என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய முறையிலேயே தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
    சிதம்பரம்:

    கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சிற்றம்பல மேடையில் ஏறி சாமியை தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    தற்போது அரசு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் சிற்றம்பலமேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்த தீட்சிதர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

    இதேபோல பெண் ஒருவர் தந்த புகாரின்பேரில் 20 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது.

    இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய முறையிலேயே தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    பண்ருட்டி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே பூங்குணம் அண்ணா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது45). விதவை கூலித்தொழிலாளியான இவரது கூரை வீட்டிற்குள் அடிக்கடி பாம்புகள் வந்துபோவதால் இரவு மட்டும் அருகில் உள்ள இவரது மகள், மருமகன் வீட்டிற்கு சென்று படுத்துக் கொள்வது வழக்கம்.

    அதேபோல நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது மருமகன் வீட்டில் படுக்கச் சென்றார். அப்போது திடீரென்று இவரது கூரை வீடு தீ பிடித்தது.

    தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் போலீசார் கேசவ பெருமாள்சாமி, வேல்முருகன் ஆகியோர் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் அக்கம்பக்கம் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    வீட்டில் இருந்த பீரோ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது பீரோவில் இருந்த ரூ.25,000, பணம், 4 பவுன் நகை எரிந்து சேதமானது கூறப்படுகிறது. இதுபற்றி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர் சாலையில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடம் வழியாக போலீஸ் நிலையங்களுக்கு சென்று வர வழி அமைக்க முடியுமா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி போலீஸ் லைனில் போலீஸ் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையம் உள்ளது. ஒதுக்கு புறமாகஉள்ள இங்கு எளிதில் சென்று வருவதற்கு தனி வழிபாதை கேட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார்சிவா.கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார். அவருடன் கிராம நிர்வாகஅதிகாரி, நகர நில அளவையர் ஆகியோர் சென்றனர்.

    கடலூர் சாலையில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடம் வழியாக போலீஸ் நிலையங்களுக்கு சென்று வர வழி அமைக்க முடியுமா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    கடலூர் சாலையில் உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடத்தில் தோட்ட கலை துறை சார்பில் உழவர் சந்தை திறக்க முடிவு செய்துள்ளதால் அந்த இடத்தை வழிப்பாதையாக பயன்படுத்தும் போது இந்த வழிப்பாதை அதற்கு இடையூறாக இருக்குமா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    காட்டுமன்னார் கோவில் அருகே திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காட்டுமன்னார் கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி புலியடி தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். கேபிள் டி.வி. ஆப்ப ரேட்டர். இவரது மகள் வித்யா (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

    வேலாயுதத்திடம் நேரில் வந்து பேசிய பிரகாஷ் தானும், வித்யாவும் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கேட்டார். முதலில் தயங்கிய வேலாயுதம் பின்னர் சம்மதித்தார். ஆனால் பிரகாசின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பிரகாஷ் திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.

    இந்த தகவலை அறிந்த வித்யா கடந்த 24-ந் தேதி தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விரைந்து வந்து வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் வித்யாவின் காதலன் பிரகாசை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வித்யாவின் அண்ணன் கார்த்தி கேயன் கூறுகையில், எனது தங்கையின் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய பிரகாஷ் தனது தந்தை திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. வேறொரு வசதியான இடத்தில் எனக்கு பெண் பார்க்கின்றனர். எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று கூறியுள்ளார். இதில் மனமுடைந்த வித்யா தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே குருங்குடி கிராமத்தை சேர்ந்த இருதரப்பினரும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத் தில் பரபரப்பு நிலவியது.
    கடலூர் அருகே சாலையில் மயங்கி விழுந்தவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் டாக்டர் பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் தொலைந்த வேதனையில் காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). தனியார் சர்க்கரை ஆலையில் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணனின் மோட்டார் சைக்கிள் திடீரென்று தொலைந்துவிட்டது. பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனால் சரவணன் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொழிலில் பங்குதாரராக்குவதாக கூறி கடலூர் முதியவரிடம் ரூ. 25 லட்சம் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 2018- ம் ஆண்டு அறிமுகமான புதுச்சேரியை சேர்ந்த ராஜ் மற்றும் சாய்பிரியா ஆகிய இருவரும் தாங்கள் சொந்தமாக கோவையில் கால் டாக்சி தொழில் செய்து வருவதாகவும், தற்போது கோயம்புத்தூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கால் டாக்ஸி காண்ட்ராக்ட் எடுக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் அதிக லாபம் கிடைக்கும் கூறி அதில் பங்குதாரராக சேரும்படி கேட்டனர்.

