என் மலர்
கடலூர்
விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள பழைய பட்டினம் கிராமத்தில் அவ்வப்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி மற்றும் பல்வேறு பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் தொல்லியல் துறையினர் முகாமிட்டு அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல் (வயது 75) என்ற விவசாயி தன்னுடைய வயலில் நபார்டு திட்டத்தின் கீழ் வாய்க்கால் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
வயலை சுற்றி வரம்பு அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 4 அடி ஆழத்தில் மண் தோண்டியபோது பழங்கால நடராஜர் சிலை மற்றும் 4 முக்காலி, 4 பூஜை மணி, 2 சொம்பு, ஒரு பானை, 2 தாம்பூலத்தட்டு, 2 தீர்த்தக்குடம், 3 சூலம், 2 தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.
இதனைப் பார்த்த அப்துல் ஜலீல் மற்றும் விவசாயிகள் விருத்தாசலம் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய்வாளர் சுமத்ரா, கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் மற்றும் ஆலடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் கிடைத்த சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்களை பார்வையிட்ட தாசில்தார் கவியரசு இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்களாக இருக்கலாம். இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து இது எந்த காலத்தைச் சேர்ந்தது? என கண்டறிந்தால்தான் குறிப்பிட்டு கூற முடியும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இங்கு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து முடித்த பிறகு எங்களிடமே ஒப்படைத்தால் எங்கள் கோவிலில் வைத்து வழிபடுவோம் என தெரிவித்தனர்.
அதற்கு வருவாய்த்துறையினர் தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர். பழங்கால பொருட்கள் மற்றும் சாமி சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.
அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அங்கு திரண்டு வந்து சாமி சிலையை பார்வையிட்டு வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதன்படி ராமர் கோவில் கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், விசுவ இந்த பரிஷத்தும் தீவிரம் காட்டி வருகிறது.
ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா ஏப்ரல் மாதம் ராம நவமி அன்று நடத்த இரு அமைப்புகளும் திட்டமிட்டு உள்ளது. அதோடு நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்பினர் இந்த கோவில் கட்டுவதற்கு உதவ முன் வந்து உள்ளனர்.
அதன்படி கடலூரில் இருந்து இந்து தமிழர் கட்சியினர் ரெயில் மூலம் செங்கல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை கடலூர் திருப்பாபுலியூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அந்த கட்சியினர் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பரணிதரன் முன்னிலையில் 25 ஆயிரம் செங்கல்கள் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்து தமிழர் கட்சியினர் 5 செங்கல்களை எடுத்து அதில் காவி துணி கட்டினர். அந்த செங்கல்களை ரெயில் அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பண்ருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
அ.தி.மு.க. கட்சியில் தற்போது கட்டுப்பாடு இல்லை. மாவட்ட அளவில் உள்ள மேலிட தலைவர்களை தலைமையால் கண்டிக்க முடியவில்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ரூ.660 கோடி லாபம் ஈட்டி உள்ளது.
பொதுதுறை நிறுவனங்கள் தனியாருக்கு இணையாக லாபம் ஈட்ட முடியவில்லை. கடலுர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்குறைய முக்கிய காரணம் நெய்வேலி என்.எல்.சி, நிறுவனம் ஆகும். இதற்குபோதுமான அளவுக்கு திட்டம் எதுவும் என்.எல்.சி.யில் இல்லை. ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செய்யும் அளவு இங்கு எதுவும் செய்யப்படவில்லை.
கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு அதிக முக்கியதுவம் தர வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கூடஎன்.எல்.சி.யில் ஓப்பந்ததொழிலாளர் பிரச்சினை நிறைவேற்ற படவில்லை. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க பட வேண்டும்.
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கடலூர் சிப்காட்டில் செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகள் காணாமல் போய்விட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பதே இல்லை. விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்படவில்லை. கூட்டுறவுதுறை பரிதாபமான தோல்வியை சந்தித்துள்ளது. உரத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளது. 4.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
பல தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூரில்பஞ்சாலைகள் 40 சதவீதம் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. போதுமான நிலக்கரி இருந்தும் இறக்குமதி செய்வதால் அன்னிய செலாவணி இல்லை. தற்போது கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக அளவு மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மணல், ஜல்லி, சிமெண்ட் விலை ஏற்றத்தால் பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டு கழகம் ஆயுள் முடிந்துவிடும் போல் உள்ளது. அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போதை தலைக்கேறிய உடன் வகுப்பறையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். சத்தம்கேட்டு பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் அங்கு வந்தார். அந்த 2 மாணவர்களையும் கண்டித்தார். அப்போது அந்த மாணவர்கள் 2 பேரும் மதுகுடித்திருப்பதை கண்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் பூவராகவமூர்த்தி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த 2 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் 2 பேரையும் 7 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்கள் மழை கொட்டியதால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் கடும் குளிரும், பனி மூட்டமும் அதிகம் காணப்படுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காலை 8 மணி வரை அதிகளவு உள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் ஏற்பட்டுள்ளதால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் அவதிப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் என ஏராளமான பேர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இன்று காலையிலும் ஏராளமான பேர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதில் 3 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள் ஆவார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்ட 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் வடலூர் பஸ்நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு நிர்வாக அதிகாரியாக சக்கரவர்த்தி (வயது 55) பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வடலூர் ஆகும். இவர் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தையும் கவனித்து வருகிறார்.
