என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    • கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளி முதல்வரின் இ மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்திருந்தது.

    அதில் கோவையில் உள்ள உங்கள் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோவையில் உள்ள பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவை பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் என்பவர் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தனியார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன.

    உடனடியாக போலீசார் மாணவர்களை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விட்டு சோதனை மேற்கொண்டனர். பள்ளியில் உள்ள கழிப்பறைகளிலும் சோதனை செய்தனர்.

    ஆனால் அங்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்தே வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது.

    இதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இ-மெயில் வந்த முகவரியை வைத்து, அந்த நபர் யார்? என கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலங்கொம்பு அரசு பள்ளியில் 7,8, 9-ம் வகுப்புகளில் படித்து வரும் 9 மாணவிகளுக்கு அந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவிகள் புகார் அளித்தும், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள் அதனை கண்டு கொள்ளாமல், அதற்கு உடந்தையாக இருந்தாகவும் தெரிகிறது.

    இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா அளித்த புகாரின் பேரில் போலீசார் இடைநிலை ஆசிரியர் நடராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் சம்பவம் தெரிந்தும், புகார் அளிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியைகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில் தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடராஜன் ஒரு வாரத்திற்கு முன்பே சஸ்பெண்டு செய்யப்பட்டு விட்டார்.

    அதனை தொடர்ந்தே அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆசிரியர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    • ஆசிரியரின் அட்டூழியத்தை மூடி மறைத்த தலைமை ஆசிரியர்.
    • 3 பேர் மீது நடவடிக்கை? கல்வி அதிகாரிகள் விசாரணை

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    அப்போது அந்த பள்ளியில் 7, 8, 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 9 பேர், தங்களிடம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் நடராஜன் (வயது 54) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த தாகவும் கூறினர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இடைநிலை ஆசிரியர் நடராஜ், பிரச்சனை தெரிந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் மீது சிறுமுகை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பள்ளியில் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் இச்சம்ப வத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடைநிலை ஆசிரியர் நடராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த பிரச்சினை தெரிந்தும், நடவடிக்ைக எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் கைதான ஆசிரியர் நடராஜனின் அட்டூழியத்தை மூடிய மறைத்தது உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    போக்சோ வழக்கில் கைதாகி உள்ள நடராஜன் இதற்கு முன்பாக அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி பள்ளியில் பணியாற்றி வந்ததும், அப்போது அங்கும் இதே போன்று எழுந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறைக்கு சென்று பின்னர் வெளியே வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே கிருஷ்ண கிரியில் பள்ளி ஒன்றில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுப்பாளையத்தில் ஒரு ஆசிரியர் கைதாகி உள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

    • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
    • அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பீளமேடு:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை விமான நிலையத்திலும் விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சிங்கப்பூருக்கு தினமும், சார்ஜாவுக்கு 4 நாட்கள், அபுதாபிக்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டும் இன்றி, பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிளும் கோவை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    விமானத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் முதல் கட்டமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல் கொப்புளங்கள் உளளனவா? என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.

    நேற்று கோவை விமான நிலையத்திற்கு 3 வெளிநாட்டு விமானங்களில் 275 பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் அல்லது அம்மை கண்டறியப்பட்டால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், ஏர்போர்ட் சுகாதார மருத்துவ குழுவினரும் இணைந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகள், பரிசோதனைக்கு பின்பே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அறிகுறிகளளோ, அம்மையோ கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக, விமான நிலைய வளாகத்தில் ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் யானை மடுவு, அட்டுக்கல், குப்போபாளைம், நரசீபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன.

    அவ்வாறு நுழையும் யானைகள், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள், வள்ளியம்மன் கோவில் வீதி அருகே உள்ள ஆர்.வி.எஸ். தோட்டம் பகுதிக்குள் நுழைந்தது.

    இந்த தோட்டத்திற்குள் உள்ள வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார்.

    தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், வீட்டின் அருகே சென்றதும், அங்கிருந்த சிமெண்ட் சீட்டை உடைத்து தூக்கி எறிந்தது. மேலும் வீட்டின் மேற்கூரையை தூக்கி எறிந்து சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்ட, பாண்டியம்மாள் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது 2 யானைகள் வெளியில் நின்றிருந்தன. இதை பார்த்ததும் அச்சத்தில் உறைந்த அவர்கள் சத்தம் எழுப்பினர்.

    இவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், வெளியில் யானை நிற்பதை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டிற்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து அங்கு முகாமிட்டு இருந்த 2 யானைகளையும் வனத்துறையினர் சைரன் எழுப்பி, அங்கிருந்த விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே நின்றது.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 யானைகளில் ஒரு யானை ஆவேசம் அடைந்து, முன்னேறி வந்து, தன்னை விரட்டுபவர்களை துரத்தியது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் யானை அருகில் செல்ல பயந்து, சற்று தூரத்தில் நின்றபடி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்ற யானை, அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. அப்போது அங்குள்ள வெள்ளிங்கிரி என்பவரது வீட்டின் ஜன்னல் கதவை பிடித்து இழுத்து சேதப்படுத்தியதுடன், அருகே இருந்த மின் கம்பத்தையும் இடித்து கீழே தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று, அடிவார பகுதியில் நின்று கொண்டன.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் யானைகள் அடர்ந்த வனத்திற்குள் செல்ல மறுத்து, ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

    யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மின் விளக்குகள் சரியாக எரியாததால் இரவில் வெளியில் வரவும் அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளா மாநிலத்தில் நலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

    கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

    நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள கோவை, மார்ட்டின் நிறுவனம், இந்த சவாலான நேரத்தில் அம்மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    வயநாட்டில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ள மார்ட்டின் நிறுவனம், அதில் ஒரு கோடி ரூபாயை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.

    ஒரு கோடி ரூபாயை, இயற்கை பேரிடர்களின் போது நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட ரோட்டரி சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கியுள்ளதாக மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

    • சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை.

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அழிந்து வந்துள்ளார். அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, சிவராமன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிவராமன் தலைமறைவானார்.

    இந்நிலையில், கோவையில் சிவராமன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது தப்பி ஓடிய அவர், தடுமாறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

    இந்நிலையில், கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை என்றும் போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    பேரூர்:

    கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சம்பவத்தன்று குடி போதையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அங்குள்ள தெருவில் 7 வயது சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தார். அந்த சிறுமிக்கு சாக்லெட் தருகிறேன் என்று கூறி தனது வீட்டுக்கு கூட்டி சென்றார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லை. தொடர்ந்து சிறுமியை படுக்கை அறைக்கு அழைத்து சென்ற செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுமி வீட்டுக்கு சென்று தாயிடம் நடந்த விவரங்களை தெரிவித்து உள்ளார்.

    இதனை கேட்ட பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரின் வீட்டுக்கு திரண்டு சென்றனர். ஊர்மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அவர் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள் பதுங்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வகுமார் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரை சுற்றி வளைத்து பிடித்து பேரூர் போலீஸ் நிலையத்துக்கு கூட்டி சென்றனர்.

    அந்த நேரத்தில் அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது. மேலும் பேரூர் போலீசார் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதில் தயக்கம் காட்டினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் பேரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' என்பது தான் இந்த புத்தகம்.
    • இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

    புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி. ஶ்ரீனிவாசன் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி வி. கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

    கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி ஹாலில் நேற்று நடைபெற்ற விழாவில் பண்ணாரிஅம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் தலைமை உரை ஆற்றினார்.

    அவரை தொடர்ந்து ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி. ஶ்ரீனிவாசன் பேசுகையில் "சத்குரு எத்தனை நாடுகள் சென்றாலும் அவர் கோவையில் இருப்பது கோவை மக்களுக்கான பெரும் ஆசி" என கூறினார்.

