என் மலர்
கடலூர்
- குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளனர்.
- பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது.
இதனையடுத்து பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 24-ந்தேதி வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சை யின் போது குடலையும், கர்ப்பபையினையும் சேர்த்து தையல் போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பத்மாவதி குடும்பத்தார் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து பத்மாவதி குடும்பத்தார் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்மாவது, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஆஸ்ப த்திரியின் டாக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாணையின் படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவர் சுதாவேணுகோபால், ரமேஷ், ரவி மற்றும் பிரச் சாரக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை வளத்தை போற்றி பாது காக்கும் இந்த நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில், சர்வதேச போதை ப்பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், நெய்வேலி பள்ளிகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மற்றும் என்.எல்.சி. ஐ.எல். கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியை, நிறுவன மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மனித வளத்துறை இயக்குனருன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார், கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், மத்திய நூலகத்தி லிருந்து தொடங்கிய இப்பேரணி, மகாத்மா காந்தி சிலை அருகில் நிறை வடைந்தது. பேரணியின் போது, மாண வர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
- ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது.
- சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார்.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் ஊராட்சி சிறுவத்தூர் திடீர்குப்பம் சாலை முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது. இதில் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் விஜயதேவி தேவராசு, அங்கு செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வீக சிகாமணி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். என்ஜினியர் ஜெய்சங்கர், அரசு ஒப்பந்ததாரர் ராமதாஸ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ் ணன், அங்கு செட்டிபாளை யம் தி.மு.க. ஊராட்சி செய லாளர் சிற்றரசு, ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
- போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடலூர்:
சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.கே. பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாக இயக்குநர் திருநாவுக்கரசு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் கஸ்தூரி துணை முதல்வர் பிரித்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதனுடன் தமிழாசிரியை பானுமதி போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியை ரேணுகா பயிற்சியில் 6ம் வகுப்பு மாணவன் ஜெய்சரண் போதைப் பொருள் விழிப்புணர்வு உரையை அழகாக எடுத்துக் கூறினார்.
- கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையினர் கடநத 24-ந்தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன், தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கனக சபை மீது பக்தர்கள் இன்று காலை முதல் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- சசிகுமார் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.
- கடலூர் சிறையில் இருந்து கொள்ளை நடந்த நாளில் தான் வெளியில் வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 22-ந்தேதி இரவு இவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை திருடினர். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அதே நாளில் பண்ருட்டி பகுதியில் மேலும், 2 இடங்களில் கொள்ளை நடந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, 3 இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனித்தனியே தனிப்படைகளை அமைத்தார்.
அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரையூர் கிராமத்தில் கொள்ளையடித்த நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நெம்பர்கள், அந்த செல்போனில் இருந்த சிம் கார்டை எடுத்துவிட்டு புதிய சிம் கார்டு போட்டு பயன்படுத்துகின்றனரா, காணாமல் போன கார் எந்தெந்த டோல்கேட்டை கடந்து சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த நேரத்தில் திருட்டு போன கார் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு செல்லும் வழியில், உளுந்தூர் பேட்டை, திருவண்ணாமலை சாலையில் கார் செல்வதாக போலீசாருக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவண்ணாமலைக்கு விரைந்த போலீசார் செல்போன் டவர் மூலம் திருட்டில் ஈடுபட்டவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்தனர். அவர்கள் சிம் கார்டை மாற்றியதை கண்டறிந்து, புதிய நெம்பரின் டவர் எங்குள்ளது என்பதை கண்டறிந்தனர்.உடனடியாக திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு சென்றபோது, திருடு போன காரின் பதிவு எண்ணை திருடர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்ட கொள்ளையர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பினர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டிய போலீசார் கிரிவல பாதையில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்ல முயன்ற போது அவர்களின் காரை முந்தி போலீஸ் ஜிப்பை நிறுத்தி சுற்றி வளைத்தனர்.
காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த பாலாஜி (வயது 26), யுவராஜ் (22) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் கடலூர் சிறையில் இருந்து கொள்ளை நடந்த நாளில் தான் வெளியில் வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இவர்களு டன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்?, கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு வைத்துள்ள னர். வேறு எங்கெங்கு கொள்ளை யடித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கொள்ளையர்கள் சென்ற காரை போலீசாரின் ஜிப் பின் தொடர்ந்து சென்று அவர்களை மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
- மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
- நந்தீஸ்வர மங்களம் வழியாக குறிஞ்சிகுடி, பேரூர் ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு ஏதுவான சாலையாக உள்ளது.
