என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே காரில் பழுது பார்த்து கொண்டிருந்த மெக்கானிக் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த பரவளூரைச் சேர்ந்தவர் சீனுவாசன் (43). மெக்கானிக்கான இவர் பரவளூர் பஸ் நிறுத்தத்தில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவர் தன்னுடைய கடையின் முன்பு காரில் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சீனுவாசன் மீது மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த சீனுவாசன் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்தார். அங்கு சிகிச்சைப்பனின்றி இறந்தார். 

    புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    சிதம்பரம்:

    கஜா புயல் கடந்த 16-ம் தேதி வேதாரண்யம், நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அன்று நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் நவம்பர் 16-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் இன்று அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தனியார் பஸ் கம்பெனி மேலாளர் தலை நசுங்கி பலியானார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புறங்கனி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர் தனியார் பஸ் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் சாத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செந்தில் தலையில் பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று பஸ் விபத்தில் இறந்த செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிதம்பரம் அருகே சண்டையை விலக்கச் சென்ற விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியபட்டு காட்டுத் தெருவை சேர்ந்தவர் அய்யார்(வயது 74). விவசாயி. இவரது தம்பி கலியபெருமாள். இவரது மகன்கள் ராமசந்திரன்(41), தண்டபாணி(48).

    நேற்று மாலை அய்யார் தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே ராமச்சந்திரனும், தண்டபாணியும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர்.

    இதைபார்த்த அய்யார் ஏன் தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று 2 பேரிடமும் கேட்டார். மேலும் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

    இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரனும், தண்டபாணியும் சேர்ந்து அய்யாரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தனர்.

    இதில் அய்யாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அய்யாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலை மோசமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அய்யார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விவசாயியை தாக்கி கொலை செய்த ராமச்சந்திரன், தண்டபாணி ஆகியோரை கைது செய்தனர்.

    சண்டையை விலக்கச் சென்றவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் 322 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்குகிறார். #TNGovernor #BanwarilalPurohit
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் 82-வது பட்டமளிப்பு விழா நாளை காலை (25-ந் தேதி) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகங்களின் வேந்தரும் தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 322 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் 45 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குகிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், மத்திய தீர்ப்பாயத்தின் தலைவருமான நரசிம்ம ரெட்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பல்கலைக் கழகத்தில் நேரடியாக படித்த 5 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் மற்றும் தொலைதூர கல்வி மூலம் படித்த 63 ஆயிரத்து 187 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.

    அங்கு பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்கள்-பதக்கங்கள் வழங்குகிறார். நிகழ்ச்சியை முடித்து விட்டு சிதம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணியளவில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

    கவர்னரின் வருகையையொட்டி சிதம்பரத்தில் ரெயில், பஸ் நிலையம், மேம்பாலம், பல்கலைக்கழக வளாகம், நடராஜர் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    பெண்ணாடம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டியது. வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் நள்ளிரவில் உடைந்தது. #Rain #Flood
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, பெண்ணாடம், திட்டக்குடி போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டியது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெண்ணாடம் அருகே சமுத்திரசோழபுரம் கிராமத்தில் வெள்ளாறு செல்கிறது.

    இந்த வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் கோட்டைகாடு கிராமத்தை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சி, ஆதானகுறிச்சி, முதுக்குளம், பாசிக்குளம் மற்றும் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்பட 60 கிராம மக்கள் சென்று வந்தனர். இருசக்கர வாகனங்களிலும் சென்று வந்தனர்.

    கடந்த 3 நாட்களாக பெண்ணாடம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஆனை வாரி ஓடை, உப்புஓடை ஆகிய ஓடைகளில் இருந்து மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வெள்ளாற்றில் கலந்தது. இதனால் வெள்ளாற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி தரைப்பாலம் நள்ளிரவு 12 மணியளவில் அடித்து செல்லப்பட்டது.

    வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மேலும் உடைந்தது.