குறிஞ்சிபாடி அருகே உள்ள தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது உறவினர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவர் பணத்தை மோகன்தாசுக்கு அனுப்பி வடலூர் பகுதியில் நிலங்களை வாங்கும்படி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மோகன்தாஸ் 25 சென்ட் நிலத்தை(5 பிளாட்) வாங்கினார். அதில் வீடுகட்டுவதற்கு அந்த நிலத்தை மறுசீரமைப்பிற்காக வடலூர் பேரூராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பத்திருந்தார்.
அப்போது நிர்வாக அதிகாரி சக்கரவர்த்தி ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தான் நிலத்தை மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார்.
இதை தொடர்ந்து மோகன்தாஸ் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துவருவதாக கூறி வெளியே சென்றார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து கடலூர் லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி மோகன்தாஸ் இன்று வடலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த நிர்வாக அதிகாரி சக்கரவர்த்தியிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஓழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்பின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்மும், மாலா மற்றும் போலீசார் லஞ்சபணம் வாங்கிய சக்கரவர்த்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அப்போது சக்கரவர்த்திக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் டாக்டரை அங்கு அழைத்து வந்தனர். அதன்பின்பு டாக்டர் சக்கரவர்த்திக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை முடிந்தும் அவரை போலீசார் கடலூருக்கு அழைத்து வந்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 45). இவர் ராமநத்தம் சர்வீஸ் சாலையில் வாடகை இடத்தில் மரக்கடை நடத்தி வருகிறார்.
தினமும் இரவில் மரக்கடையில் படுத்து தூங்குவது வழக்கம்.
அதுபோல் நேற்று இரவும் வேலாயுதம் சாப்பிட்டு முடித்துவிட்டு மரக்கடையில் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மனிதர்கள் சிலர் மரக்கடைக்குள் புகுந்தனர். பின்பு அங்கு தூங்கி கொண்டிருந்த வேலாயுதத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
தலை, கழுத்து, முகம், கை போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த வேலாயுதம் கூச்சல்போட்டு அலறினார்.
இதை தொடர்ந்து அந்தகும்பல் அங்கிருந்து தம்பி சென்றுவிட்டது. இன்று காலை மரக்கடைக்கு சென்றவர்கள் ரத்தவெள்ளத்தில் வேலாயுதம் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தர். உடனடியாக அவர்கள் இது குறித்து ராமநத்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். மரக்கடைக்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த வேலாயுதத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ்மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலாயுதத்துக்கும் சிலருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் மரக்கடைக்குள் புகுந்து வேலாயுதத்தை வெட்டியது தெரியவந்தது. அவரை வெட்டிய தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை செல்லும் சாலையில் உள்ளது எல்.என்.புரம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47).
இவர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் டெய்லரிங் கடை வைத்துள்ளார். இங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
சுரேஷின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர். வீட்டின் பூட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரத்துக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்றனர்.
இதை அறிந்த மர்ம மனிதர்கள் சுரேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகளையும் ரூ.2 லட்சம் ரொக்கபணத்தையும் கொள்ளையடித்து கொண்டு சென்று விட்டனர்.
இரவு 7 மணியளவில் சுரேஷ் தனது டெய்லர் கடையில் வேலைபார்க்கும் ஊழியரிடம் வீட்டிற்கு சென்று மின்விளக்கை போட்டு வருமாறு கூறியுள்ளார்.
அதன் பேரில் கடையின் ஊழியர் ஒருவர் சுரேஷ் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கடையின் உரிமையாளர் சுரேசுக்கு வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்து பண்ருட்டி போலீசில் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், ஜவ்வாது உசேன், மாயகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே காஞ்சிபுரம் சென்றிருந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
பீரோவில் சுரேசின் மகளின் திருமணத்திற்காக வைக்கபட்டிருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்தது. அதுபோல் பணமும் கொள்ளை அடிக்கபட்டு இருந்தது. மொத்தம் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு வெளியே ஓடியது. சிறிது தூரம் சென்று நின்று விட்டது. அதுபோல் கடலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர்.
வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரகாலமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெண்ணாடம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
பெண்ணாடம் அருகே உள்ளது வெண்கரும்பூர். இங்குள்ள புதுக்காலனியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கியது.
வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளான இறையூர், முருகன்குடி, கீரனூர், பூவனூர், வெண்கரும்பூர் போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழைபெய்தது.
சுமார் 1 மணிநேரம் மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெண்கரும்பூர் கிராமத்தில் பலத்தமழை பெய்ததால் அங்குள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். பின்பு அவர்கள் விருத்தாசலம் - திட்டக்குடிசாலையில் திடீரென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர். ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து உடனடியாக வடிகால் வசதி அமைக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர்.
அதன் பின்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வீடுகளை சுற்றி தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்விடம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள கோட்லாம்பாக்கத்தில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று உள்ளது.
அந்த கம்யூட்டர் சென்டரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கடலூர் வாக்காளர் பதிவு அலுவலரின் கையொப்பம் போலியாக பதிவு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் அன்பு செல்வனுக்கு புகார் வந்தது.
அதனடிப்படையில் புதுப்பேட்டையில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஷேக் பரீத் என்பவர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நாங்கள் விசாரணை செய்ததில் போலியாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆகையால் இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் போலியாக அலுவலர் கையொப்பமிட்டு போலி வாக்காளர் அடையாள அட்டை பொது மக்களுக்கு வழங்கியது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஷேக் பரீத் என்பவரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் அரசின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை கார்டில் பிரிண்ட் செய்து வழங்கியது தெரியவந்தது. மேலும் போலியாக தயாரித்த கார்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய பிரிண்டர் மெஷீன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஷேக் பரீத்தை (வயது 46) போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளமேடு கிராமத்தை சேர்ந்தவர் உத்தண்டி (வயது 35). இவரது மனைவி ராஜேஸ்வரி (32). இவர்களுக்கு அம்சவல்லி(7), மீனா (5), கனகவள்ளி (3) என்ற 3 குழந்தைகள் இருந்தனர்.
இவர்கள் குடும்பத்துடன் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி கமலம் (59) என்பவரது வீட்டில் தங்கி, விவசாயம் மற்றும் கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக உத்தண்டி, ராஜேஸ்வரி ஆகியோர் வெளியே செல்லாமல் கமலம் வீட்டில் கொத்தடிமைபோல் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரியின் மகள் மீனா திடீரென்று காணாமல் போனாள். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடினர்.
இதற்கிடையே சிறுமி மீனா கொலை செய்யப்பட்டு விருத்தாசலம் அருகே உள்ள முதனையில் உள்ள முந்திரி தோப்பு பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையிலான போலீசார் ராஜேஸ்வரி வேலை பார்த்து வந்த கமலம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனால் போலீசாருக்கு கமலம் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் கமலத்திடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி மீனாவை கொலை செய்து புதைத்து விட்டதாக கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, நானும், எனது மகள் அஞ்சலை (34), மகன் அருள்முருகன் மற்றும் உறவினர் அய்யப்பன் (31) ஆகியோர் சேர்ந்து கொலை செய்யப்பட்ட மீனாவின் உடலை முதனையில் உள்ள முந்திரி தோப்புக்கு கொண்டு சென்று புதைத்தோம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கமலத்தை அழைத்து கொண்டு முந்திரி தோப்புக்கு சென்றனர். அங்கு சிறுமி மீனா உடலை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார்.
அதன் பின்னர் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அங்கு மீனாவின் உடல் இருந்தது. அதனை மீட்டு சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் மீனாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமி மீனாவை கொன்று புதைத்தது தொடர்பாக கமலம், அவரது மகள் அஞ்சலை, உறவினர் அய்யப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அருள்முருகன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கைதான கமலம் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
எனது வீட்டில் உத்தண்டி, அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். எனது வீட்டின் மாடியில் மணிலா காய வைத்திருந்தேன். அதனை ராஜேஸ்வரியின் மகள் மீனா மிதித்து சேதப்படுத்தினாள். இதில் ஆத்திரம் அடைந்த நான் சிறுமி மீனாவின் தலைமுடியை பிடித்து இழுத்து மாடி சுவர் மீது மோத செய்தேன். இதில் அவளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்தில் அவள் இறந்து விட்டாள்.
இதனையறிந்த நான், மீனாவின் பெற்றோருக்கு தகவல் கூறாமல் மறைக்க முடிவு செய்தேன். அதன் பின்னர் எனது மகன் அருள்முருகனிடம் இந்த தகவலை கூறினேன். அதனை தொடர்ந்து எனது மகள் அஞ்சலை, உறவினர் அய்யப்பன் ஆகியோருடன் மீனாவின் உடலை காரில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் முந்திரி தோப்புக்கு கொண்டு சென்றோம்.
அங்கு குழி தோண்டி அந்த உடலை புதைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டுக்கு வந்துவிட்டோம். ஆனால், போலீசார் துப்பு துலக்கி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கமலம், அஞ்சலை, அய்யப்பன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