- பள்ளி திறந்து விட்டதால் இந்த சாலையை சரி செய்ய வேண்டும்
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலசக்காடு, பேரூர் ஊராட்சியின் இணைப்பு சாலையாக உள்ள குறிஞ்சிகுடி, பேரூர் சாலை பல ஆண்டு காலமாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த சாலை சேத்தியாதோப்பு- கும்பகோணம் நெடுஞ்சாலையில் இருந்து நந்தீஸ்வர மங்களம் வழியாக குறிஞ்சிகுடி, பேரூர் ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு ஏதுவான சாலையாக உள்ளது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிளும் மற்றும் பள்ளி வாகனங்களும் சிதம்பரம் வலசாக்காடு நகர பஸ், விருத்தாச்சலம் வலசாக்காடு நகர பஸ்கள் வலசாகாடு, குறிஞ்சிகுடி பேரூர் வழியாக தினம் சென்று வருகின்றன. இந்த சாலையானது மிக மோசமான நிலையில் உள்ளன.
இந்த சாலை இருபுறங்கிலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பகல், இரவு நேரங்களில் பொது மக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். பள்ளி திறந்து விட்டதால் இந்த சாலையை சரி செய்தால் பள்ளி மாணவ- மாணவிகள் பயமின்றி சென்று வரவும், பள்ளி வாகனங்கள் மற்றும் நகரப் பஸ்கள் பழுதடையாமல் செல்வதற்கும் பேர் உதவியாக இருக்கும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு குறிஞ்சிகுடி பேரூர் சாலையை சரி செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
- கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் வெங்கனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் விவ சாய நிலம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக மருதமுத்து குத்தகை நிலத்திற்கு செல்ல வில்லை. நேற்று தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநத்தம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். அப்போது கிணற்றில் கிடந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் கால்கள் இரண்டும் கயிறால் கட்டி, கல் ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவரது உடல் கைப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வலை மற்றும் அதன் உள்ளே வைக்கோல், டிஜிட்டல் பேனர் கொண்டும் சுற்றப்பட்டிந்தது.
இதை பார்த்த போலீசார் இந்த வாலிபரை யாரோ கொடுரமாக கொலை செய்து இங்கு வீசி சென்றுள்ளனர் என்று கூறி உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதற்கு போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. இதனால் பிரேத பரிசோதனை முடிந்த பிறகுதான் அவர் யார் ? அவரை எதற்காக இவ்வளவு கொடூரமாக கொலை செய்தார்கள் என்பது குறித்து தெரிய வரும் என்பது போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இறந்த வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சட்டை காலரில் விழுப்புரம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் போலீசார் விழுப்புரத்தில் இதுவரை காணாமல் போன வர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் டிஜிட்டல் பேனரும் விழுப்புரத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். கொடூர மாக கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசி சென்றவர்கள் யார் என்றும், இறந்த வாலிபருக்கும் அவர்க ளுக்கும் முன்விரோத தகராரில் இந்த கொலை நடந்திருக்குமோ என்று கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மாவட்ட தனியார்பஸ் உரிமயாளர்கள் கலந்தாய்வு கூட்டம், கடலூரில் நடைபெற்றது.
