search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டு இருந்த காட்சி.
    X
    நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டு இருந்த காட்சி.

    பண்ருட்டியில் டெய்லர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டெய்லர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை செல்லும் சாலையில் உள்ளது எல்.என்.புரம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47).

    இவர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் டெய்லரிங் கடை வைத்துள்ளார். இங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    சுரேஷின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர். வீட்டின் பூட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரத்துக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்றனர்.

    இதை அறிந்த மர்ம மனிதர்கள் சுரேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகளையும் ரூ.2 லட்சம் ரொக்கபணத்தையும் கொள்ளையடித்து கொண்டு சென்று விட்டனர்.

    இரவு 7 மணியளவில் சுரேஷ் தனது டெய்லர் கடையில் வேலைபார்க்கும் ஊழியரிடம் வீட்டிற்கு சென்று மின்விளக்கை போட்டு வருமாறு கூறியுள்ளார்.

    அதன் பேரில் கடையின் ஊழியர் ஒருவர் சுரேஷ் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கடையின் உரிமையாளர் சுரேசுக்கு வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்து பண்ருட்டி போலீசில் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், ஜவ்வாது உசேன், மாயகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே காஞ்சிபுரம் சென்றிருந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

    பீரோவில் சுரேசின் மகளின் திருமணத்திற்காக வைக்கபட்டிருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்தது. அதுபோல் பணமும் கொள்ளை அடிக்கபட்டு இருந்தது. மொத்தம் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.

    இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு வெளியே ஓடியது. சிறிது தூரம் சென்று நின்று விட்டது. அதுபோல் கடலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×