    புத்தகம் குறித்து மரபின் மைந்தன் பேசுகையில் " இருண்டிருக்கும் அறையில் நுழைகிற போது கைவிளக்கு வேண்டும். அதுப் போலத்தான் நமக்கு தெரியாத இடத்தில் பயன்தரும் விதமாய் சத்குரு இந்த புத்தகத்தில் மிக துல்லியமான விளக்கங்களை கொடுத்துள்ளார்.

    மேலும் நமக்கு நேரும் சூழலை விடவும், அதை நாம் எதிர்கொள்ளும் விதம் தான் துன்பத்திற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி எப்போது நமக்கும், நமக்கு மிகப் பிடித்த விஷயத்திற்கும் இடையே ஒரு சமநிலையை, விலகுதலை ஏற்படுத்துகிறோமோ அதுவே கர்ம வினையை கட்டுப்படுத்தும் என சத்குரு சொல்கிறார்" என புத்தகத்தின் பல முக்கிய கருத்துக்களை விளக்கி பேசினார்.

    அவரை தொடர்ந்து புத்தகம் குறித்து வழக்கறிஞர் சுமதி பேசுகையில், "மிகவும் தீவிரமான புத்தகம் இது. இதை ஒரு நாள் முழு அமர்வாக பேச வேண்டிய அளவு தீவிரம் வாய்ந்த புத்தகம். நம் வாழ்கையின் மூல வரைப்படத்தை நாமே உருவாக்கியிருக்கிறோம், என்பது தான் இந்த புத்தகத்தின் ஒன்லைனர்.

    இதை இன்னும் எளிமையாக சொன்னால் 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' என்பது தான் இந்த புத்தகம்.

    மேலும் நாம் ஒரு செயலை செய்கிறோம் அது வெற்றியா, தோல்வியா, பிறருக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம் முழு திறனை வெளிப்படுத்துவது ஒன்றே நோக்கமாய் செயல்பட வேண்டும். இது போன்ற நற்கருத்துக்களை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது" என சுவைப்படப் பேசினார்.

    சத்குரு இந்த புத்தகத்தின் மூலம் கர்மா என்றால் என்ன?, நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை, நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரித்து உள்ளார்.

    மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிக்காட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார்.

    "கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.

    ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புத்தக வாசிப்பாளர்களால் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது.

    இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 25-க்கும் அதிகமான உலக மொழிகளில் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.

    உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
    • நாங்கள் பாஜக அணியில் இருந்தபோதுகூட பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என்றார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 சதவீத பணிகளை 3 ஆண்டாக தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் இருந்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது.

    தமிழ் தமிழ் என மூச்சுக்கு 300 முறை ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி வார்த்தை இருக்கிறது. ஸ்டாலின் குடும்பத்துக்கு என்று வந்தால் இந்தி பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.

    கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு அரசு சார்பில் முதலமைச்சர் பங்கேற்றது வேடிக்கையாக உள்ளது.

    கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிக்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் தி.மு.க. நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதன் மூலம் தி.மு.க-பா.ஜ.க. உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்?

    டெல்லி தி.மு.க. தேநீர் விருந்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். ஆனால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை.

    நாங்கள் பா.ஜ.க. அணியில் இருந்தபோதுகூட, பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என தெரிவித்தார்.

    • கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    கோவை:

    மேற்கு வங்க மாநிலத்தில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 17-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு மற்றும் டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

    அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதில் அங்கு பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் டீன் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலையில் நேர்மையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக தமிழ்நாடு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பெண் மருத்துவர் ஒருவரிடம் வடமாநில வாலிபர் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவத்தை குறிப்பிட்டு, மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்களின் பேராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த நோயாளிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

    • சவுக்கு சங்கரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • சவுக்கு சங்கர் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகவில்லை.

    கோவை:

    பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மே மாதம் 3-ந் தேதி கைது செய்தனர்.

    இந்த வழக்கு சம்பந்தமாக சவுக்கு சங்கரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு (பொறுப்பு) சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும் அவர் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சவுக்கு சங்கர் தரப்பில் டெல்லியை சேர்ந்த வக்கீல் மவுலி வெள்ளிமலை ஆஜரானார்.

    ×