- அனுமதிக்கப் பட்ட தடத்தில் மட்டுமே பஸ்களை இயக்கவேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்து குறித்தும், பஸ்களின் மீது பெறப்படும் தொடர் புகார்கள் குறித்தும் கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலு வலர்கள் மற்றும் கடலூர் மாவட்ட தனியார்பஸ் உரிமயாளர்கள் கலந்தாய்வு கூட்டம், கடலூரில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்ததாவது:-
கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் இயக்கம் தொடர் பாக தினந்தோறும் பல்வேறு புகார்கள் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது பெறப்படுகிறது. மேல்பட்டாம் பாக்கம்பஸ் விபத்து டிரைவரின் அஜாக்கிரதையால் நடை பெற்றுள்ளது. எனவே இம்மாவட்டத்தில்பஸ் உரிமையாளர்கள் இனி வருங்காலங்களில் கீழ்கண்ட அறிவுரைகளை தவறாது கடைபிடித்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தி னார். அரசால் நிர்ணயிக்கப் பட்ட வேக வரம்பை மீறி அதிவேகமாக பஸ்களை இயக்ககூடாது. வேக கட்டுப்பாட்டு கருவியை முறையாக பயன்படுத்த வேண்டும். மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அனுமதிக்கப் பட்ட தடத்தில் மட்டுமே பஸ்களை இயக்கவேண்டும். பயணிகளிடம் அனுமதிக் கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிவேகமாகவும், சாலையில் செல்லும் பிற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில்க பஸ்களை இயக்கக்கூடாது. அனுமதிக்கு புறம்பாக காற்று ஒலிப்பான்கள், பல்ஒலிப்பான்கள் பயன் படுத்தக்கூடாது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பயணி களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுத்தங் களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். மேலும் பஸ்கள் இயக்கம் தொடர்பான அனைத்து விதிமுறைகளை யும் கடைபிடித்து வாகனங் களை இயக்க வேண்டும்.
மேற்காணும் அறிவுரை களை தவறாது கடைபிடித்து பஸ்களை இயக்கவேண்டும். இக்கூட்டத்தின் வயிலாக பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்து நர்களுக்கும் முதல் வாய்ப்பு வழங்குவதாகவும் தவறும் பட்சத்தில் அனுமதி சீட்டின் மீதும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமத்தின் மீது மோட்டர் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் அனு மதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவது குறித்து, அவ்வப்போது திடீர் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி மோட்டார் வாக னங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் பஸ்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
- கொலை செய்த நபர்கள் 7-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள்களை சம்பவ இடத்தில் வீசி சென்றனர்.
- மதியழகன் உள்ளிட்டவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தும் மீண்டும் தங்களது ஊருக்கு செல்லவில்லை.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45).
இவரது மனைவி சாந்தி (40). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார்.
இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மதியழகன் அருகில் வந்தனர். அந்த நபர்கள் கையில் வீச்சரிவாளுடன் தன்னை கொலை செய்வதற்கு வருவதை அறிந்த மதியழகன், அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கினார்.
அந்த கும்பல் மதியழகனை துரத்தி சென்று சுற்றி வளைத்தனர். நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்து உருக்குலைந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் வீச்சரிவாளை சொருகிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.
காலை நேரத்தில் நடுரோட்டில் ஒரு கும்பல் மதியழகனை கொலை செய்த சம்பவத்தை பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்துக் கொண்டு தெறித்து ஓடினார்கள். இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
கொலை செய்த நபர்கள் 7-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள்களை சம்பவ இடத்தில் வீசி சென்றனர். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்பவ இடத்தில் இருந்த அனைவரையும் உடனடியாக கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
கொலை செய்யப்பட்ட மதியழகன் மனைவி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவரது மகனுக்கும் தகவல் தெரிந்து அவர்கள் அங்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்த மதியழகன் உடலை பார்த்து கதறி துடித்து அழுதனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் மனைவி சாந்தியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தரப்பும் போட்டியிட்டனர்.
இதில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றார். அப்போது மாசிலாமணி தரப்பினர் மதியழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக தனது மனைவி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் வெற்றி பெற்றாலும் நான் ஊருக்கு சென்றால் எனக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் வாக்கு எண்ணும் மையத்திலேயே காலை முதல் இரவு வரை காத்திருந்தார்.
பின்னர் போலீசார் மதியழகனை பாதுகாப்பாக ஊருக்குள் கொண்டு சென்று இரு தரப்பினரையும் அழைத்து சரியான முறையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இருந்தபோதும் இவர்களுக்குள் தொடர்ந்து விரோதம் இருந்து வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு மாசிலாமணி தம்பி மதிவாணனை கண்டக்காடு பகுதியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தொடர்ந்து படகுகள், வலைகளை எரித்தும், வீடுகள் அடித்தும் நொறுக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதியழகன் உள்ளிட்டவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தும் மீண்டும் தங்களது ஊருக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அனைவரும் தங்களது உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தங்கி வந்தனர் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.
எனவே, தனது தம்பியை கொலை செய்த மதியழகனை மாசிலாமணி தரப்பினர் பழிக்குப்பழி வாங்க கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் நடந்த இடத்திலும், தாழங்குடா கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.






