என் மலர்
கடலூர்
- வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலியானார்.
- முருகன் கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார்.
கடலூர்:
வேப்பூர் அடுத்த மங்களூர் காட்டுக்கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- குடித்து விட்டு ஊர் சுற்றி வந்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
- கொலை குறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மகன் விநாயகம் (28). இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய விநாயகத்துடன் சண்டை ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தனது மகன் விநாயகம் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விநாயகம் மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்ய தயார் செய்து கொண்டிருந்த நிலையில் ஆவினங்குடி போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மகனை கொலை செய்து நாடகமாடிய ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுகுறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.
- நடராஜன் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
- ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கடன் தவணை கட்டாத வரை தாக்கிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). ஆசாரி வேலை செய்யும் இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். வாகனம் வாங்கியதற் கான தவணை தொகையை சரியாக கட்டி முடித்ததால் டி.வி.எஸ்., கிரிடிட் கம்பெனி மூலம் பர்சனல் லோன் ரூ.50 ஆயிரம் நடராஜனுக்கு வழங்கினர்.
இதற்கான மாத தவணை தொகையை சரியாக கட்டவில்லை. நேற்று முன்தினம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டி.வி.எஸ்., பைனான்ஸ் வசூல் ஊழியர் விக்னேஷ், ந-டராஜனிடம் தவணை தொகை கேட்டார். இதில் விக்னேஷ்க்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விக்னேஷ் நடராஜனை தாக்கினார். இதனால் காயமடைந்த நடராஜன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது.
- மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 21). அதே பகுதியில் 4 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது. இது தொடர்பாக முரளிதரன் கிரிக்கெட் விளையாடிய நபர்களிடம் கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இந்த மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விக்கி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் முதுநகரில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சுந்தர் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 40). மீனவர். இவருக்கு திருமணமாகி 9 வருடமாகிறது. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் மன உளைச்சலில் இருந்து வந்தவர் வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார். தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தர் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது.
- அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம்.
கடலூர்:
புதுவை மாநிலம் பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது. இத்தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு 50 வயது இருக்கலாம் என்றும், அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இதற்கு தமிழ்நாடு கப்பற்படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன் தலைமை தாங்கினார்.
- தினசரி காலை கொடி அசைத்த பின்னரே தங்கள் பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என அதிகாரி தெரிவித்தார்.
கடலூர்:
என்.சி.சி. மாணவர்கள் கடலில் உள்ள அனைத்து சூழ்நிலைகளை புரிந்து கொள்ள ஏதுவாகவும், அதனால் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கடற்கரைகளை சுத்தப்படுத்துதல், இரத்ததான முகாம் போன்ற முகாம்கள், பேரணிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு கப்பற்படை பிரிவு என்.சி.சி. மாணவர்களுக்கு கடலில் நீந்தவும், பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்ளவும் பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கப்பற்படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன் தலைமை தாங்கினார். இதையடுத்து என்.சி.சி. மாணவர்களுக்கு முதற்கட்டமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 120 ஆண் மற்றும் பெண் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் பாய்மர கப்பல் சாகச பயணம் மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் சிறந்து விளங்கும் 60 மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதையடுத்து அவர்கள் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் அழைத்து செல்லப்படுவார்கள். தொடர்ந்து காரைக்காலில் இருந்து மீண்டும் பாண்டி ச்சேரிக்கு கடலில் பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின் போது கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் போன்ற கடற்கரை யோரங்களில் நின்று தினமும் காலையில் பயிற்சி அளிக்கப்ப டுவதுடன் முக்கிய அதிகாரிகள் மூலம் தினசரி காலை கொடி அசைத்த பின்னரே தங்கள் பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என அதிகாரி தெரிவித்தார்..
- வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த திருவதி கையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து உற்சவர்களான சாமி-அம்பாள், தனி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து விசேஷ மலர் அலங்காரத்தில் பஞ்ச மூர்த்தி சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது.
இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், ஹரகர மகா தேவா, ஓம் நமச்சிவாய, சிவாயநம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர். கொடியேற்றத்தில் சுப்பராய செட்டியார் பெண்கள் பள்ளி செயலாளர் மாதவன், சபாபதி, வானவில் ராஜா, கணேசன் மற்றும் கவுன்சிலர்கள், கோவில் நிர்வாகத்தினர், உற்சவ தாரர்கள், உபயதாரர்கள், கட்டளைதார்கள், கிராம முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், இந்துசமய ஆன்மீக பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் ஜூன் 1-ந்தேதி வியாழகிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அன்று இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவதிகை பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் எழுந்தருள உள்ளார். பின்னர் தேரில் வீற்றிருந்த திரிபுரசம்ஹாரமூர்த்தி, 3 அரக்கர்களையும் அவர்க ளது 3 கோட்டைகளையும் எரித்து சம்ஹாரம் நிகழ்த்தும் ஐதீக பெருவிழா நடக்கவுள்ளது.
- பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
- பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கடலூர்:
கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி 230 கோடி செலவில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலையின் இரு புற மும் நெடுஞ்சாலை த்துறையினர் சரியான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமலும், ஒரு சிலருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வரை வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் கடந்த 2 மாதமாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தியும், சரியான முறையில் அளவீடு பணிகளில் சர்வேயர் ஈடுபடவில்லை என கூறி தொடர்ந்து அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று திடீரென்று கீழ்ப்பட்டாம்பாக்கம் ஸ்டேட் வங்கி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை பார்த்த ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்கதைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணி நடைபெற்று முடியவில்லை. ஆனால் இந்த பணியை தொடங்குவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று பணியில் ஈடுபட்ட வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் சட்டவிரோதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என புகார் தெரிவிப்போம் என தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் முரண்பாடான பல்வேறு தகவல்கள் தெரிவித்ததால் கடும் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது.
- முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது.
கடலூர்:
விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் இன்று விருத்தாசலம் பைபாஸ் சாலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது. விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாலுகாக்களில் இருந்து 31 பள்ளிகளைச் சேர்ந்த 220 பள்ளி வாகனங்கள் சோதனை தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி, சி.சி.டி.வி. உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.
மேலும், பள்ளி வாகன டிரைவர்கள் வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கும்போதும் ஏறும் போதும் சரியாக கவனித்து வாகனங்களை இயக்குமாறும் அறிவுரை களை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். பள்ளி குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளும் விதத்தில் முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் பால முருகன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது.
- ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை( 25- ந்தேதி) பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்ததோடு, எல்லைக்கட்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முக்கிய விழாவான பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- பிடிப்பட்ட 2 பேரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
- வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் நேற்று ஒருவர் இறந்து விட்டார். இவரது உடலை அடக்கம் செய்வதற்கு இறுதி சடங்கு நடந்தது. இதில் பங்கேற்க வந்தவர்களில் 6 வாலிபர்கள் போதையில் இருந்துள்ளனர்.
இறுதி சடங்கு நடந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்தனர். இதனை அங்கிருந்த ஆறுமுகம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவரை தாக்கினர். இதைதடுக்க வந்த ஆறுமுகத்தின் மகன் சீனிவாசனையும் அவர்கள் தாக்கினர். தொடர்ந்து அப்பகுதியினர் திரண்டு வந்த நிலையில் 6 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, இரவு 11 மணிக்கு அந்த வாலிபர்கள் மீண்டும் புளியங்குடி பகுதிக்கு பட்டாக்கத்திகளுடன் வந்து, அந்த பகுதியினரை ஆபாசமாக திட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த அப்பாஸ் (வயது 38) என்பவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில் 2 பேர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட 2 பேரையும் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். கத்திவெட்டில் படுகாயமடைந்த அப்பாசை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பிடிப்பட்ட 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






