என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரம் நகரில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதனர்.
    • போலீசார் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் அரசு மதுபானக்கடை மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் நகர சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், லெட்சுமிராமன் மற்றும் தனிப்படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சிதம்பரம் ெரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்த கவுஸ்பாஷா (வயது 50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கள்ளத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 75 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே சிதம்பரம் கள்ளுகடைசந்தைச் சேர்ந்த தியாகராஜன் (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களையும், அதே பகுதியில் சிதம்பரம் எம்.கே. தோட்டம் ராஜா (38) என்பவரை கைது செய்து அவரிடமிருத்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிதம்பரம் நகர போலீசார் மொத்தம் 188 மதுப்பாட்டில் களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி உடனடியாக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார் .
    • சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் புகார் பெற்று போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த கடலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சிறுமியிடம் படிப்பதற்கு புத்தகம் எடுத்து வர வேண்டும் என தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதனையடுத்து சிறுமி தனது புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாலிபர் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது திடீரென்று வாலிபர், 14 வயது சிறுமியை அறையில் வலுகட்டாயமாக கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சத்தம் போடாமல் இருக்க சிறுமியை தாக்கி உள்ளார்.

    பின்னர் சிறுமியை அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டு நடந்ததை தனது பாட்டியிடம் தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி உடனடியாக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார் . தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் புகார் பெற்று போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • அன்பரசன் பேஸ்புக்கில் பதிவிடும் பதிவுகள் சந்திரகலாவிற்கு பிடிக்காததால், அவருடனான நட்பை முறித்துக்கொண்டார்.
    • ஆத்திரமடைந்த அன்பரசன் சந்திரகலாவை தொடர்பு கொள்ள முயற்சித்தார். இதில் சந்திரகலா போனை எடுக்கவில்லை.

    சிதம்பரம்:

    சிதம்பரம் காரியபெருமாள் வீதியில் வசிப்பவர் இளவரசன். இவரது மனைவி சந்திரகலா (வயது 36). சென்னையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் தனியே வசித்து வருகிறார். இவருக்கு நாகை மாவட்டம் கள்ளிமேடு பகுதி அன்பரசன் (33) என்பவருடன் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.

    இந்நிலையில் அன்பரசன் பேஸ்புக்கில் பதிவிடும் பதிவுகள் சந்திரகலாவிற்கு பிடிக்காததால், அவருடனான நட்பை முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அன்பரசன் சந்திரகலாவை தொடர்பு கொள்ள முயற்சித்தார். இதில் சந்திரகலா போனை எடுக்கவில்லை.

    இதனை தொடர்ந்து அன்பரசன் நாகையில் இருந்து சிதம்பரம் வந்தார். சந்திரகலாவை சந்தித்து பேஸ்புக் பதிவுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அன்பரசன் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து சந்திரகலா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி அன்பரசன் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும், அன்பரசனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தீவளூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக தனியார் சிமெண்ட் நிறுவனம் நிலத்தை விலைக்கு வாங்கி வருகிறது.

    கடலூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் வாசுதேவன் தலைமையில் மார்க்சிஸ்I கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலையில் தீவளூர் பகுதி விவசாயிகள் கலெக்டர் பாலசுப்பிர மணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீவளூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குடும்பத்தினர் உழவு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக தனியார் சிமெண்ட் நிறுவனம் நிலத்தை விலைக்கு வாங்கி வருகிறது. விலைக்கு வாங்கும் போது, எப்போது சிமெண்ட் ஆலை அமைக்க வருகிறோமோ அதுவரை நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

    ஆனால் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விலைக்கு வாங்கிய நிலங்களில் உள்ள வரப்புகளை எல்லாம் களைத்து பயிர் செய்வதை தடுத்து விட்டனர். இதனால் உழவு தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் தனது நிறுவனத்தை தீவளூரில் தொடங்கும் வரை நாங்கள் விவசாய தொழிலை தொடர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வீச்சு அரிவாளுடன் 2 வாலிபர்கள் நின்றுகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து வந்தனர்.

    போலீசார் 2 வாலிபர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த வீச்சு அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ருட்டி திருவதிகை பன்னீர்செல்வம் (வயது 24), சிம்பு (19) ஆகியோர் தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    • புவனகிரியில் இருந்து தலைக்குணத்திற்கு சென்ற அரசு பஸ் சாலையில் விழுந்த இளவரசன் மீது ஏறி இறங்கியது.
    • புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புவனகிரி:

    புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 29). படித்து முடித்து வேலை தேடி வருகிறார். இவர் நேற்று மாலை புவனகிரியில் இருந்து விருத்தாசலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆதிவராகநத்தம் சுடுகாடு அருகில் சென்ற போது எதிர் திசையில் ஜோதி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது நிலைதடு மாறிய ஜோதியின் மோட்டார் சைக்கிள் இளவரசன் மீது மோதியது. இதில் இளவரசன் சாலையில் விழுந்தார். ஜோதி சாலையின் ஒரத்தில் தூக்கி வீசப்பட்டார். அதே சாலையில் புவனகிரியில் இருந்து தலைக்குணத்திற்கு சென்ற அரசு பஸ் சாலையில் விழுந்த இளவரசன் மீது ஏறி இறங்கியது.

    இதில் பலத்த காய மடைந்த இளவரசன் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விவசாயி காசிலிங்கம் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது விவசாயி காசிலிங்கம் காலில் ஏதோ கடித்தது.

    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையான்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது காலில் ஏதோ கடித்தது.

    இதில் நிலத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாம்பு கடித்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பண்ருட்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • போலீசார் நேற்று இரவு முழுவதும் காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளசாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பண்ருட்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் பணருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் திருவாமூர் அய்யனார் கோவில் தெரு சரவணன் (வயது 40) எனதிரிமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு லிங்கநாதன் (49), காமாட்சி பேட்டை டேங்க் தெரு, கலியன் (70), வேலன்குப்பம் வடக்குதெரு விக்ரமன் (25), புதுப்பாளையம் கோவில் தெரு சதாசிவம் (55), கானஞ்சாவடி தெற்கு தெரு ஏழுமலை (36) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இவர்களை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது.
    • கடலூரில் 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

    கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதன் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    • போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் பதுக்கல் மற்றும் சாராயம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த 30 பேர்மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது.
    • புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது. போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் ஒரு சில மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரத்தில் அரசு நிபந்தனைக்குட்பட்டு மீன்பிடித்து வந்தனர். தற்போது வழக்கத்தை விட கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் எந்த வித அசம்பாவதமும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வேகாகொல்லை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.
    • முத்தாண்டி குப்பத்திலிருந்து கொல்லுகாரன்குட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வேகாகொல்லை அய்யனார் கோயில் தெரு மணிகண்டன் (வயது 35) இவர் சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு முத்தாண்டி குப்பத்திலிருந்து கொல்லுகாரன்குட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கீழக்குப்பம் மின்வாரிய அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 108 மூலம் பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனார்.

    மேலும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனளின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×