என் மலர்tooltip icon

    கடலூர்

    நெய்வேலியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 26-வது வட்டம் பாய்லர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு கணேசன் வெளியூருக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மளிகை பொருட்கள் உள்பட பல பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கணேசன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் வெளியூரில் இருந்து நெய்வேலிக்கு வந்தார். கடைக்கு சென்று கணேசன் பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளைபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன மளிகை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

    பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் கணேசன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பேரூர்மதுராகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சேற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது குறித்து அவர்கள் சோழத்தரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

    அதில் அந்த வாலிபரின் முதுகு மற்றும் உடலின் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபர் அணிந்திருந்த உடைகள் மற்றும் வேறு ஏதாவது பொருள் கிடக்கிறதா? என்று சம்பவ இடத்தை சுற்றிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தின் அருகே சட்டை மற்றும் கைலி ஒன்று கிடந்ததை பார்த்தனர். சட்டை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. கைலியின் அருகே கிடந்த ஒரு பேப்பரில் மொபைல் நம்பர் எழுதி இருந்தது.

    ஆனால் அதில் கடைசி 2 இலக்க நம்பர் இல்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நம்பரை தொலை தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து ஏதாவது விவரம் கிடைக்குமா என்று போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

    வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்தை சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரை மர்ம மனிதர்கள் அடித்து கொலை செய்து உடலை சேற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சந்தேகபடும்படியாக கிராமத்தில் யாராவது நடமாடினார்களா? என்று பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது குமாரகுடி குளத்து மேடு. இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

    அவர்கள் குளத்துமேட்டு பகுதியில் ஓலை கொட்டகை அமைத்து அதில் அய்யப்பசாமி படத்தை வைத்து பூஜை நடத்தி வந்தனர். நேற்று மாலை அங்கு கன்னி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பூஜை மற்றும் பஜனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் போன்றவை வழங்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீடுகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் மயங்கி விழுந்த விஜயகாந்த் (33), துரை (44), விஷால் (21), தமயந்தி (22), ராம்கி (28) உள்பட 40 பேரை 4 ஆம்புலன்சுகளில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமராட்சி பகுதியில் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பிச்சென்ற அவரது தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    குமராட்சி அருகே கீழபருத்திக்குடியில் ருத்திரபசுதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் 2 பேர், கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினர்.

    இதேபோல் ஒற்றை பாளையம் மாரியம்மன் கோவில், குலுந்தா அப்பன் ஆகிய கோவில்களிலும் பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலில் இருந்த பணத்தை 2 பேரும் திருடினர். மேலும் வெள்ளூர் முனீஸ்வரர் கோவில் பூட்டையும் உடைத்த அவர்கள், உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை திருடினர். அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    இதை பார்த்ததும் 2 பேரும் பணத்தை திருடிவிட்டு, தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றனர். இது குறித்து கிராம மக்கள், குமராட்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் குமராட்சி-புளியங்குடி சாலையில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், அரியலூர் மாவட்டம் சலுப்பை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(வயது 30) என்பதும், தப்பிச்சென்றவர் அவரது தம்பி அருண்குமார் என்பதும், இருவரும் சேர்ந்து 4 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும், அந்த பணத்துடன் அருண்குமார் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகளை போலீசார் கைது செய்தனர். அருண்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போலி ஏடிஎம் கார்டு கொடுத்து ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் சம்பவத்தன்று தனது ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுக்க நெல்லிக்குப்பம் கடைத்தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் முருகேசன் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணையும் சொல்லி ரூ.2 ஆயிரம் எடுத்து கொடுக்கும்படி கேட்டார்.

    அதன்படி அந்த வாலிபரும் 2 ஆயிரம் ரூபாயை எடுத்து தந்துள்ளார். பின்பு அந்த வாலிபர் முருகேசனிடம் ஏ.டி.எம். கார்டை வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முருகேசன் பணம் எடுப்பதுக்கு மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். கார்டை உபயோகப்படுத்த முடியவில்லை. இதனால் முருகேசன் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று ஏ.டி.எம். கார்டை அதிகாரியிடம் காண்பித்தார். அப்போது வங்கி அதிகாரி சோதனை செய்ததில் அந்த ஏ.டி.எம். கார்டு போலியானது என கூறியுள்ளார்.

