என் மலர்
கடலூர்
- கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைநகர்:
கடலூர் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் (கடலூர் மாவட்டம்) நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
- இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
- ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள். அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்த அந்த நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ..ஆ" என எழுதி தங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.
- அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.
- தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில்.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய பொதுதீட்சிதர்களுக்கு உரிமை அளித்துள்ளது. இதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
இருந்தாலும் இந்த கோவிலின் சொத்துக்கள் 1976-ம் ஆண்டிலிருந்து தனி தாசில்தாரால் பராமரித்து நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிலங்கள் பொதுதீட்சிதர்களிடம் கிடையாது.
2006-ல் உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, இந்த கோவில் நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கரிலிருந்து கோவிலுக்கு வரும் நிதி சொற்பமாக உள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார். அரசு கோவில் நிலங்களில் இருந்து வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் கொடுக்கிறது.
தற்போது திடீரென அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.
1976- ஆண்டிலிருந்து நிலங்கள் உங்களிடம் உள்ளது. எப்படி விற்க முடியும். இடையில் 2006-லிருந்து 2014 வரை அரசாங்கத்திடம் இருந்தது. 2006-ல் கருணாநிதிஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பொதுதீட்சிதர்களிடம் இருந்து, அரசாங்கம் எடுத்துக்கொண்டது.
2014 உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் மீண்டும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் வந்தது. ஆனால் இன்னமும் நிலங்கள் தனி தாசில்தார் பொறுப்பில் உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி விற்க முடியும். இதற்கான ஆதாரத்துடன் கோவில் வக்கீல் சந்திரசேகர் மற்றும் தீட்சிதர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் நிலங்கள் எங்களிடம் உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அளித்துள்ளார். 22,600 கட்டடங்கள், 33,600 மனைக்கட்டுகள் உள்ளது என கூறுகிறார்.
இவ்வளவு கோவில் சொத்துக்களை வைத்துக் கொண்டு தற்போதைய நிலவரப்படி வரி வசூலிக்க வேண்டும். அப்படியென்றால் வருடத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வர வேண்டும். ஆனால் வசூலிக்கவில்லை.
7-6-2021 சுயமோட்டோ வழக்கில் நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் வரி வசூலிக்கவில்லை என தீர்ப்பு அளித்துள்ளனர். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எப்படியாவது பொய்யை சொல்லி நடராஜர் கோவிலை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கமாகும்.
அரசு கோவிலை அபகரிக்க சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டுகிறோம். நடராஜர் கோவிலில் தரிசன கட்டணம் கிடையாது. அபிஷேக கட்டணம் கிடையாது. உண்டியல் கிடையாது. அரசு தனி தாசில்தாரிடம் உள்ள நிலங்களை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில். தரிசனம் கட்டணம் இல்லாத கோவில்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீட்சிதர்கள் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதை வீடியோ எடுத்த விசிக முகாம் செயலாளர் இளையராஜா
- காயமடைந்த இளையராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் நேற்றிரவு 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா (40) தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
விசிக நிர்வாகி வீடியோ எடுத்ததற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவை அடித்து அவரது செல்போனை பறித்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளையராஜாவின் செல்போனை பறித்து அவரை தீட்சிதர்கள் மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தைக்கு தேவையான சிகிச்சைகள் செய்யப்பட்டு கடலூரில் உள்ள குழந்தை சிசு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்த பெண் குழந்தையை விட்டு சென்றது யார்? என விசாரணை செய்து வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் செஞ்சி காலனி மாதா கோவில் தெருவில் பால்ராஜ் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் இன்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை அங்கு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் 108 வாகனத்துடன் அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தேவையான சிகிச்சைகள் செய்யப்பட்டு கடலூரில் உள்ள குழந்தை சிசு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்த பெண் குழந்தையை விட்டு சென்றது யார்? என விசாரணை செய்து வருகின்றனர்.
- மாநாடு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
- கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெறுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தினை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
மாநாடு பந்தல் அமைக்க இரும்பு பைப்புகள் ஏற்றிவந்த லாரி ,மாநாடு திடலில் சேற்றி சிக்கி நின்றது.பின்னர் லாரியை கிரேன் கொண்டு அப்புறப்படுத்தினர்.
மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்களுக்கு உணவு,குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .ஆண்கள் பெண்களுக்கு 250 கழிவறை வசதி,வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும்45 ஏக்கர் அளவில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநாடு மேடை அமைக்கும் பணி பிரத்யேகமாக சினிமா கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மேடை அமைக்கும் பணியை கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர் . மாநாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் உள்ள கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
- டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்,
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ரமேஷ் (வயது 35). தொழிலாளி.
இவருக்கு வசந்தி என்ற மனைவியும், மணிகண்டன் (17), ரகு (15) என்ற 2 மகன்களும் உள்ளனர். ரமேஷ் வழக்கம் போல் நேற்று காலை விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரமேஷ் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் மாலை 6 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரமேசுக்கு ஆஸ்பத்திரியில் நர்சுகள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம், எனவே, ரமேசின் மரணத்துக்கு அங்கிருந்த டாக்டர் சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு ஆஸ்பத்திரியை பா.ம.க. மற்றும் ரமேசின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டாக்டர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ரமேஷின் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று விருத்தாசலம் நகர பா.ம.க. சார்பில் விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள தென்கோட்டை வீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இ.கே.சுரேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரமேசுக்கு உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்களை கண்டித்தும், டாக்டர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக விருத்தாசலம்-சேலம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் வழியாக காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவில் கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் முன்னதாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி டிரைவர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்தனர். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சென்னை தி.நகரை சேர்ந்த நவஜோதி (வயது64), சுஜாதா (15), கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஈஸ்வரி (64) காரைக்காலை சேர்ந்த கார்த்திக் (34), மாதவரத்தை சேர்ந்த ஆண்டாள் (60), புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வம் (64) உள்பட 12 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
- இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் முறையான பராமரிப்பின்றி கடந்த 30 ஆண்டுகளாக ஏரி மற்றும் பாசன வாய்க்கால் தூர்ந்து போய் காணப்பட்டது.
மேலும் பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் பருவமழை காலங்களில் தொடர் கனமழை பெய்தால் கூட பாசன வாய்க்கால் வழியாக ஏரிக்கு முறையாக தண்ணீர் வரத்து இன்றி முழு கொள்ளளவை எட்டாமலேயே இருந்தது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகமும் பாசன வாய்க்காலை தூர்வார போதிய நிதி இல்லை என கைவிரித்து விட்டதாக தெரிகிறது. இதனால் கிராம மக்கள், தூர்ந்து போன பாசன வாய்க்காலை மீட்டெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஆதிவராகநல்லூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் ரூ.8 லட்சம் நிதி திரட்டினர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆதிவராகநல்லூர் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூர்வார தொடங்கினர். இதில் தற்போது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்காலை தூர்வாரி, இருகரைகளிலும் மண் கொட்டி பலப்படுத்தி உள்ளனர். மேலும் இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது. கிராம மக்களே ஒன்று சேர்ந்து நிதிதிரட்டி பாசன வாய்க்காலை தூர்வாரியதை அறிந்த சுற்று வட்டார பகுதி மக்கள் ஆதிவராகநல்லூர் கிராம மக்களை பாராட்டினர்.
- வகுப்பறை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தன.
- காலணிகள் அணிந்து கொண்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி பள்ளியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே காலணிகளை கழட்டி விட்டு சென்றதை கண்டார்.
இதை பார்த்த மேயர் சுந்தரி ராஜா, மாணவர்களுக்கு ஏன் பாகுபாடு என்ற கேள்வி எழுப்பி அனைவரும் காலணிகள் அணிந்து கொண்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி மேயர் அனைத்து வகுப்பறைகளுக்கும் மிதியடி வழங்கினார்.
பின்னர் வகுப்பறையை ஆய்வு செய்யும்போது, வகுப்பறை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தன. இதனை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது சுத்தம் செய்ய ஊழியர்கள் வருவதற்கு காலதாமதமானதால் உடனடியாக தானே துடைப்பத்தை கையில் எடுத்துக்கொண்டு வகுப்பறையை நானே சுத்தம் செய்து விட்டு செல்கிறேன் என்று வகுப்பறை முழுவதும் பெருக்கி தூய்மை படுத்தினார்.
மேலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் அறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைப் பார்த்த மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் செய்வதறியாமல் திகைத்து அதிர்ச்சியடைந்து நின்றனர் .
இனி வருங்காலங்களில் மாநகராட்சி பள்ளியை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது மாநகர நல அலுவலர் எழில் மதனா, சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, கவுன்சிலர்கள் சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது.
- போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற தகவல் தவறு.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதயாவது:-
பல்வேறு கோவில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் அவமதிக்கப்படுவதாகவும், அவர்களை தூய்மைபடுத்தும் பணியை மேற்கொள்ளவைப்பதும், அதை ஊக்குவிப்பதும் கண்டிக்கதக்கது. நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 அர்ச்சகர்களை அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் அவமரியாதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளும் பரம்பரை அர்ச்சர்களுடன் இணைந்து அவமானப்படுத்தப்படுவதாக கூறுகின்றனர்.
அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்குவந்தது. இத்திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர், பெரியாரின் நெஞ்சில் தைக்கப்பட்ட முள் நீக்கப்பட்டது என்றார். ஆனால் நடைமுறை வேறு. நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் கருவறையில் அர்ச்சனை செய்யலாம் என அறிவித்து இருக்கலாம். இது குறித்த புகார்மீது நடவடிக்கை இல்லை. இதற்கு காரணம் பரம்பரை அர்ச்சகரை கண்டு அஞ்சுவதுதான். இதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியுள்ளது தி.மு.க. அரசு.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படுமா என்ற கேள்விக்கு உள்துறை மந்திரி இது குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென்று கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் வரவேற்கதக்கது.
தமிழகத்தில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குடிகாரரை உருவாக்கிய நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. 1972-ம் ஆண்டு முந்தைய தலைமுறை மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. அடுத்து வந்த 52 ஆண்டுகளில் சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் மது ஆறாக ஓடி 3 தலைமுறைகளை பாதித்துள்ளது. கஞ்சா வணிகம் குறித்த அனைத்து உண்மைகளும் அரசுக்கு தெரியும் என்றாலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற தகவல் தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் பேர் தவிர அனைவரும் உடந்தை. இந்த அதிகாரிகளுக்கு இந்த உத்யோகம் தேவையா?
டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 போட்டித்தேர்வில் 6,244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் காலி பணியிடங்கள் 480 உயர்த்தி இருப்பது போதுமானது இல்லை. தமிழகத்தில் 6 லட்சம் பணியிடங்களில் 2 லட்சம் பணியிடங்கள் குருப் 4 வகையை சேர்ந்தவையாகும்.
எனவே குருப் 4 பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்தவேண்டும். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ .2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் அத்தொகை வழங்கப்படவில்லை. இதை வழங்காமல் தாமதிப்பது நியாயமல்ல.
மகளிர் உரிமை தொகை வழங்க இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் நகர்புறப்பகுதிகளில் 6 சதவீத சொத்துவரி உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. மேலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சொத்துவரி உயர்த்தப்பட்டால் பா.ம.க. மாபெரும் போராட்டத்தை நடத்தும்.
ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ள சிக்கல்கள், சந்தேகங்களை மத்திய அரசு போக்கவேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது குறித்து பரிசீலிக்கவேண்டும். திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு ஓமந்தூரார் பெயரை வைக்கவேண்டும்.
இதனை தொடர்ந்து கவுரவத்தலைவர் ஜி.கே .மணி கூறும் போது, தமிழகத்தில் மானாவரி பயிர் வறட்சியில் காய்ந்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி 100 டி .எம். சி. தண்ணீர் வீணாய் கடலில் கலந்தது. ஒரு சொட்டு தண்ணீர் வீணாகாமல் தடுப்பணை கட்டவேண்டும் என்றார். அப்போது வன்னியர் சங்கத்தலைவர் பு .தா .அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- போலீசாருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது.
- மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நெய்வேலி:
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
என்.எல்.சி. நிர்வாகம் அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கும் 1 லட்சம் முதல் 4 லட்சம் வழங்குவதாகவும் ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் சொசைட்டி மற்றும் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் ஊதியமான ரூபாய் 20 ஆயிரம் போனஸ் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகம் வழங்குகின்றனர்.
இந்நிலையில் என்.எல்.சி.நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க கோரி என்.எல்.சி.ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி தாஸ் தலைமையில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து பேரணியாக என்.எல்.சி.சுரங்க நிர்வாக அலுவலகம் (பீல்டு ஆபீஸ்) நோக்கி சென்றவர்களை போலீசார் வட்டம் 26 தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் எதிரில் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து சத்தியாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக என்.எல்.சி.நிர்வாகம் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
நேற்று இரவு விடிய, விடிய போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை இன்று மதியம் 1 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு என்.எல்.சி. நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னிட்டு நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.






