என் மலர்
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவரது மனைவி சரளா(30) இவர்களுக்கு திருமாணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு பிறகு ஆறுமுகம் தனது மனைவியுடன் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த பாளையங்கோட்டை வடக்குபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரளாவிற்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதன்பிறகு அவர் கர்ப்பம் ஆகவில்லை.
இதனால் ஆறுமுகம் சரளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக் கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தரையில் கிடந்த இரும்பு பைப்பால் சரளாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சரளாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சரளா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோழத்தரம் போலீசில் சரளாவின் தாய் சாரதாம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சோழத்தரம் போலீசார் ஆறுமுகம் மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த மேலப்பாளையம் இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 40). கார் டிரைவர்.
இவர் தனது நண்பரான அன்பழகன் என்பவரின் மகனுக்காக வேலை சம்பந்தமாக திருவள்ளுவர் மாவட்டம் கொரட்டூர் பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவரிடம் பேசினார்.
அதற்கு நாராயணமூர்த்தி, முஸ்தபாவிடம் தான் வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் கேட்டார். அதற்கு முஸ்தபா சம்மதித்து நாராயணமூர்த்தியிடம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி பணம் கொடுத்தார். மீதமுள்ள 12 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினர். ஆனால் நாராயணமூர்த்தி வேலைவாங்கி தரவில்லை, பணமும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முஸ்தபா புகார் செய்தார். இதையொட்டி நாராயணமூர்த்தி மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். #tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி விளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் நேற்று பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பின்னர் அவர் அங்குள்ள வார்டு மேலாளர் அறைக்கு சென்று அங்கு பணியில் இருந்த முரளி என்பவரிடம் தனக்கு காது கேட்கும் கருவி வழங்க வேண்டும் எனகூறி ரகளை செய்தார். அவரை பணி செய்யவிடமால் தடுத்தார்.
அப்போது சுதாகர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.மேலும் அவர்அங்கு நின்ற நோயாளிகளிடமும் வாக்குவாதம் செய்து ரகளை செய்தார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முரளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரகளை செய்த சுதாகரை தேடி வருகிறார்கள். #tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எனதிரி மங்கலம் கிராமத்தில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளபடுவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதாகவும் உடனடியாக மணல் குவாரியை மூட கோரி அந்த பகுதி பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில்நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், அரசு உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம், அவரது வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அதன் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை எனில் தலைமை செயலகம் மற்றும் முதல்வர் பழனிசாமி வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அதன் பின்பும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதி மன்றத்தில் சிறந்த நீதிபதியின் பார்வைக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்படும் என்றார்.
மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட பலர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரி(20). கடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த நிலையில் பார்த்தீபனுக்கும் செல்வகுமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவரம் செல்வகுமாரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
பார்த்தீபனுக்கு தெரிய வந்தது. அவர் மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவு பார்த்தீபன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது காதலன் தற்கொலை செய்து கொண்டது பற்றி தகவல் அறிந்த செல்வ குமாரி மிகுந்த மனவேதனை அடைந்தார்.
வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
வீட்டில் இருந்தவர்கள் செல்வகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி:
கடலூரில் இருந்து நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று விருத்தாசலம் புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை பஸ்நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று வேகமாக வந்தது.
அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் அந்த பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதியது. பயணிகளின் நிழற்குடை இடிந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கமலா(வயது 35), சுந்தரமூர்த்தி(52), ராஜேந்திரன்(55), விஜயா(42) உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் படுகாய மடைந்த 19 பேரை மீட்டு குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பண்ருட்டி, டிச.6-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்காக காத்திருந்தார்.
இந்தநிலையில் பார்த் தீபனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிர மாக காதலித்து வந்தனர்.
இந்தவிவரம் மாணவியின் பெற் றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாணவிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விவரம் பார்த் தீபனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு அவர் திடீரென்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பார்த்தீபன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுப் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். * * * பார்த்தீபன்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை வடக்கு பாளையம் பொட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவரது மனைவி பழனியம்மாள் (37). இவர்களுக்கு காயத்ரி செல்வி என்ற மகள் உள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் தங்கி படித்து வருகிறார்.
மாரியப்பன் அவரது வீட்டுக்கு அருகில் குடோன் ஒன்று அமைத்து மிக்சர் உள்பட பல்வேறு தின்பண்டங்களை தயாரித்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை மாரியப்பன் வியாபாரம் தொடர்பாக மதுரைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மகளை பார்ப்பதற்காக பழனியம்மாள் உளுந்தூர்பேட்டைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டினார். ஆனால் கதவில் இருந்த சாவியை எடுக்க மறந்து சென்று விட்டார். பின்னர் வெளிகேட்டை பூட்டி விட்டு புறப்பட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் மாரியப்பன் வீட்டின் மெயின் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதனை தொடர்ந்து வீட்டின் முன்பக்க கதவில் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது.
இது குறித்து பழனியம்மாள் தனது கணவர் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஊர் திரும்பினார். மேலும் இது தொடர்பாக பழனியம்மாள் சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு பின்புறம் உள்ள வயல்வெளி வழியாக சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அருள்நிதி. இவர் வக்கீலாக உள்ளார். கடந்த 2010- 2011-ம் ஆண்டுகளில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அதற்காக ரூ.12 ஆயிரத்து 830 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வக்கீல் அருள்நிதி ரூ.30 மட்டும் செலுத்திவிட்டு ரூ.12 ஆயிரத்து 830 செலுத்தியதாக ரசீதை திருத்தம் செய்துள்ளார். இதனை சட்டசபை சார்பு செயலாளர் கண்டறிந்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சென்னை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ரசீதை திருத்தம் செய்த வக்கீல் அருள் நிதிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வார்டில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 564 பேர் உள்நோயாளிகளாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 260 ஆக குறைந்துள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 65 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 3,845 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டு 3,800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு 2,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை 37 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் இறப்பு குறைந்துள்ளது, பன்றி காய்ச்சல் இறப்பு அதிகரித்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க கூடுதலாக கண்காணிக்க வேண்டியது உள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் தான் சவாலாக இருக்கிறது. பாலின விகிதத்தை அதிகரிக்க சட்டம் மற்றும் விழிப்புணர்வு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