    இந்த தகவல் அறிந்த முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். வங்கி கணக்கை பார்த்தபோது முருகேசனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பணம் கடைகளில் நகை மற்றும் பொருட்களை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து முருகேசன் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் புகார் செய்தார். அதன்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மனிதரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அந்த மர்ம மனிதரை பிடித்தனர். பின்னர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் வேலூரை சேர்ந்த அருண்குமார் என்பது தெரிய வந்தது. பின்னர் ஏ.டி.எம். கார்டு வைத்து என்னென்ன செய்தார்? என்பது குறித்தும், மேலும் இதுபோன்ற வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேல் ஆதனூரில் நடந்த மனுநீதி நாள் முகாமில் சப்-கலெக்டர் பிரசாந்த் 475 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அருகே உள்ள மேல்ஆதனூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் சத்யன் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.

    இதில் முதியோர் மற்றும் திருமண உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 600-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றில் 475 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து சப்-கலெக்டர் பிரசாந்த், 475 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 8 லட்சத்து 55 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ரத்னாவதி, கால்நடை உதவி மருத்துவர் மைதிலி, உதவி வேளாண் அலுவலர் கணேஷ்பாலன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் எழில்வளவன் ஆகியோர் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர்.

    முகாமையொட்டி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் தொழுதூர் சீனிவாசன், திட்டக்குடி மேற்கு வேல்முருகன், பெண்ணாடம் மோகன்தாஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் துரைராஜ், செந்தில், ராசு, சுகாதார ஆய்வாளர்கள் பிரபு, உதவி வேளாண் அலுவலர்கள் வில்வேந்திரன், மேகநாதன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் திட்டக்குடி கிழக்கு வருவாய் ஆய்வாளர் தேவநாதன் நன்றி கூறினார். 
    பண்ருட்டி அருகே கேபிள் டி.வி.ஆபரேட்டரை தாக்கிய லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அருள். கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவர் கடந்த 2012 டிச.17-ந் தேதி அன்று அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த இதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தாமரைக்கண்ணன் (வயது 30). இவர் தனது வீட்டில் கேபிள் டி.வி சரியாக தெரியவில்லை என கூறி அருளை திட்டி, இரும்பு பைப்பால் தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அருள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் அருள் கொடுத்த புகாரின்பேரில் லாரி டிரைவர் தாமரைக்கண்ணனை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த பண்ருட்டி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கணேஷ் லாரி டிரைவர் தாமரைக்கண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3750 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பு வழக்கறிஞராக தேவசுந்தரி ஆஜராகி வாதாடினர்.
    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்றம் செய்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் குமரய்யா. இவர் விழுப்புரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இவரை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளார். 

    சென்னையில் இன்ஸ்பெக்டராக பணி புரியும் மலர்விழி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிதம்பரம் அருகே காரில் கடத்தப்பட்ட 1680 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    புதுவையில் இருந்து சிதம்பரம் வழியாக தஞ்சாவூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் சிதம்பரம் அருகே வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் 35 அட்டைபெட்டிகள் இருந்தனர். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அதனை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 1,680 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதனைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சையை சேர்ந்த அறிவழகன்(27), புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன்(25) என்பதும் தெரியவந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ஸ்ரீமுஷ்ணம் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38) தொழிலாளி. இவரது மனைவி சரளா(32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ஆறுமுகம் தனது மனைவியுடன் வடக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.

    குழந்தை இல்லாத விரக்தியில் ஆறுமுகம் தனது மனைவி சரளாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆறுமுகம் ஆத்திரம் அடைந்து சரளாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் சரளா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
    கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 46.60 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் இன்று 46.70 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். வீராணம் ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்கின்றது. இதனால் கீழணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று 1,350 கனஅடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் மூலமும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.60 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இன்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. நேற்று விவசாய பாசனத்துக்கு 230 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அது 200 கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேலும் வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் உயராமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்த்து கொள்வர். ஆனால் தற்போது நீர்மட்டம் 46 அடியை தாண்டியுள்ளது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கஜா புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின் போது தேவையான மழை இல்லாததால் தற்போது ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை உள்ளது என்பதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் வீராணம் ஏரியில் தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

    47 அடிக்கு மேல் தண்ணீர் வந்து விட்டால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்படும். கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். வீராணம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றார். #VeeranamLake
    நெய்வேலி அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த தெற்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகள் காயத்ரி (வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்து நெய்வேலியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் நெய்வேலிக்கு வரவில்லை.

    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காயத்ரி படித்து வந்த கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர் நெய்வேலிக்கு செல்வதாக எங்களிடம் கூறி சென்றார் என்றனர். உடனே மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இதுகுறித்து காயத்ரியின் தந்தை சிவராமன் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனாள் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
    ×