என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வராத மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவி நேற்று வழக்கம்போல் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார். ஆனால் மாலை வீட்டிற்கு பள்ளி மாணவி வரவில்லை.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வராத மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    கடலூர் அருகே தொண்டமாநத்தம் நிலப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே தொண்டமாநத்தம் நிலப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள நிலப்பகுதிக்கு ரகசியமாக சென்று சோதனை செய்தனர். அப்போது நிலப்பகுதியில் சாராயம் ஊறல் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் 80 லிட்டர் சாராயம் ஊறலை கடலூர் முதுநகர் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகீச நகர் பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமான நபரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் தடைசெய்யப்பட்ட கஞ்சா சுமார் ஒரு கிலோ 100 கிராம் மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றி அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் நகர போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாகீச நகர் பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமான நபரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் தடைசெய்யப்பட்ட கஞ்சா சுமார் ஒரு கிலோ 100 கிராம் மறைத்து வைத்திருந்ததைக் கைப்பற்றி அந்த நபரை கைது செய்தனர்.

    விசாரணையில் சிதம்பரம் தில்லை நகரை சேர்ந்த மணிவேல் (27) என்பது தெரியவந்தது. இதேபோல் கிள்ளை மீனவர் காலனி காந்தி சிலை அருகே தெற்கு தெருவை சேர்ந்த கிருபாநிதி (24) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 44 அடியாக இருந்த வீராணம் ஏரி நீர்மட்டம் இன்று காலை 42.09 அடியாக உள்ளது. ஏரிக்கு 818 கனஅடி நீர் வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த ஏரிக்கு மேட்டூர்அணை, பருவகாலங்களில் பெய்யும் மழையின் மூலம் தண்ணீர்வரத்து அதிகரிக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் 3 முறை ஏரி நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து நெல் அறுவடை முடிந்துள்ளது. தற்போது உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    என்றாலும் வீராணம் ஏரியின் கடைமடை பகுதியான வல்லம்படுகை, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் சாகுபடி அறுவடை செய்யப்படாமல் உள்ளது. பச்சைபசேல் என்று பயிர்கள் உள்ளதால் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி தற்போது கடைமடை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 44 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 42.09 அடியாக உள்ளது. ஏரிக்கு 818 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 63 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 தங்க கலசங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் காசிக்கு இணையான கோவில் என கருதப்படுவதால் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதால் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று இரவு பூஜைகள் முடிந்து கோவில் கதவு சாத்தப்பட்டது.

    நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் சுவர்ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் விருத்தாம்பிகை அம்மன் சன்னதிக்கு சென்ற மர்ம நபர்கள் கோபுரத்தின் உச்சியில் இருந்த 3 தங்க கலசங்களை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த நிர்வாகிகள் தங்க கோபுர கலசங்கள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கோவிலில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் குப்புசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பப்பட்டது.
    அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ, மாவட்ட கழக செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார், முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏக்கள் அருள், சிவசுப்பிரமணியன், கலைச்செல்வன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மீனவர் அணி தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், இளைஞரணி துணை செயலாளர் சி கே எஸ் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய குழுத்தலைவர் தெய்வ பக்கிரி, மாவட்ட இணை செயலாளர் உமா மகேஸ்வரி பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஜி.எம்.வினோத், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, தகவல் தொழில் நுட்ப அணி வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர்கள் செந்தில்குமார், சந்திரகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

    கடலூர் அருகே வாகன சோதனையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்தநிலையில் சிதம்பரம், கிள்ளை மற்றும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த நபர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

    அப்போது 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா இருந்தன. கிள்ளை சேர்ந்த கிருபாநிதி (வயது 24), சிதம்பரம் சேர்ந்த மாணிக்கவேல் (வயது 28), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சேர்ந்தவர் முனுசாமி வயது 26 ஆகியோர் தெரிய வந்தது.

    மேலும் இவர்களிடமிருந்து 3.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் ஆகும்.மேலும் அந்தந்த போலீஸ் நிலையத்தில் பிடித்த நபர்கள் மற்றும் கஞ்சாவை, டெல்டா பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணை கடத்தியது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆனத்தூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் படையப்பா (வயது 25). அந்த பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை திருமண செய்வதாக கூறி ஆசை காட்டினார். பின்னர் அந்த மைனர் பெண்ணை படையப்பா கடத்தி சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை.

    இது பற்றி பெற்றோர் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் மனுவில் திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்ற படையப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ராஜராம் ஆகியோர் வழக்குபதிவு செய்து படையப்பாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் படையப்பா புதுவை பகுதியில் உள்ள செங்கல் சூளையில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மைனர் பெண்ணுடன் படையப்பாவை மீட்டனர். மீட்கப்பட்ட மைனர் பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். படையப்பா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதானார்.
    மந்தாரக்குப்பம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மந்தாரக்குப்பம்:

    மந்தாரக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று காலை வீணங்கேணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், வடலூர் பார்வதி புரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்து (வயது 22), காமராஜர் நகர் பாலு மகன் அர்ச்சுனன் என்கிற அஸ்வின் (21), பெரியாக்குறிச்சி ராஜா மகன் சிவப்பிரகாசம் (23), வடக்கு சேப்பளாநத்தம் கணேசன் மகன் செந்தமிழ்வளவன் (21) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    இந்த ஆண்டு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ளது திருவதிகை வீரட்டானேசுவரர்கோவில். இது மிகவும்பிரசித்தி பெற்றது. இங்குஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெறுவதுவழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சாமி, அம்பாள், லிங்கோத்பவர், மற்றும் சரக்கொன்றை நாதர், பஞ்சமுகலிங்கம் உள்ளிட்ட சிவலிங்கங்களுக்கு ஆறுகால சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசே‌ஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.

    மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு வயலின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகத்தினர், சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள், ஆன்மீக பேரவையினர் செய்து வருகின்றனர்.
    பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை ஆட்டோ டிரைவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமைஆசிரியராக ராணி என்பவர் இருந்து வருகிறார். இந்த பள்ளியில் 4 பெண் ஆசிரியர்கள் உள்பட 12 பேர் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

    இங்கு தலைமை ஆசிரியருக்கும், சக ஆசிரியர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை ஆட்டோ டிரைவர் ஒருவர் தாக்கி உள்ளார்.

    அதனை தொடர்ந்து சக ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆட்டோ டிரைவரால் தாக்கப்பட்ட ஆசிரியர் தமிழ்வேந்தன் மருத்துவ விடுப்பில் சென்றார். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி கவுசர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களை அழைத்து விசாரணை நடத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்ககூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    அதனை தொடர்ந்து கல்வி வளர்ச்சி குழு தலைவர்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆகியோருடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
    ×