என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் காதலி தற்கொலை- போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை
காட்டுமன்னார் கோவில் அருகே திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார் கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி புலியடி தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். கேபிள் டி.வி. ஆப்ப ரேட்டர். இவரது மகள் வித்யா (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
வேலாயுதத்திடம் நேரில் வந்து பேசிய பிரகாஷ் தானும், வித்யாவும் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கேட்டார். முதலில் தயங்கிய வேலாயுதம் பின்னர் சம்மதித்தார். ஆனால் பிரகாசின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பிரகாஷ் திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.
இந்த தகவலை அறிந்த வித்யா கடந்த 24-ந் தேதி தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விரைந்து வந்து வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் வித்யாவின் காதலன் பிரகாசை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வித்யாவின் அண்ணன் கார்த்தி கேயன் கூறுகையில், எனது தங்கையின் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய பிரகாஷ் தனது தந்தை திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. வேறொரு வசதியான இடத்தில் எனக்கு பெண் பார்க்கின்றனர். எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று கூறியுள்ளார். இதில் மனமுடைந்த வித்யா தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே குருங்குடி கிராமத்தை சேர்ந்த இருதரப்பினரும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத் தில் பரபரப்பு நிலவியது.
Next Story