    பின்னர் இவர்கள் 2 பேரும் தற்போது தங்களிடம் பணம் இல்லை. மொத்த பணத்தையும் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பெயரிலேயே காண்ட்ராக்ட் எடுப்பதாக கூறியுள்ளார்கள். அதனை நம்பி ஆறுமுகம், 2 பேர் தெரிவித்த 15 வங்கி கணக்குகளில் ரூ. 25 லட்சத்து 80 ஆயிரத்து 560 வரை பணம் செலுத்தியுள்ளார்.

    ஆனால் ஆறுமுகம் பெயரில் காண்ட்ராக்ட் எடுக்காமல் 2 பேர் பெயரில் கான்ட்ராக்ட் எடுத்து எந்தவிதமான பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்கள் .

    இதனை அறிந்த ஆறுமுகம் 2 பேரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது , ஆறுமுகத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ஆறுமுகம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. . மேலும் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் அறிவுறுத்தலின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் கவுரி ஆகியோர் புதுச்சேரியில் வசித்து வந்த ராஜ் (வயது 39), சாய்பிரியா வயது (37) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரும் மேலும் பல நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பெருமளவில் பணத்தை பெற்றுகொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன்கூறுகையில் பொதுமக்கள் யாரை பற்றியும் முழுமையாக விசாரிக்காமலும் , அவர்களது நிரந்தர முகவரி தெரியாமலும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் , மேலும் அரசு வேலைக்கோ இதர தனியார் வேலைக்கோ முன் பின் தெரியாத பெயர் நபரிடம் அறிமுகமாகி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அனைத்து அரசு வேலைகளும் முறைப்படி வழிகாட்டுதலுடன் நேரடியாகவோ தேர்வு மூலமாசுவோ தேர்ந்தெடுக்கப்படுவதால் இனிவரும் காலங்களில் இதுபோல் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறி உள்ளார்.
    கடலூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு கீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ஜெயா (வயது 50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் குமரன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று ஜெயா வீடு அருகே கரும்பு சோகையை வடிவேல் குமரன் வீசினார். இதன் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் ஜெயா காயமடைந்தார்.

    இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வடிவேல் குமரன், ஜெயா, ஜனார்த்தனன், தனசுந்தரி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தேர்வு எழுத சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே இல்லாங்கூர் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாசம். அவரது மனைவி சுகிதா (வயது 27) இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ 3 ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த கணவர் அருள்பிரகாசம் சுகிதாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் அருள்பிரகாசம் புகார் செய்தார். புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுகிதா என்ன ஆனார்? எங்கு சென்றார் ? யாரேனும் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளியில் அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 100 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்றும் வழக்கம்போல் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்டதும், மாணவர்கள் தங்களது வகுப்பறைக்கு சென்றனர். அப்போது சில மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 29 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், சிவஞானசுந்தரம் ஆகியோர் பள்ளிக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அதில் மாணவர்களுக்கு வழங்கியது அழுகிய முட்டை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் தனுசு மகன் நந்தகுமார் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 21.8.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரிடம், சாப்பாடு கேட்டுள்ளார். உடனே அந்த சிறுமி வீட்டுக்குள் சென்று தனது தாயிடம் கேட்டு, நந்தகுமாருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அதனை வாங்கிய நந்தகுமார், சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதுபற்றி சிறுமி, தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பாக கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சமூக பாதுகாப்பு துறையின் சமூகநல நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவகாமி ஆஜராகி வாதாடினார்.
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக 23.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட 2022 -ந் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின் படி வருகிற 2022 பிப்ரவரி 23-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி.தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக 23.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

    அதனை தொடர்ந்து இத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 02.03.2022 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகளாக மதியம் 02.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04142290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

    ×