search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மண்எண்ணை கேனுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டம்
    X

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மண்எண்ணை கேனுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டம்

    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மண்எண்ணை கேனுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குடி பிரியர்கள் வந்து மது வாங்கி குடித்துவிட்டு கிராம பகுதிகளில் ஆங்காங்கே மது மயக்கத்தில் கிடப்பதும் அப்பகுதி வழியாக செல்லக்கூடிய பெண்கள் மாணவிகளை கிண்டல்-கேலி செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனால் அப்பகுதியில் இருந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கோபுராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்கப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் விரைந்து வந்த போலீசார் மண்எண்ணை கேனை பறிமுதல் செய்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். உயர் அதிகாரிகளிடம் சென்று மனு கொடுங்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×