    தரைப்பாலம் உடைந்ததால் 60 கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உடைந்த தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்பு உடைந்த தரைப் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    பெண்ணாடத்தில் வீட்டின் சுவர் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது வீடு மழையில் நனைந்து இருந்தது. இதன் காரணமாக அவரது வீட்டின் சுவர் நேற்று மாலை இடிந்து விழுந்தது.

    இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #Rain #Flood


    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் புதிய வீடு கட்டினார்.

    23.1.2017 அன்று அந்த வீட்டுக்கு 13 வயது சிறுமியை அழைத்துவந்து பாலியல் தொல்லை செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் அவரது தாய், தந்தையை கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டினார். பின்னர் 3 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கர நாராயணனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அப்போது சங்கரநாராயணனை குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இதைகேட்டதும் சங்கர நாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    தண்டனை பெற்ற சங்கரநாராயணனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கரநாராயணனை சந்தித்து பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இது தொடர்பாக சங்கரநாராயணனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதிபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீர்ப்பைகேட்டு சங்கரநாராயணன் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அரசு வக்கீல் செல்வப்பிரியா கூறும்போது, பாலியல் தொல்லை வழக்கில் சங்கர நாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குற்றவாளிக்கு நீதிபதி தீர்ப்பு கூறியது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.  #CuddaloreCourt

    கடலூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவதிலும் முதன்மையான ஏரியாக விளங்குகிறது.

    கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர் மழை இல்லாததாலும், வடவாறு வழியாக அதிக தண்ணீர் வராததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் 44 அடியாக நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு ஓடைகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வருகிறது.

    நேற்று ஏரியின் நீர்மட்டம் 45.55 அடியாக இருந்தது. இன்று அது சற்று அதிகரித்து 45.80 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாதோப்பில் உள்ள வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சென்னைக்கு தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 71 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாய பாசனத்துக்கு 34 மதகுகள் வழியாக 80 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. #VeeranamLake
    திருக்கோவிலூர் அருகே பெண்ணை கடத்தி கட்டாய தாலிகட்டி கொடுமைபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அப்பனந்தல் பில்ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் சசிகலா (வயது 17) ஆவார். இவரை அதே ஊரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடத்திச்சென்று, கட்டாய தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார்.

    மேலும் சசிகலாவை திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பி கொடுமைபடுத்தியதுடன், பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கிவரச் சொல்லியும் கொடுமைபடுத்தியிருக்கின்றார். அத்துடன் ஜானகிராமனின் தந்தை திருவேங்கடம், தாய் சந்திரா, தம்பி சீத்தாராமன் ஆகியோரும் சேர்ந்து சசிகலாவை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வேதனை அடைந்த சசிகலா தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமதி, ஏட்டு கோகிலா ஆகியோர் விரைந்து சென்று ஜானகிராமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். ஜானகிராமனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் ஜானகி ராமனின் பெற்றோர் திருவேங்கடம், சந்திரா, தம்பி சீத்தா ராமன் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்பாதிபாளையங் கோட்டையை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ரம்யா( வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். ரம்யா தனது மாமியாருடன் மேல்பாதி பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். இந்த நிலையில் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக மாமியாரிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் மாமியார் மற்றும் பெற்றோர் பல இடங்களில் ரம்யாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து ரம்யாவின் தாய் கலா சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகிறார். #tamilnews
    விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியதாக 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் ஆலடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அபோது அப்பகுதி வழியாகச் சென்ற 5 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அனுமதியின்றி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து டி.கோபுராபுரத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (30), ஜெயகுமார்(26), ராசு(30), தனவேல் (38), ஜெயகிருஷ்ணன் (30) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து பண்ருட்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நேற்று மாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் அந்த மொபட்டை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அதில் 152 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த கோவிந்தன் (வயது 44), அவரது மகன் வெங்கடேசன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரிந்தது.

    உடனே 2 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய கோவிந்தன், அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×