதனால் காருக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்து விட்டார்.

    புவனேஷ் காரில் புறப்படும் போது தனது மனைவி சித்ராவிடம், நான் சவாரிக்கு கும்பகோணம் செல்கிறேன். சவாரியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவுடன் நாம் குழந்தையுடன் ஜவுளிக்கடைக்கு சென்று தீபாவளிக்கு புத்தாடை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

    ஆனால், சவாரி முடிந்து சென்னை செல்வதற்குள் காரில் தீப்பிடித்து புவனேஷ் பரிதாபமாக இறந்துள்ளார்.

    தனது கணவர் இறந்த தகவல் அறிந்ததும் சித்ரா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
    கடலூரில் வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 55). வியாபாரி. இவர் தனது வீட்டின் ஒரு அறையில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் பெரியக்காரைக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு செல்ல சிவாஜி முடிவு செய்தார்.

    அதன்படி வீடு மற்றும் கடையை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

    அவர்கள் சிவாஜியின் வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு வீட்டை மீண்டும் பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் சிவாஜி வீட்டுக்கு வந்தார். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை மற்றும் எல்.இ.டி. டி.வியை கொள்ளையடித்து சென்றது அவருக்கு தெரிந்தது.

    இது குறித்து முதுநகர் போலீசில் சிவாஜி புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். #tamilnews
    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேக்காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டைக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 17 பயணிகள் இருந்தனர்.

    சோழத்தரம் அருகே கோதண்டவிளாகம் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது குமாரகுடியை சேர்ந்த வினோத் (22), தேசிங்குராஜன் (22) ஆகியோர் சாலையோரத் தில் நின்று கொண்டு அரசு பஸ்சை நிறுத்தும்படி சைகை காட்டினர்.

    ஆனால், அந்த பஸ் அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்தும், தேசிங்குராஜனும் ஓடி சென்று ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்று டிரைவரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    உடனே பஸ்சில் இருந்த பயணிகள் வேகமாக கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது தொடர்பாக பஸ் டிரைவர் சரவணன் சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பஸ்சை உடைத்த வினோத், தேசிங்குராஜன் ஆகியோர் குமாரக்குடி அருகே உள்ள வாய்க்கால் ஓரம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு மரத்தடியில் பதுங்கி இருந்த வினோத், தேசிங்குராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மண்எண்ணை கேனுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குடி பிரியர்கள் வந்து மது வாங்கி குடித்துவிட்டு கிராம பகுதிகளில் ஆங்காங்கே மது மயக்கத்தில் கிடப்பதும் அப்பகுதி வழியாக செல்லக்கூடிய பெண்கள் மாணவிகளை கிண்டல்-கேலி செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனால் அப்பகுதியில் இருந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கோபுராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்கப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் விரைந்து வந்த போலீசார் மண்எண்ணை கேனை பறிமுதல் செய்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். உயர் அதிகாரிகளிடம் சென்று மனு கொடுங்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சோழத்தரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்து டிரைவர் உடல்கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சென்னையில் இருந்து நேற்று நள்ளிஇரவு 12 மணி அளவில் டிரைவர் ஒருவர் சொகுசு காரை கும்பகோணம் நோக்கி ஓட்டி சென்றார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த கார் கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே மா.குடிகாடு என்ற இடத்தில் வந்தது. அப்போது டிரைவர் காரை சாலையின் ஓரம் நிறுத்தினார். பின்பு அவர் காரின் கதவை மூடிவிட்டு ஏ.சி.போட்டு தூங்கினார்.

    திடீரென்று இந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்த வாலிபர் கூச்சல் போட்டார். கார் தீப்பிடித்து எரி வதை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

    காருக்குள் இருந்த டிரைவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும். சோழத்தரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். காருக்குள் உடல் கருகி கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    காருக்குள் உடல் கருகி கிடந்த வாலிபர் யார்? எந்தஊர்? என்ற விபரம் தெரியவில்லை. காரின் கதவை பூட்டிவிட்டு ஏ.சி.யை அதிக அளவு வைத்ததால் கார் தீ பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரேநாள் இரவில் 4 கடைகளில் பணம் திருடப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் மாலைகட்டி தெருவில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று இரவு மர்ம மனிதர்கள் அங்குள்ள ஒரு கம்ப்யூட்டர் பழுதுபார்க்கும் கடையின் கதவை கடப் பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு கல்லாப்பெட்டியில் இருந்த 500 ரூபாயை திருடினர்.

    அதன் பின்பு அருகில் இருந்து கம்ப்யூட்டர் சென்டரின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த எமர்ஜென்ஸ்சி விளக்கை திருடினர். பின்னர் அவர்கள் அருகில் இருந்த மற்றொரு கம்ப்யூட்டர் சென்டரின் கடையை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.1200-ம், அருகில் உள்ள கட்டிட நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு 1 வெள்ளி குத்துவிளக்கு மற்றும் ரூ.11 ஆயிரத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    இன்று காலை கடையின் உரிமையாளர்கள் கடையை திறக்கவந்தனர். அப்போது, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச் சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பணம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

    இதுகுறித்து அவர்கள் சிதம்பரம் நகர குற்றபிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடைகளில் புகுந்து பணம் திருடிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

    ஒரேநாள் இரவில் 4 கடைகளில் பணம் திருடப்பட்ட சம்பவம் சிதம்பரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    பண்ருட்டி அருகே திமுக பிரமுகரிடம் வட்டிக்கு பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 47), தி.மு.க. பிரமுகர். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (36). இவர் சுந்தரவடிவேலிடம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் சுந்தரவடிவேலுவிடம் தகராறு செய்தார்.

    இதுகுறித்து சுந்தரவடிவேல் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    மோட்டார் வாகன விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கரவாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 21,068 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 18,982 பேர் மீதும், கார்களில் இருக்கை பெல்ட் அணியாமல் சென்ற 6,715 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவை உள்பட மோட்டார் வாகன விதிமீறல் குற்றங்களுக்காக மொத்தம் 65 ஆயிரத்து 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இதுதவிர மணல் கடத்தல் தொடர்பாக 478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 663 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த தகவலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

    கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #DenguFever
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் ஏராளமானவர்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

    இதனால் மருத்துவமனைகளில் வழக்கத்துக்குமாறாக நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று காலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தனர். அவர்களுக்கு ரத்தபரிசோதனை செய்து பார்த்தபோது கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்த சிவபிரகாசம் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அங்கு சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர். இதில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சிவபிரகாசம் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் இன்று காலையிலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிதம்பரத்தை சேர்ந்த கருணாகரன்(34), வீரமுத்து(72), குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோதண்டராமபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(39), கடலூர் கேப்பர்மலையை சேர்ந்த தட்சினி(8), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரித்தீஷ்குமார்(8) ஆகிய 5 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #DenguFever
    ×